சூல் பெருகிப் பொங்கும் மகரந்தம்
விண்மீன் தேடும் இளவேனிற் காலத்தில்
பரவும் வேர்களால் அதிரும் நிலத்தில்
கூடிப் பறக்கின்றன பட்டாம்பூச்சிகள்.
கண்களால் தேனுண்ணும் நோயால்
நள்ளிரவில் ஒளிரும் சிறகுகளில்
பற்றியெறிகிறது காந்தள் காடு.
இலைகள் அதிர்ந்து அலர் தூற்றும் காலையில்
மரங்களில் கூடிக் களித்த கனவுகளின்
தடங்களை அழிப்பதற்காக
கண்ணீருடன் அலைகின்றன.
நிறமாற்றம் கண்டறிந்த கூட்டில்
ஒவ்வொரு கண்ணும் வயிற்றை அறுக்க
தேனுண்ணும் கண்களை
தீயிடம் கொடுத்து விட்டு
குருடாகப் பறக்கும் பட்டாம்பூச்சிகள்
செல்லும் வழியெல்லாம்
கண்களைத் தூவுகின்றன.

- இரா.கவியரசு

Pin It