கீற்றில் தேட...

புரையேறும் போது
யாரோ நினைக்கிறார்கள் எனச்சொல்லி
தலையில் தட்டியே
உன் நினைவை
மறக்கடிக்கப் பார்க்கிறாள் அம்மா.

இடம் பொருளறியாது
எச்சமிடும் காக்கையைப் போல
காதல்.
எங்கு எப்போது
வருமென்று தெரியவில்லை.

உன் காலடிச்சத்தங்கள்
கற்பிக்கும் இலக்கணம்
கோனார் உரை போட்டாலும்
என்னைத் தவிர
யாராலும் அறிய முடியாதது.

பேருந்தில்
ஜன்னலோர இருக்கை
எப்போதும்
வாய்த்து விடுகிறது உனக்கு.
வெளியிலிருந்து
பார்க்கும் போது
தந்திகளுக்குப் பின்னிருக்கும்
வீணையைப் போல்
அழகாயிருக்கிறாய்.

தவறு செய்து விட்டால்
தலையிலடித்துக் கொண்டு
நாக்கைக் கடிக்கிறாய்.
இந்த அழகைக் காண
எத்தனை முறை
வேண்டுமானாலும்
தவறு செய்யலாம்.

நான் பேச வைத்திருக்கும்
வார்த்தைகளை
பேசாமலேயே
கண்டுபிடித்து விடுகிறாய்.
எப்படி எனக்கேட்டால்
உனக்குள் தானே
இருக்கிறேன் எனச் சிரிக்கிறாய்.

சட்டெனப் பெய்யும்
மழை போல
அழுது விடுகிறாய்.
குடையாய் கையை விரித்ததும்
மார்பில் சாய்கிறாய்.
எனக்குள் பெய்கிறது மழை.

அலைபாயும் கூந்தலை
அள்ளி முடிந்தாய்.
ஒரு பூ
தற்கொலையிலிருந்து
தப்பித்துக் கொண்டது.

யானையிடம்
சில்லரையைத் தந்து
தலையைக் குனிந்து
ஆசீர்வாதம் வாங்கினாய்.
மோட்சம் கிட்டியிருக்கும் யானைக்கு.

கொண்டு சென்ற
குடையை மறந்து
மழை வாங்கி வருகிறாய்.
ஜலதோசம் பிடிக்கும் என்றால்
உன்னைப் போல்
மழையையும் பிடிக்கும் என்கிறாய்.

அப்படியொன்றும்
அழகில்லை என்றவுடன்
அடிக்க வருகிறாய்.
கோபத்தில்
மேலும் அழகாகி விடுகிறாய்.

- ப.கவிதா குமார்