More articles by இவள் பாரதி
all lines are fantastic...
More articles by இவள் பாரதி
மென்மையான
எனது கனவுகளுக்கு
ஒரு வன்மத்தை
நிகழ்த்திவிடக் கூடிய
பாய்ச்சலுடன் நெருங்குகிறாய்
உன் வன்மமான கனவுகளை
அழித்தெடுப்பதற்காய்
நெருங்குகிறேன் உன்னை
மென்மையிலும் மென்மையாக..
====
நீயும் நானும்
நடந்த பயணங்களில்
வலை பின்னிய காதலில்
இப்போது நான்மட்டும் ..
கீழிறங்கி நிற்கும் உன்னை
மேலிழுக்க கை நீட்டியபடி...
====
யாரும் பார்த்துவிடாதபடிக்கு
மூடியிட்டு வைத்திருக்கும்
உன் நேசத்தை
மோப்பம் பிடித்துவிட்டதால்
திரும்பிப் போக மறுக்கிறது
என் சுயம்...
=====
நீ அள்ளித் தெளிக்கும்
காயங்களைப் பத்திரப்படுத்துகிறேன்..
நான் பத்திரப்படுத்திய எதுவும்
என்னிடம் நிலைப்பதில்லை..
உன்னை இன்னும் பத்திரப்படுத்தாததன்
காரணமும் இதுவே...
====
தனித்த வாகனத்தில் வலம் வந்த
அடர் இரவொன்றில்
என் வாகனத்தில் ஏறி
விளையாடிய உன்னை
இறக்கிவிடாமல்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்
கடலின் கீழும்
வானிற்கு மேலும்
====
உனது எந்த வார்த்தையும்
துளையிட இயலாது
ஆதி மௌனத்தால்
கவசமுற்றிருக்கும் என்னை
====
ஏதுமற்ற தருணங்களில்
எல்லாமுமாய் நீயிருக்கிறாய்..
எல்லாமுமாய் நீயான போது
ஏதுமற்றிருக்கிறேன்
====
நிகழாத உன் வருகையிலும்
அலங்கரிக்கப்படுகின்றன
என் இரவுகள்
உன் முந்தைய நிகழ்த்துதலால்...
=====
உன் தேவைகள் அனைத்தும்
தீர்ந்த பின்னும்
மீதமிருக்கும்
என் காதலின் தேவைகள்...
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.