கீற்றில் தேட...

நாள்தோறும் தெருவினில்
எதையோ புலம்பியபடி
திரியுமவன் எவரிடமும்
யாசகம் கேட்டதில்லை
காலையில்
பழைய சோற்றையும்
இரவினில்
மாலைநேரத்து உணவகங்களின்
மீதங்களையும்
சாலையோர தேநீர்க்கடையின்
கடைசிக் காப்பியையும்
தன உணவாக்கியிருந்தான்
சோகங்களை
மொழியாகக் கொண்டவன்
மறந்தும் கூடச்
சிரித்ததில்லை
திருமணப் பந்தல்களின்
வாழை மரங்களுடனும்
சாக்கடைப் புழுக்களுடனும்
உரையாடுமவன்
கேட்பாரற்றுக்  கிடக்கும்
பாழ்வீடொன்றில்
தன கடவுளைக்
கண்டுகொண்டான்
நித்தம் வாழ்வை
சித்தமெனக் கழிக்குமவன்
சட்டைப்
பொத்தான்களை கழற்றி
எவராலும் கண்டுகொள்ளப்படாமல்
ஆடைகளற்றிருக்கும்
பைத்தியக்காரியின்
மேல் போர்த்தி
மிடுக்காய்  நடக்கத்
துவங்கினான்
முகத்தில்
புன்னகை தவழ....

- அதீதன்