rain cloudமழை பற்றிய பாடலொன்றை
பாடத்துவங்கினாள்
மழலைக்கு அம்மா..

இடையில் நிறுத்தி
மழையென்பது யாது?
எப்படி இருக்கும்..?

விளக்கத் தெரியாதவளை
நச்சரித்தாள்

அம்மாவுக்கு தெரியாது
அறிவியல் தத்துவம்..

அன்பியல் அறிந்தவள் ஓடிச்சென்று
வெளியில் பார்த்தாள்..
மழையும்
களவுபோயிருந்த்து
கொடியில் காயப்போட்ட ஆடையாய்..
ஆனாலது
ஓர் மழைக்காலம்..

சிறு நாழிகை இடைவெளியில்
கொஞ்சம் உவர்நீர் கைகளிலள்ளி
தெளித்ததில் உண்டானது
தற்காலிக மழையொன்று...

இதோ பார்த்துக்கொள்
'இக்கால மழை'யை
இலக்கணம் வகுத்ததும்
முடிவுக்கு வந்தது
சமாதான உடன்படிக்கை ...

காட்டு வேலைகள் முடித்து
அப்பக்கமாய் கண்டு கடந்ந
உழவனொருவன் மனதுள்
நிச்சயம் வழியும்
பல நீர்வீழ்ச்சிகளின் தொகுப்பு..

புறத்தில்
புன்னகை வடிவத்திற்கே மாறாய்
இன்னும் இருக்கும்
ஓர் புன்னகை

- அயன் கேசவன்

Pin It