எனக்கொரு தனிக்காதலி.
அவளை உங்களுக்கு தெரியும்.
அழைத்து வருகையில் அங்குமிங்கும்
நீவிர் பார்த்திருக்க கூடும்.
தன் சொந்தப் பொருட்களின் உள்ளடக்கத்தில்
அவள் எனது பெயரையும்
சேர்த்திருக்கிறாள்.
அது உண்மைதான்.
முழுமையல்ல.

இன்னொரு தனிக்காதலி
இருக்கிறாள்.
அவளை நான் மறைத்து வைத்திருக்கிறேன்.
அந்நிய தேசங்களில்
நாங்கள் கைகோர்த்துத் திரிவோம்.
அவள் தன் பிரத்யேகப் பொருட்களின்
மறைவுப்பிரதேசமொன்றில்
எனது பெயரை
ஒளித்துவைக்கிறாள்.
அது உண்மைதான்.
முழுமையல்ல.

எனக்கு ஒரு பழைய காதலி
இருக்கிறாள்.
அவள்
என்னை ஆரம்பித்து வைத்தவளாயிருந்தாள்.
நான் அவளிடம் தொடங்கினேன்.
சொல்லிக்கொடுத்தவளாயிருந்தாள்.
பொறுத்துக் கொண்டவளாகவும்.
என்னைப் பெயர் நீக்கம் செய்திருக்கக்கூடும்
தனது பட்டியல்களிலிருந்து.
அது உண்மைதான்.
முழுமையல்ல.

எனக்கு ஒரு பொதுக்காதலி
இருக்கிறாள்.
தேடாப் பொதுமையுங்கூட.
அவளைத் தெரியாதென்பேன்
உரத்த குரலில்..
தெரியும் என்று சொல்லமாட்டேன்.
அவளுள் புகுந்து
அவளுக்குள்ளிருந்து கிளம்பி
அவளை வெளியேறியவன் நான்.
அவள் என்னைக் கலைத்தவள்.
அது முழுமைதான்.
உண்மையல்ல.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.