Loversஉயிரே உருகி ஒழுகும் ஓயாப் பணிகளையும்

கோடிமுறை ஊடறுத்துப் போகுதே…

இதயக்கிண்ணமதை நிறைத்து நுரைத்து

பொங்கி வழிந்தோடும் உன்

ஞாபக அதிர்வுகள் வரிவடிவமாகலின் வலிகள்.

இதோ… முற்றத்திலே நீ நட்ட மாமரங்கள்.

துளிர்த்துக் கிடக்குமதன் தங்கத் தளிரும்

நிலம் வீழ்ந்தே தனித்துக் கிடக்கும் சருகுகளும்

உனக்காய் பிரார்த்திக்கும் மௌன மொழிகள்

என் செவிகளுக்குள் விடாது ரீங்காரமிடுகிறது.

உச்சத்திலே பச்சைப் பவளங்களாய் பளீரிடும்

காய்கள் கொறித்தபடியே

சின்ன அணில்களும் செல்லக் கிளிகளும்

முட்டிமோதும் குருட்டு வெளவால்களும் உன்

சுவன வாசத்தை என்னிடம்

சொல்லிச் சொல்லிப் போகின்றன.

எமக்கெல்லாம் இடமின்றியே சுள்ளி விரலால்

நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவளே!

நாமென்ன கிழித்தோம்? கனி ஆய்ந்தபடியே

செறிந்த உன் வனக்கந்துகள் தறித்தே

விறகு தின்றதைத்தவிர.

தலைப்பேன் குத்தியபடி நீ சொல்லிமுடிக்கும்

பேய்க்கதைகளின் திகிலும் நீ

பருக்கி விடும் தேசிக்காய் தேனீரின் மணமும்

புளி புரளும் கூனிச் சம்பலின் ருசியும்

சொல்லில் புரிய வைக்கமுடியாத உன் சுவைகள்.

எத்தனை உறவுகள் எனைச் சுற்றிச் சூழ்ந்துமென்ன

இத்தனை வயதாகியுமே

பொங்கி வெடிக்கும் வலிகளிலும் பூரித்தெழும் சுகங்களிலும்

உன் நொய்ந்துபோன இடுப்பை இறுக்கிக் கொண்டே

சவர்க்காரமும் வெற்றிலையும் கலந்து கமழுமுன்

சேலைப் பூமடிக்குள் மீண்டும் நானொரு

சின்னக் குழந்தையாய் புதைந்திடத்தானே

மனசு கிடந்து பரபரக்குது.

நீதான் போயே விட்டாயே.

நாசித் துளைக்குள் இன்னுமுன்

நறுமணம் ஊசியாய் துளைத்து உணர்வுகளைக் குதறுகிறதே

இன்னும்

எத்தனை நாள்தான் காத்திருப்பதோ

அங்கு வந்தே உன் அணைப்புக்குள் இறுகிட.

எனக்காய் ஊட்டிட உருகிட அன்னை தந்தாய்

அன்னையூடே உன்னுதிரமுந் தந்தாய்.

இப்படியாய் எல்லாமே தந்த என்னவளே….

உன் ரோசங்களை மட்டுமெனக்குத் தந்துபோக

ஏன் மறந்தாய்?

 

- கிண்ணியா எஸ். பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It