நகரம்....
ஒரு காமெராவைப் போல்
சேகரித்துக் கொண்டிருக்கிறது காட்சிகளை.
ஒரு தலைக்குள்...
பதினோரு தலைகளுடன்
அலையும் மனிதர்கள்.
வரலாறு இன்னமும்
எழுதி வைக்காத ஒளவைகள்.,
திசையற்று...
செந்நீரில் அரைகுறையாய்
வாழ்வின் பயணம் முடித்தவர்களோடு
மிதக்கும் படகுகள்.,
பிறழ் காதலில்...
உப்புக் கரிக்கும் கண்ணீரை
கரையோரம் விட்டுச் செல்லும் கடலலைகள்.,
கட்-அவுட்களாய் கசங்கும்
நடிப்புக் கடவுள்கள்.,
அலைக் கதிர் வீச்சுக்களில்...
வாழ்வின் முகம் இழந்த சிறு பறவைகள்.,
கான்க்ரீட் கூடுகளுக்குள்ளும்...
கசப்புக்களால் கருமை படிந்திருக்கும்
அம்மாவின் சமையலறை...
கூழாகிக் கிடக்கும்
வயிற்றின் கனவுகளோடு...
நடைபாதையெங்கும் திரியும்...
சுதந்திரத்தின் அன்பளிப்புக்கள்.,
உயிர் வாழ்வின் ஈவாகிவிட...
கிராமங்களைத் தொலைத்துவிட்டு...
நகரங்களில் ஒண்டிக்கிடக்கும்
நசுங்கல்கள்.,
ஒருமைப்பாடு...
கொடியில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்க
பிரிவினைகளில் கூத்தாடும்
தேசத்தின் பிசிறுகள்.,
எல்லாவற்றையும்...
சேகரித்துக் கொண்டிருக்கும் நகரம்...
ஒளித்து வைத்திருக்கும் கண்களால்...
பார்த்துக் கொண்டேஇருக்கிறது
எனது பாவங்களையும்.