சாவுக்களைப் பீடித்த

அந்தத்தெருவில் இருந்து

வீசிக்கொண்டிருக்கிறது

பத்தியின் மணம்.

ஒரு வீட்டின் கூடத்தில்

மார் அடித்து அழுது கொண்டிருக்கும்

சில பெண்களுக்கு அருகில்

கிடத்தி வைக்கப்பட்டவனின்  ரேகைகள்

தறியடித்து அழிந்திருந்தது.

நெசவாளன் வாழ்க்கை இது தானா என

அவன் அருகில் இருந்து

கேள்விகளாய் சுழன்று கொண்டிருக்கிறது

பல திசைகளை நோக்கி பத்தியின் ஜீவாலை.

முன்னொரு காலத்தில் இந்தத்தெரு

இப்படி இருந்ததில்லை.

தறியடிக்கும் நாடாக்களின்

இடைவிடாத சத்தமும்

கூடங்களில் இருந்து வெளியேறும்

கைத்தறிப் பெண்களின் சிரிப்புச்சத்தமும்

தெருவுக்குத்தெரு இருக்கும்

டீக்கடைகளும்,  வடைக்கடைகளும்

கிடைத்த கூலியில் மிச்சம் பிடித்து

மதுரை போத்திராஜாவில்

எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் கூட்டமும் என

சந்தைக்கடை இரைச்சலில்

சிக்கித்தான் கிடந்தது அந்தத்தெரு.

எட்டாத தூரத்தில் ஏறிய பஞ்சு, நூலின் விலையும்

கட்டாத கூலியும்

நெசவாளர் பலருக்கு

கல்லறைகளைக் கட்டியது.

குடும்பம், குடும்பமாய் பலரை

சொந்த தேசத்தில் அகதிகளாக்கியது.

மானம் காக்க ஆடை நெய்த பலர்

வேலையிழந்து தூக்கினை நாடினர்.

வெட்கம் என நினைக்காமல்

தங்கள் பெற்ற குழந்தைகளைக் காக்க சிலர்

கோவில் வாசல்களில் முகம் மறைத்து

கையேந்திப் பிழைக்கிறார்கள்.

கைத்தறியைக் காக்கவோ

நெசவாளர்களைக் காக்கவோ

திட்டமில்லாமல்

தற்கொலைத் தடுப்பு மையத்தை மட்டும்

கவனமாய் அரசு அமைத்துக் கொடுக்க

பத்தியின் மணம்

அந்தத்தெருவில் கூடுதலாகிக்கொண்டிருக்கிறது.

Comments

3 comments

3
பிரேம பிரபா
வரிக்கு வரி மறுபடியும் மறுபடியும் படித்தேன். கடைசி வரி படிக்கும் ஒவ்வொருமுறையும் நொறுன்கிப் போனேன்.
ராஜாத்தி
கவிதா, உங்களுடைய கவிதைகள் வெகு அருமையாகவும், மனதிற்கு இதமாகவும், ாழ்ந்த கருத்துக்களோடும் ுள்ளது. முற்றிலும் மாறுபட்ட சிந்தனையோடு உள்ளது. வாழ்த்துக்கள்.
பாக்கியம்
"வெட்கம் என நினைக்காமல்

தங்கள் பெற்ற குழந்தைகளைக் காக்க சிலர்

கோவில் வாசல்களில் முகம் மறைத்து

கையேந்திப் பிழைக்கிறார்கள் "


இந்த வரியைப் படித்த போது நொறுங்கிப்போனேன். ஊரின் மானத்தைக் காத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை என்னவென்பது?

- பாக்கியம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.