காய்த்துத் தொங்கிய
பகல்பொழுதின்
முதிர்ச்சியில்
பழுத்துக் கனிந்தது இருள்
இருளின் சுவை நுகர
வட்டமிடும் வவ்வால்களாய்
மனிதர்கள்.
வெளிச்சத்தில்
கருத்திருக்கும் மனிதமனம்
இருளில் வெளுத்திருக்கும்
பகலில் உள்ளேயும் வெளியேயும்
மேய்ந்துக் கறித்த
பணிச்சுமைகளை
ஆறஅமர அசைபோடவும்
இயந்திர இயக்கத்தை
இடைநிறுத்தி
மனித உடலுக்குக்
கூடுபாய்ந்து
உயிரோட்டம் கொள்ளவும்
ஆழ்ந்த துயில் வாசிப்பில்
மனதின் பக்கங்களைக்
பிரித்துப் போட்டு
கீழ் மேலாகவும்
மேல் கீழாகவும்
மீண்டும் மீண்டும்
அடுக்கிப் பார்க்கவும்
இருள் போர்த்திய இரவு
கம்பளம் விரிக்கும்
இருளே காலஓட்டத்தின் ஆதாரம்
இருளே இயக்கத்தின் கூடாரம்