மூட நம்பிக்கையின் வறண்ட பாலையிலிருக்கும் போது
அறிவின் நதியை உன் வீட்டிற்கு கொண்டு வருவேன்.
மதத்திற்காக உன் கைகளை அரிவாள்களாக மாற்றும் பொழுது
மலர்க்கொத்தோடு திரிந்த உன் பால்ய காலங்களை நினைவுப்படுத்துவேன்.
உன் கடவுளுக்காக இன்னொருவனை வெட்டிச் சாய்க்கும்போது
நாய்க்குட்டி இறந்ததற்காக நீ அழுது ஆர்ப்பாட்டம் செய்த
உன் ஈரமான காலங்களை நினைவுபடுத்துவேன்.
கட்சிக்காக இன்னொரு மனிதனை கொடிக்கம்பங்களாக வெட்டி வீழ்த்தும்போது
பூகம்ப இடிபாடுகளிலிருந்து மக்களை மீட்ட நாட்களை நினைவுபடுத்துவேன்.
அரசியல் நம்மை தீண்டாதபோது மதம் நம்மை அணியாதபோது
சாதி நம் உறுப்பாக மாறாத போதிருந்த காலங்களில்
நீ மரம் நடவும், நான் நீறுற்றவுமாகயிருந்த காலங்களை திரும்பக் கொண்டு வருவேன்.
சின்னஞ்சிறு கிளை வெட்டப்பட்டதற்கு வாடிப் போன நீயா
சாதிப் போராட்டத்திற்காக மரத்தை வெட்டுகிறாய்.
விபத்து ஏற்பட்டு கவிழ்ந்துக் கிடந்த பேருந்திலிருந்து
மனிதர்களைக் காப்பாற்றிய நீயா கட்சிக்காக பேருந்தை எரித்தாய்.
இப்பொழுதும் நீ உறவுதான்.
உன் உடம்புக்குள் அரசியல் பாம்பு குடியேறிவிட்டது.
உன் உடலை தலைமையகமாக மாற்றிவிட்டது சாதிச் சங்கம்.
உன் அபிமானத்தை வெறியாக கைமாற்றுகிறது மதத்தின் துரோகம்.
இன்னொரு கட்சியலிருக்கிறாயென்பதற்காக
எப்படி உன்னை கை கழுவி விட முடியும்.
இன்னொரு மதத்தில், சாதியிலிருக்கிறாயென்பதற்காக
எப்படி உன்னை வெறுக்க முடியும்.
மேய்ப்பர்கள் கசாப்பு கடைக்காரர்களான பின்பு
ஆட்டுக்குட்டியாக நீ இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை.
உன் வீட்டிலும் என் வீட்டிலும் வெவ்வேறு அடுப்புகளிருக்கலாம்
ஆனால் உன் உடலிலும் என் உடலிலும் ஒரே தாய்மொழி தான் இருக்கிறது.
உன்னைக் கடந்துபோய் மார்தட்டிக் கொள்ள எதுவுமில்லை.

- கோசின்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It