கீற்றில் தேட...

man mask 213வீட்டுக்குள் நுழையும்போது
வெளியில் செல்லும்போது
தெருமுனை டீக்கடையில்
மளிகைக்கடை அண்ணாச்சிக்காக
அலுவலகம் நுழைகையில் வாட்ச்மேனுக்காக
உள்நுழைந்து மேனஜருக்கு வணக்கம் வைக்கையில்
பக்கத்து இருக்கை ரவிக்காக
எதிர் இருக்கை பத்மாவுக்காக
இப்படி நாள் ஒன்றுக்கு
யாரும் பார்த்துவிடாதபடி
முப்பதுக்கும் குறையாத
முகமூடிகளை கழட்டி மாட்டிக்கொள்கிறான்.
ஆனாலும் ஒருநாள் இரவு
முகமூடிகளை கழட்டி மாட்டும் இடைவெளியில்
அவன் நிஜமுகத்தை கண்டுகொண்ட
தெருநாய் ஒன்று
விடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது
விடியும் வரை!

- எம்.ஸ்டாலின் சரவணன்