உற்சாகக் காலைப்பொழுது
தடதடத்துக் கடக்கும்
அலுவலக ஆவல் நிறைந்த ரயில் பயணம்
ஒரு மதில் சுவரில்
தூக்கி வீசப்பட்ட முகக்கண்ணாடி
நொறுங்கியிருந்தது,
இவ்வளவு காலம் பழக்கப்பட்டதை
எவ்வளவு எளிதில் தூக்கி வீசினார்களென
மனம் சிந்தனையில் புதைந்தது
அந்தக் கண்ணாடி
எப்படி உடைந்திருக்குமென்று,
குழந்தை கையில் கொடுத்து விட்டு
சமையல் கட்டு பக்கம் அம்மா போயிருப்பாளோ?
நாள் பட்ட ஆணியில் மாட்டிய
நூலருந்து விழுந்திருக்குமோ?
வேலைக்குப் போகும் அவசரத்தில்
கொளுக்கியில் மாட்டாமல் அக்கா போயிருப்பாளோ?
கல்லூரிப்பேருந்துக் கட்டணம்கேட்டு
அண்ணன் எட்டி உதைத்திருப்பானோ?
பால் குடிக்க வந்த பூனை தட்டிவிட்டதோவென
நினைவுகள் வெவ்வேறு
கோணங்களில் ஓடின
அலுவலகம் போகும் வரை,
பணிமுடித்து திரும்புகையில்
அந்தக் கண்னாடிச் சட்டகத்தை
கழற்றிய படியிருந்தார் ஒருவர்,
உடைபட்டு போகிற
நம் ஒவ்வொரு பொழுதும்
உடைபடாத ஒரு புதுப் பொழுதை
கையில் தந்துவிட்டுதான்போகிறதென
ரயிலில் இருவர் பேசிக்கொண்டிருந்தது
அதெவ்வளவு பொருத்தமானதென்று
காதில் விழுந்தது
ரயிலின் சத்தத்தைக் கடந்து.

Comments

2 comments

2
வ.க.கன்னியப்பன்
'உடைபடாத பொழுது' கவிதை வாசித்தேன்.

'உடைபட்டு போகிற
நம் ஒவ்வொரு பொழுதும்
உடைபடாத ஒரு புதுப் பொழுதை
கையில் தந்துவிட்டுதான்போகிறதென' என்ற நல்ல கருத்து கூறப்பட்டிருக்கிறது.

சிறு சந்தேகம் - பொழுது என்பது சரிதானா அல்லது பொருள் என்பதா?
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
திருமலைசோமு
உடைபடாத பொழுது கவிதை என் மனதை சற்று கீறிவிட்டு சென்றது. இந்த கண்ணாடி போல் எல்லோர் வாழ்விலும் ஏதேதோ உடைந்திருக்கிறது. உடைந்து போன உறவுகள், உடைந்து போன நட்பு, உடைந்து போன வாழ்க்கை என எல்லாவற்றையும் நம்மையும் அறியாமல் பல நேரங்களில் ஒரு குழந்தை தனத்தோடு உடைத்து விடுவதுண்டு. இறுதியில் மிச்சப்பட்டிருப்பது.. யாருக்கும் பயனற்ற பிய்ந்து தொங்கும் அந்த சட்டம் போல் வாழ்க்கையும் தொங்கி கொண்டிக்கும் பலருக்கும்..

சிந்தனையை தூண்டிய கவிதை பாராட்டுக்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.