ஆட்டத்தில் என்னிடம் தோற்கிறவர்களை
எனக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது.

மதுக்குடுவையை நான் பீச்சியடிக்கையில்
எல்லோர் மீதும் சிதறக்கூடிய
திரவத்தை ஒன்றும் செய்யவியலாது
சங்கிலி பிணைக்கப்பட்ட குரங்குகளைப் போல
அவர்களிருப்பதை மிகவும் விரும்புகிறென்.

மேசைகளுக்கு நடுவிலே ஆடிவரும் தாரகை
நான் வெல்லுகிற அற்புதக் கணத்தில்
மடிமீது அமர்ந்து என்னை
முத்தமிடும்  ஈரத்துக்காக
நான் வென்றே ஆக வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறேன்.

அவரவர் சீட்டுக்களை கையில் பிடித்தபடி
மர்மத்தை மொழியும்
குருமார்களாய்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறோம்.
என்றாலும்
சூதின் சகல பரிமாணங்களும்
கற்றுத் தேர்ந்தது எனது பலம்.
உங்களனைவரின் பலவீனமும் கூட.

உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது.

எனக்கு முந்தைய இருக்கையை ஒருவர்
தேர்வு செய்ததன் மூலம் என்னை
எதிரியாகப்பெறுகிற
விசித்திர நிலையில்
உங்களுக்கு என்னால் உதவ முடியாது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு எண்ணை
கோமாளியாக அறிவித்தாலும்
நிரந்தரக் கோமாளி
எப்பொழுதும் புன்னகைத்துக்கொண்டே
இருக்கிறான்.

ஆட்டத்தின் முடிவு நேரம் நெருங்குகிறது.
கைகள் பிடித்திருக்கும் சீட்டுக்களை
மடக்கி வெளிப்படுத்த
ஒரே ஒரு சீட்டுத்தான்
தேவை

நீங்கள் வெற்றிக்களிப்புடன்
விரித்து காட்டுகிறீர்கள்.
உதடுகள் உங்களுக்கு
வாழ்த்துச் சொல்லிக்கொண்டே
என் கரங்கள் எனக்குத் தேவையான
எண்ணைத் தேடுகின்றன.

கண்டெடுக்கிறேன்.
சேர்மானங்கள் நீங்கலாக
கவிழ்த்து வைத்திருக்கிறீர்கள்.
பதினாலாவது சீட்டாய்.

எனக்கான உயிர்த் துருப்புச் சீட்டை

Comments

1 comment

1
sekar
Nice.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.