தங்கமீன்கள் தமது உணவென நினைத்து
அழகிற்கெனப் போடப்பட்டிருந்த சிறு கற்களை
விழுங்கிப் பின் துப்பிக்கொண்டிருந்தன

எண்ணற்ற நீர்க்குமிழிகள் புனலிலிருந்து
வெளிக்கிளம்பி நீர் மேல் மட்டம் வரை சென்று
காற்றில் பட்டு உடைந்து கொண்டிருந்தது

நீர்த்தாவரம் போலிருந்த அந்தப்பச்சை
நிறப் பிளாஸ்டிக் பாசிகள் மீன்களுடன் சேர்ந்து
நீருக்குள் அல்லாடிக்கொண்டிருந்தன

கூட்டுக்குள் தம்மை மறைத்துக்கொள்ளாமல்
சிறு ஆமைகள் தம்மால் முடிந்தவரை நீந்தி
நீரின் மேல் மட்டம் வரை வந்து பின்
நீர்ச்சுழலில் தடுமாறி கீழே போய்க்
காயப்படாமல் விழுந்துகொண்டிருந்தன

என்னாலியன்றவரை ஷூ ஒலிகளை
அதிகம் வெளிப்படுத்தாது
தானியங்கிக் கதவை நோக்கி
என்போக்கில் நடந்துகொண்டிருந்தேன்
“முடிவு பிறகு தெரிவிப்போம்” என்ற குரல்
என் முதுகில் ஒலித்துக்கொண்டிருந்தது

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.