இங்கே நின்று கொண்டிருக்காதே
நகர்ந்து செல் என்று சொல்ல
உங்களிடம் ஒரு சொல் இருக்கிறது
உச்சி முதல் பாதம் வரையிலான அதிகாரத்தை
மூட்டை மூட்டையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
வீட்டிற்குள் நான் நுழைந்துவிடாத படி
அறைந்து சாத்த உங்களிடம் ஒரு கதவு இருக்கிறது
யாருக்கு என்ன கொடுக்க வேண்டும்
எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று சொல்ல
உங்களுக்கென ஒரு கடவுள் இருக்கிறது
மிரட்டவும், எதிர்க்கும் தலைகளை உருட்டவும்
அச்சுறுத்தி வைக்கவும்; போன ஜென்மத்து பாவமென்று
சொல்லிக் காட்டவும் உங்களிடம் ஒரு மதமிருக்கிறது.
உரிமையென உயர்த்திய கரங்களில் விலங்கிடவும்
திமிறும் உடல்களை சிறைக்கம்பிகளுக்குள் தள்ளி விடுவதற்கும்
தோதாய் உங்களிடம் ஒரு சட்டம் இருக்கிறது
என்னதான் செய்ய முடியும்
சூரியனின் வெயில் படர்ந்து மேலும் கறுத்துப் போகிறோம்.
பசிக்கு எதுவும் கிடைக்காதபோது தவளைகளை சுட்டுக் தின்கிறோம்.
இப்படியே தொடரப்போவதில்லை நாட்கள்
பறந்து கொண்டிருக்கும் ஒரு கோள் எங்கள் தேசமாகும்
அப்படிச் செல்ல எங்களுக்கு கனவிருக்கிறது.
கனவை வளர்க்தெடுக்க ஒரு கவிதை இருக்கிறது.
கீற்றில் தேட...
எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்