வெறுமை
உறங்கும் அலைகளுடன்
உறைந்த சமுத்திரம்
கடல் பறவைகள்
வானில் கரைந்து விட்டன
பறவைகள் கொத்தும்
ஓர் பிளந்த சூரியன்
மூப்பும் மரணாதிகளும்
கிளைகளில் படர
அடிவயிற்றில்
நெளியும் வேர்கள்.
இழப்பு
பெயர்ந்து போன நகத்தின்வலி
குழந்தையின் நிலா மறைவு
பீதி நிறைந்த கனவு
கதவு திறந்து
உள்ளே நுழைகிறது
மரணம்
தன் மூடிய இமைகளுடன்
ஒண்டிக்கொள்ள இடம் நாடும்
உறவுகளின் குகைகளிலோ
இரையாகிப் போனதின்
எலும்புத் துண்டுகள்
கனவு
தூண்டிய திரியில்
அலையும் சுடரின் ஓலம்
கரும்பாசிக் கண்ணிருட்டுள்
விரிகிறது கனவு
ஓலம் குறைந்து
சிறுத்து மடியும் சுடர்
முப்பதாவது வயதில்
இந்த முப்பதை நெருங்கும் வயதில்
நான் மிகவும் அழுகிப் போனவனாக உணர்கிறேன்
நொறுங்கிய மனம்
வைத்தியம் பாராமல்
ஊனம் என்றாயிற்று
பரிசாக அளிக்கப்படும் கோப்பைகளில்
மதுவும் துயரமும் நிரம்பி வழிகின்றன.
மீதமிருந்த கற்பனையும்
ஞானிகளாலும்
நண்பர்களாலும்
சுத்தமாக துடைக்கப்பட்டுவிட்டன.
தொடர்ச்சி
ஆமைப்படம் ஒன்றின்மேல்
ஆமைப்படம் வரைந்தான் சிறுவன்
ஆமைமேல் ஆமை
ஆமைமேல் ஆமை என
வரைவதை நிறுத்தியும்
வளந்தது படம்……
திகைத்த சிறுவன்
மூச்சற்று வீழ்ந்தான்
வாய்வழியும் நுரைகுடித்து
ஆமையும் மாண்டது.
- சுரேசுகுமாரன்