அப்பிக்கொள்ளும் இருளில்
சுற்றிப் பறக்கும் மின்மினியின் பாதையை
உள்வாங்கியபடி நிற்கிறாள் யாழினி..
வட்டங்களாகவும் நீள்கோடுகளாகவும்
ஓர் உரையாடலை மின்மினி வரைய
படித்துத் தொடரத் துவங்குகிறாள்..
நெடுந்தூர வனத்தின் மையத்தில்
ஒரு செண்பகப்பூ விரிகிறது.
பூவின் இதழில் மெல்ல தேன்சிட்டுகள்
ஒவ்வொன்றாய் பிறக்கத் துவங்குகின்றன.
நீண்டிருக்கும் சிட்டுகளின் அலகுகள்
நிறம் மாறிக் கொண்டே இருக்கின்றன.
கருநீலம், செம்பவளம்,
இளம்பச்சை, வெளிர்சாம்பல்
என இறுதியில் பூவின் நிறத்தையே தாமும்
அடைகின்றன.
தேன்சிட்டு ராணி மெல்ல சென்பகப்பூவிற்குள்
பூநிற அலகைக் கொண்டு நுழைகிறாள்,
தித்திப்பு குறைவதாய் உணர்ந்து
மெல்ல பூவின் வெளி நோக்கித்
திரும்பிப் பறக்கிறாள்
தொலைவை மறந்து..
தித்திப்பின் முகவரி தான் மட்டும் அறிவேனென
உறக்க நினைவில் சிரிக்கும்
யாழினியைப் பின்தொடரத் துவங்குகிறது
மின்மினி...
- தேனப்பன் (