சலசலத்துக் கொண்டேயிருந்தது

 

அந்த நீரோடை 

கும்மிருட்டில் எங்கோ 

ஒரு மூளையில் 

தனது நிழல்களைத் தொலைத்துவிட்ட 

அந்த இலவ மரத்தில் 

ஓர் ஆந்தையின் அலறலில் 

சலசலத்துக் கொண்டேயிருந்தது 

அந்த நீரோடை 

உணவில்லாத

சில நேரங்களில்

நாய்கள்

தின்று கொழுத்த

நரிகளின் தொனியில் ஊளையிட

இலவ மரத்தின் பஞ்சுகளை

வெவ்வேறு திசைகளுக்கு

இடம் பெயர்த்தது காற்று

இருந்தும் அந்த நீரோடை

சலசலத்துக் கொண்டேயிருந்தது

அருகில்

எவருக்காகவோ

தனது ஓட்டில்

நீரைச் சேமித்துக் கொண்டு

ஓர் எருக்கஞ்செடியின்

கீழ் ஒளிந்து கொண்டது

நத்தை

தவளையின்

ஏக போகக் குரல்களுக்கிடையில்

இரவு நேர

உணவைப் பங்கிட்டுக்

கொள்ளத் தெரியாத மீன்களின்

சலசலப்புக்குள்ளும்

நீரோடையில்

உருவம்

சிதைந்து விடாமல்

பார்த்துக் கொண்டது

நிலவு

பசியின் அகோரத்தில்

நீரோடையில்

அந்தத் தண்ணீர்ப் பாம்பின்

தவழலில்

நீரில் தள்ளாடியது நிலவு

நிலவின் தள்ளாட்டத்தையே

வெறித்துப் பார்த்திருந்த பாம்பு

தனது கோரப் பல்லில்

நிலவை கவ்வியது

நிலவு

சின்னா பின்னமாகச் சிதறியது

நிலவினுள்ளிருந்த தவளையின்

சலசலப்பு

நீரோடையில் அடங்கவில்லை.

நிலவைக் காத்துக் கொள்ள

விரும்பிய

வானம் மேகக் கூட்டங்களை

அழைத்து நிலவைச் சிறைபிடித்தது

நிலவின் காயங்களைக்

கண்டு

கண்ணீர் விட்ட

மேக விம்மல்களில்

அந்த நீரோடை

சலசலத்துக் கொண்டேயிருந்தது.

Comments

1 comment

1
குறிஞ்சிமைந்தன்
அதீத கற்பனைகளை உள்ளடக்கிய இவருடைய மழைத்துளி கண்ணீர் என்கிற கவிதை அமைகிறது. இயற்கையின் விழுமியங்களில் நிகழும் ஒரு போராட்ட பனிப்போரை நினைவுப் படுத்துவதாக; காட்சிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கும் நீர், இந்த இயற்கையின் வார்ப்பில் எத்தகைய பணிகளுக்கு தன்னை ஆழப்படுத்திக் கொள்ள முடியும் என்கிற தெளிவை இக்கவிதையின் மூலம் அரிதியிட்டுக் கூற முடியும். படைப்பாளியின் கவிதைக்கும், கவித் துவத்திருக்கும் பஞ்சமில்லை என்கிற நினைப்பை இக்கவிதை தெளிவுப்படுத்தி இருக்கிறது.

அன்புடன்
குறிஞ்சிமைந்தன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.