கவிழ்ந்த தென்னங்கீற்றாய்
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும்
கிழவியைப்
போக வரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை
இவள் அறியக் கூடுமென,
ஒருநாள் கேட்டேன்
புதிய வீட்டின்
வாசலோரப் பூஞ்செடிகள்
எத்தனை குடம்
நீரூற்றியும்
ஒரு பூ கூட பூக்காததன்
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப
நீர் நிறைந்திருந்த
குளத்துக்கு
குடங்கள் போதாதென
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட
குளக்கரையில் வெகுகாலமாய்
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக்
காவலிருந்த
பேச்சி
தான்தானென்று...!
- உமா மோகன் (