இப்படியொரு நாளுக்காகத்தான்
எதிர்நோக்கி காத்திருந்தது கருங்காலிகள் கூட்டமொன்று
இழந்த ஆதிக்கத்தை மீட்டெடுக்கமுடியாமல்
பழிதீர்க்க தருணம் பார்த்து தருணம் பார்த்து
ஒரேசாதி இரத்தக் காட்டேரிகளை தேடித்தேடி
ஒன்றிணைத்துக் கொண்டிருந்தது

அடிமையின் சாசனங்களை அறுத்தெறிந்து
சாதி பாகுபாடின்றி அக்கிரமங்களை தட்டிக்கேட்கிற
துணிச்சலும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளை
மீட்டெடுத்து வாழ்கின்ற தைரியமும்
மீளமுடியா சாதிவெறியாய்
வன்னிய இரத்தத்திற்குள் கொழுந்துவிட்டெறிந்தது

நியாயமில்லா காரணத்தை நியாயப்படுத்தி
அரசுத்துறை அக்கிரமவாதிகளின் தூண்டுதலோடு
சேரிகளின் உரிமையும் சுதந்திரமும்
நெருப்பிற்கிரையானது

சேரிகள் பற்றியெறிவது
இன்று நேற்றல்ல
நாளையும் நடக்காமலிருக்கப் போவதில்லை

தொடரும் அநீதிகளுக்கெதிராய்
எவ்வித நியாயமும் கிடைத்திடப் போவதில்லை
எச்சரிக்கைகள் மட்டுமே மிஞ்சிநிற்கும்

நினைக்க நினைக்க நெஞ்செரியும்
சாதியின் அகோரச்செயலைக் கண்டு வீழ்ந்துவிடாது
தட்டிக் கேட்கத் துணிந்தவர்களாய்
திரண்டெழட்டும் ஒட்டுமொத்த சேரியும்
ஆதிக்கத்திற்கெதிராக ஆயுதமேந்தி
போர்த்தெழட்டும்
புதியதோர் விடுதலைக்காய்

- நீதிமலர், வழக்கறிஞர்