மழைவரக்கூடும் என்று
கொடியில் காயும்
ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தேன்

வறண்டு மெழுகிய என்முகத்தை
மடங்கிய துணியின் நூல்களில்
பட்டுத் தொட்டது ஈரம் வழியும் காற்று

பாகற்கொடியின் இலைகளின் மேல்
படர்ந்திருக்கும் தூசிகளை
இறுதியாகப் பார்த்துவிட்டுத் திரும்புகையில்
உடைந்துவிட்டது துண்டு மேகம்

மெல்லிய குளிர்காற்று
உடல்முழுவதும் வலம்வந்து
கண்களின் வழியே ஒழுகிக் கொண்டிருக்க
கிலுவை முள்ளில் சிக்கிக் கொண்டது
முதல் துளி

தம்பியின் விறகுக்குடைக்குள்
தஞ்சம் அடைவதற்குள்
அவிழ்க்கப்பட்டதால் முதுகுப்புறத்தில்
அருவி வடிந்த சாயலோடு
வீட்டிற்குள் நுழைந்தேன்

மேஜைமீது நனைந்து கொண்டிருந்த
'பால்வீதி'யின் அட்டைப்படத்தில்
வியாபித்தபடி நிற்கையில்
வெறுமை நாற்காலி அமர்ந்துகொண்டது

கவிதை ஒன்றைக் கிறுக்கி
விடுவதென்ற ஏற்பாட்டில்
எழுதுகோலை எடுத்த திசையில்
மழையின் அழைப்பு
கைபேசியின் தொடுதிரையில்
வெள்ளை நட்சத்திரங்களாக
நுரைத்துக்கொண்டிருந்தது

- திருமூ

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.