நேற்றோடு மூன்று நாட்கள் 
இன்னும் சில 
நகரங்களில் ஐந்து ஆறாகவும் 
இருக்கலாம் 
மாரிக்காலம் தொடங்கி... 

வழக்கம் போல் 
தீபாவளியை நெருங்குகின்றோம் 
என்பற்கான 
ஈரமண் ஒட்டத் துவங்கியது 
எம் காலணிகளில்.... 

புதுத்துணி எடுத்தாச்சா 
என்ற 
சொற்றொடரும் மாறவில்லை 
மாறியதென்னவோ 
என் பருவகாலம் மட்டுமே..... 

எப்பொழுதும் 
சொந்தங்களோடு சரவெடி 
கொளுத்தியதில்லை 
ஏதோ ஒரு வீட்டில் 
ஒவ்வொரு வருடமும் 
இது காட்சிப் பொருள்தாம்.... 

பலகாரங்களில் குலோப்ஜாமூனில் 
மிதப்போமே தவிர 
இன்னபிற 
அன்பளிப்புகளாகவோ
விலையாகவோ
கூடத்தில் திறந்துகிடக்கும்....

இரவில் ஒளிக் கொடிகள் 
விரியும் பரவும் 
வானவெளி படருமென்றாகித் 
திளைக்கும் 
வாண வேடிக்கையில் 
இரண்டு மூன்று 
ஏழைப் பங்காளிகள் 
தீப்பெட்டி மத்தாப்புக் குச்சிகளுக்கு 
உறவாகிப் போவர்.... 

மறுநாள் 
மாடியிலோ தெருவிலோ 
குவிந்துகிடக்கும் 
குப்பைகளில் 
யாருடைய தீபாவளி 
பெரியதெனப் 
போட்டிக்கு வருவதில்லை 
எவரும்... 

- புலமி

Pin It