தொடர்ந்தும் நடந்தபோதுதான் கவனித்தேன்
எனக்கு இரண்டு நிழல்கள் விழுவதை
எங்கனம் சாத்தியம்
எல்லோருக்கும் ஒன்று தானே விழும்?

கவனமாக நடந்தேன்
சுற்றும் முற்றும் பார்த்து
ஹ்ம்..இரண்டு நிழல்களே தான்
ஒரு சந்தேகமுமில்லை

வெய்யிலிலிருந்து ஒதுங்கி நின்று கொண்டு
சிறிது நேரம் கழித்து
உடம்பை நீட்டிச் சரிபார்த்தேன்
அப்பட்டமாக இரு உருவம் நிழலாடியது

இது காரணமாகவே
கொஞ்சநாள் வெய்யிலில்
அலைவதை நிறுத்திக்கொண்டேன்
மற்றவர்க்கும் இது தெரிந்துவிடக்கூடாதே என்று
அப்படியே போயே தீரவேண்டுமெனினும்
தெருவின் கட்டிட நிழலோரங்களில் சென்று
வருவதை வழக்கமாகக்கொண்டேன்

வீட்டுக்குள்ளிருக்கும் போது
குண்டுபல்புகளின் வெளிச்சத்தில்
அவை இரண்டாகவே தெரிந்து
என்னை இன்னும் கலவரப்படுத்தியது

இதைப்பற்றிப் பிறரிடம் விவாதித்தும்
எவரும் பெரு விருப்பொன்றும் காட்டாதது
எனக்கு மேலும் வெறுப்பையே தந்தது

பிறகுதான் புரிந்தது
அனைவர்க்கும் இரண்டு நிழல்கள்
விழத்தான் செய்கின்றது
அதில் அவர்கள்
ஒன்றை எப்போதும் மறைக்கும்
வித்தை அறிந்திருப்பதை.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.