எங்கிருந்தோ ஏந்தி வருகிறாய்
எனக்கான சிறகுகளை
மென்குளிரிலும் கொதிநிலையிலும்
என்னிடமே தஞ்சம் கோருகிறாய்
என் எல்லா அசைவுகளையும்
பெருமை பொங்க ரசிக்கிறாய்
வரைபடத்தில் இல்லா தேசம் என்னில்
செங்கோலாய் வீற்றிருக்கிறாய்
கட்டாயம், கப்பம்
சிறைகள், சங்கிலிகளில்லா
உன் பச்சை ஆட்சியால்
நமது பூமி கம்பீரமாய்
செழித்துக் கிடக்கிறது
எல்லைகளற்று விரியும்
எமது காதல்
தீவில் திரும்பும் திசையெலாம்
கஸ்தூரிமணம் கமழுமெம்
காற்தடங்களிலிருந்து
ஊற்றெடுக்கிறது பன்னீர் பொதிகைகள்
நம் காதல் ரகசியங்களை
தக்கையில்லா காற்று
பூக்களிடம் குசுகுசுத்துத் திரிகிறது
நம் அந்தப்புரத்தை எட்டிப்பார்க்க
மேகங்கள்கூடி மின்னல் படையெடுக்கின்றன
சூரியனின் நிழலில் பகலிலும்
நிலவின் குளிர் மடியில் இரவிலும்
ஒழித்துள்ள நம் காதல் இரகசியத்தை
தீவின் புடைவைக் கதவுகளை
மெல்ல மூடி கடைசிவரை
பேணுவோம், என் கைகளை இறுகப்பற்று!!!