கீற்றில் தேட...

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவுகள் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்ப
என்றும் இந்நிலை உலக நடப்பே
என்பத னாலே சுரண்டலும் நிரந்தர
நடப்பென எண்ணிட வேண்டாம் வினைஞர்
கடந்திட நினைத்தால் தடுத்திடும் வலிமை
அவனியில் யார்க்கும் இலையென் றறிவீர்

(இவ்வுலகமே மிகவும் இன்னாதது; அம்மம்ம! ஒரு வீட்டிலே ஓர் உயிர் பிரிந்து செல்லச் சாப்பறை ஒலிக்கின்றது; இன்னொரு வீட்டிலோ இன வளர்ச்சிக்குக் கால்கோளான மணவாழ்வில் ஈடுபடுத்தும் மங்கல முழவோசை முழங்க மகளிர் பூவணிகின்றனர்; மற்ற ஒரு இல்லிலோ கணவரைப் பிரிந்த மகளிர் கண்ணீர் சோரக் கலங்குகின்றனர். (இவ்வாறு துயரமும் மகிழ்வும் இருப்பதுமான) இவ்வுலக நடப்பு என்றும் மாற்ற முடியாத இயல்பு என்பதால் சுரண்டலும் நிரந்தர நடப்பென எண்ணிட வேண்டாம். உழைக்கும் மக்கள் சுரண்டலுக்கு எதிராக எழுந்து நின்றால் அவர்களைத் தடுக்கும் வலிமை உலகத்தில் யாருக்கும் இல்லை என்பதை அறிந்து கொள்வீர்களாக.)