பெரியார் ஈ.வெ.இரா.வின் பொதுவாழ்வு 1914இல் தொடங்கியதாகக் கொள்ளலாம். அது இந்திய தேசியக் காங்கிரசில் நாட்டங்கொண்டது. 1914 முதல் 1926 முடிய அவர் காந்தியாவாதியாகவும் காங்கிரசுக்காரராகவும் இருந்தார்.

சுதந்தரம் பற்றி 1922இல் தான் காந்தியார் சிந்தித்தார். 1929க்கும் 1931க்கும் இடையில் தான் சுதந்தரம் வேண்டும் என்னும் கோரிக்கையை காங்கிரசு வரித்துக் கொண்டது. ஈ.வெ.இரா. அப்போது காங்கிரசில் இல்லை. காங்கிரசில் அவர் இருந்த போதும் தேர்தலில் காங்கிரசு போட்டியிடுவதை அவர் எதிர்த்தே வந்தார். தேர்தலில் போட்டியிட விரும்பிய காங்கிரசார் சுயராஜ்யக் கட்சியின் பேரால் போட்டியிட்டனர்.

இதற்கு இடையில் 1926 தேர்தல், 1932 தேர்தல், 1937 தேர்தல் இவற்றில் நீதிக்கட்சியை அவர் ஆதரித்தார். நீதிக்கட்சி 1937 தேர்தலில் தோல்வி அடைந்தது. அந்தக் கட்சியின் தலைவராக 29.12.1938இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திதான் சுதந்திர இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்பது காந்தியாரின் கொள்கை. பின்னர் அது காங்கிரசின் கொள்கை ஆயிற்று. ஆனாலும் எந்த மாகாண அரசிலும் காங்கிரசு ஆட்சியினரால் இந்தி மொழி, பள்ளிகளில் கட்டாயப் பாடமாக ஆக்கப்படவில்லை. சென்னை மாகாணத்தில் மட்டும் பிரதமர் சி. இராசகோபாலாச்சாரி 21.4.1938இல் இந்தியைக் கட்டாயப் பாடமாக 125 உயர்நிலைப் பள்ளிகளில் திணித்தார். அது இரண்டு உள்நோக்கங்களைக் கொண்டது. ஆரியப் பண்பாட்டைக் கற்பிக்கும் இந்தி மற்றும் வடமொழி இதிகாசங்களையும் புராணங்களையும் இந்தி மொழியில் தமிழரிடையே பரப்புவது; இந்தியா சுதந்தரம் பெற்றவுடன் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்குவது. இது தீமை நிறைந்தது.

எனவே தமிழறிஞர்கள் இதை எதிர்த்தனர்; தமிழையும் வட மொழியையும் ஆங்கிலத்தையும் கற்ற அறிஞர்கள் எதிர்த்தனர். இவர்கள் அனைவரும் மற்றும் தமிழ்ப்பொது மக்களும் ஈ.வெ.இராவைத் தமிழரின் தலைவராக ஏற்று, இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினர். அப்போருக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஆச்சாரியார் பதவியை விட்டு விலகினார். 1939இல் முதலாவது உலகப் போர் மூண்டது. அதனால் எல்லா காங்கிரசு அமைச்சரவைகளும் மாகாண அரசுகளிலிருந்து விலகின.

1946இல் இந்தியாவுக்கு விடுதலை தர வெள்ளையர் முன் வந்தனர். 9.12.1946 முதலே சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை, 1946 தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வைத்து, எழுதத் தொடங்கினர். விடுதலை பெற்ற இந்தியாவில் மக்கள் நாயகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அந்த ஏற்பாட்டை முழு மூச்சாக எதிர்த்தவர் ஈ.வெ.இரா. ஒருவரே ஆவார். அவர் அதற்கு முன்னரே 30.9.1945 இல் திருச்சி மாநாட்டிலேயே, வெள்ளையர் ஆதிக்கம் ஒழிந்த - பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிந்த - வட நாட்டார் ஆதிக்கம் ஒழிந்த தனித்திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தார்.

1940 முதல் 1944 வரை உள்ள காலத்தில் பம்பாய், கான்பூர், லக்னோ, கோல்கத்தா முதலான வட மாநிலங்களில் அவர் பயணம் செய்தார்.

8.1.1940 இல் முகமது அலி ஜின்னாவிடம், “இந்தியாவுக்கு ஒரே அரசமைப்பு அவை என்பதை ஏற்காதீர்கள்” என்றும்; “திராவிட நாடு பிரிவினைக்கு ஆதரவு தாருங்கள்” என்றும் கோரினார். அதே போன்ற கோரிக்கையை இந்தியாவின் எல்லா மாகாணங்களிலும் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

திராவிடர் கழகம் 1949 செப்டம்பரில் பிளவுபட்டது. பிளவுபட்ட தி.மு.க.வினர் - 1956 வரையில் தேர்தலில் ஈடுபடவில்லை. இந்தி எதிர்ப்பு, திராவிட நாட்டுப் பிரிவினை இரண்டையும் தி.க.வும், தி.மு.க.வும் முழுவீச்சோடு தூக்கிப்பிடித்தன.

1955இல், நேருவும் இராசகோபாலாச்சாரியும் தந்திரமாகத் திட்டமிட்டு, திராவிட நாடு கோரிக்கையை வீழ்த்த வேண்டி, “தட்சணப் பிரதேச அமைப்பு”க்காக பெங்களூரில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தினர். “தட்சிணப் பிரதேசம் என்பது தமிழரைச் சிறுபான்மையினராக வைத்து அவர்கள் பேரில் ஆதிக்கம் செய்யவே பயன்படும். எனவே அது கூடாது” எனத் தம் கடுமையான எதிர்ப்பை ஈ.வெ.இரா. நேருவுக்குத் தெரிவித்தார். “பெரியாருடைய எதிர்ப்பை மீறினால், அம்முயற்சி வெற்றி பெறாது” என்பதை, அன்றைய முதலமைச்சர் காமராசர் நேருவிடம் தெளிவுபட விளக்கினார். பெங்களூரிலேயே அம்முயற்சி கைவிடப்பட்டது.

உடனடியாக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தமிழ்நாடு தனி மாநிலமாக ஆயிற்று. அதை வரவேற்ற பெரியார் ஈ.வெ.இரா, 1.11.1956 முதல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

1939 முதல் 1956 வரையில் பெரியார் ஈ.வெ.இரா. முன் வைத்த நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைகளை இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, சோசலிஸ்டுக் கட்சி இவை எல்லாமே எதிர்த்தன.

இந்தியா ஒரே நாடு; இந்தியா பிரிக்கப்படக் கூடாது என்றே எல்லா அகில இந்தியக் கட்சிகளும் பிடிவாதமாகக் கூறின. அன்று போதிய செல்வாக்கில்லாமல் இருந்த இந்து மகா சபை முதலான அமைப்புகள், காந்தியார் கொல்லப்பட்ட பிறகு, 1948 பிப்பிரவரி முதல் திட்டமிட்டு, “இந்தியாவை ஓர் இந்து இராஜ்யமாக அமைக்க வேண்டும்” என்பதில் உறுதியாக நின்று செயல்பட்டன.

இதற்கு இடையில் 1939 முதல் 1952 வரையில் எந்தத் தேர்தல் பணியிலும் ஈடுபடாமல் இருந்த பெரியார் ஈ.வெ.இரா, 1952 பொதுத் தேர்தலில், சென்னை மாகாணத்தில் காங்கிரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் முழு மூச்சோடு ஈடுபட்டார். அப்போதைய சென்னை மாகாணச் சட்ட அவைக்கு 375 இடங்கள். அதில் 225 இடங்களைக் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் கைப்பற்றின. ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சி 65 இடங்களுக்கு மேல் கைப்பற்றியது; தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களைக் கைப்பற்றியது. இதற்கு தி.க., தி.மு.க. இரண்டும் உதவின. ஆயினும், காங்கிரசுக்கு எதிரான கட்சிகளிடையே 1952 முதல் 1954க்குள் ஒற்றுமை சிதறியது.

13.4.1954 இல் காமராசர் முதலமைச்சர் ஆனார். அப்படி அவர் வருவதற்கு முன்னர், 1954 மார்ச்சு இறுதியில், பெரியாரை நேரில் கண்டு அவர் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, முதல் அமைச்சர் பதவிக்கு வந்த காமராசர், பெரியார் விதித்த நிபந்தனைகளைக் கண்ணுங்கருத்துமாக 1963 வரை நிறைவேற்றினார். அதனால் பெரியார் முழு மூச்சாகக் காமராசரை ஆதரித்தார்.

இதனால் தமிழகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள் ஒரு பக்கம்; தீமைகள் இன்னொரு பக்கம். அத்தீமைகளைப் பற்றி 1971 இல் தந்தை பெரியாரிடம் நாம் நிரல்படச் சுட்டிக்காட்டினோம். 1971இல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை உயிர்போல் கருதி அவர் ஆதரித்துக் கொண்டிருந்தார்.

‘இந்திய அரசமைப்பையும், இந்திய ஒருமைப்பாட்டையும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று உறுதி கூறினால்தான், ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க முடியும். இதன் காரணமாகவே, 1963இல் திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அதிகாரப் பூர்வமாகக் கைவிட்டு விட்டு, இந்திய அரசமைப்பையும், இந்திய ஒருமைப்பாட்டையும் முழுமனத்தோடு ஏற்றுக் கொண்டுவிட்டது. அப்படி ஏற்றுக் கொண்ட பிறகு, இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தி.மு.க. அவ்வப்போது எதிர்த்துக் குரல் தந்தாலும், இந்திய நாடாளுமன்றத்தில், இந்தி ஆட்சிமொழி என்பதற்கு உரிமை வழங்கும் அரசமைப்பு விதிகளை நீக்குவதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை முன்மொழிந்திட இன்று வரை தி.மு.க. துணியவில்லை.

தி.மு.க. மட்டும் தனித்து நின்று அதைச் சாதிக்க முடியாது. தி.மு.க. தவிர்த்த மற்ற தமிழ்நாட்டுக் கட்சிகளும், மற்றும் அனைத்திந்திய அளவிலான கட்சிகளும் - இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற கோட்பாட்டை எதிர்த்து, அதற்கான முயற்சிகளில் இறங்க முன் வர வேண்டும். இவற்றுக்கு எப்போது, எப்படி வாய்ப்புகள் நேரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

திராவிடர் கழகம் பெரியார் ஈ.வெ.இரா. மறைவுக்குப் பின்னர், 1976இல் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் மாறி, மாறி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை ஆதரிப்பது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை ஆதரிப்பது என்பதே தன் அரசியல் நிலைப்பாடு என மேற்கொண்டுள்ளது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 8.8.1976இல் சீர்காழியில் நிறுவப்பட்டது. அதனை அடுத்து 1977 இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது முதலே “தேர்தல் புறக்கணிப்பு” என்பதை அரசியல் நிலைபாடாக மா.பெ.பொ.க. ஏற்றுக் கொண்டது. ‘தேர்தல் புறக்கணிப்பு’ என்பது ஓர் ஆற்றல் மிக்க நடைமுறை ஆகாது.

கடந்த 34 ஆண்டுகளில் நாம் செய்துள்ள மூன்று பெருஞ்சாதனைகளை முன் வைத்து நாம் மிகப்பெரிய செல்வாக்குள்ள அமைப்பாக வளர்ந்திட ஆவன செய்யவில்லை.

தேர்தலில் ஆதரவு நிலைப்பாடு, எதிர்ப்பு நிலைபாடு என்கிற இரண்டும் 1991க்குப் பிறகு - கொஞ்சமும் கொள்கை வழி சார்ந்ததாக இல்லை.

‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்பது போல், முதலாளிகளின் - பெருந்தொழிலதிபர்களின் - சாராய முதலாளிகளின் முகவர்களாகச் செயல்படுகிற கட்சிகளாகவே காங்கிரசு, தேசிய வாத காங்கிரசு, பாரதிய சனதா முதலான அனைத்திந்தியக் கட்சிகளும்; மற்றும் மாநிலக் கட்சிகளும் உருவாகிவிட்ட நிலையில் எந்தத் தேர்தல் கட்சிக்கும், “இந்தியா ஒற்றை ஆட்சியாக இருப்பதை உடைக்க வேண்டும்” என்கிற அரசியல் பற்றிய குறிக்கோள் இல்லை.

நாம் இன்று கண்கூடாகக் காணும் நிலை இதுதான். ஏன்?

உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்பது ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் கைகோத்துக் கொண்டு, உலக உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிப்பது, உலக ஏழை நாடுகளில் உள்ள இயற்கை வனவளம், கனிம வளம், ஆற்று நீர்வளம் இவற்றைக் கையகப்படுத்தி, தத்தம் நாட்டில் தொழில்வளத்தைப் பெருக்கி, நுகர் பொருள்களை உருவாக்கிப் பரந்த சந்தைகளைத் தேடி, அதிக விலைக்குப் பொருள்களை விற்றுச் சுரண்டுவது; ஏழை நாடுகளிலுள்ள வளரும் தலைமுறையினரின் உடல் உழைப்பு, மூளை உழைப்பு இவற்றைக் குறைந்த கூலி தந்து சுரண்டுவது; அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளைப் பயன்பாடற்றவை ஆக்கி, ஆங்கிலம், இந்தி முதலான மொழிகளையும், ஜப்பான், செருமன், பிரஞ்சு முதலான அயல்மொழிகளையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, தமிழ் முதலான பழம்பெருமைமிக்க மொழிகளைப் பயன்பாடு அற்றவையாக ஆக்குவது - அதன்வழியாக மொழிவழித் தேசிய இனங்கள் தத்தம் அடையாளத்தை அடியோடு இழக்கச் செய்வது என்கிற கொடிய நடைமுறைகளைச் செயல்படுத்துகின்றன.

இந்தப் பெருங் கொள்ளைக்குத் துணைபோகிற இந்திய தேசிய காங்கிரசுக்கும், பாரதிய சனதாவுக்கும் இடையே - யார் இந்தியாவை ஆளுவது என்பதில் வலிமையான போட்டி நிலவுகிறது. இதுவே இன்றைய இந்திய அரசியல். இதில் வாய்ப்புக்கு ஏற்ப ஏதாவது ஓர் அணியில் சேர்ந்து கொள்ளுவதையே மாநிலக் கட்சிகள் தத்தமக்கு உரிய அரசியல் நிலைபாடாகக் கொண்டுள்ளன. இவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதால் - உலக ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவத்துக்குமே வலிமையும் வெற்றியும் கிட்டும்.

கடந்த 85 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்படும் பொதுவுடைமைக் கட்சிகள் - இந்தியாவில் 2000 ஆண்டுகளாக வலிமையாக அமைந்துள்ள இந்துத்துவ இந்திய சமுதாய அமைப்பைக் கணக்கில் இன்றளவும் முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கேற்பப் போராட்டத் திட்டங்களையும், போர்த் தந்திரங்களையும் வகுக்கவில்லை.

ஆனால் இங்கு உள்ள பழைய அமைப்பை அப்படியே காப்பாற்றிக் கொண்டு, இந்தியப் பெருமுதலாளிகளும் உலகப் பெருமுதலாளிகளும் சுரண்டுவற்கான கையாளாகக் காங்கிரசு செயல்படுகிறது.

இங்குள்ள சமுதாய, மத அமைப்புகளை பழைய காலத்து நிலைக்கே கொண்டு போவது - இந்தியாவை அகண்ட இந்தியாவாக மாற்றுவது - இந்தியாவை மேல்சாதிக்காரர்கள் ஆளுவது; இந்தியப் பெருமுதலாளிகளும் உலகப் பெரு முதலாளிகளும் சுரண்ட ஏதுவாக ஒரு பரந்த சந்தையாக இந்தியாவை வைத்திருப்பது என்பதில் பாரதிய சனதாவும், அதன் தத்துவப் பிரிவான ஆர்.எஸ்.எஸ்.சும் உறுதியாக உள்ளன.

இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒன்றுடன் கைகோத்துக் கொண்டு - கிடைத்த வரையில் செல்வாக்கையும் செல்வத்தையும் திரட்டிக் கொள்வதில் மிகவும் நாட்டம் உள்ளவையாக மற்றெல்லாக் கட்சிகளும் உள்ளன. இதுவே இன்று இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள அரசியல் நிலை ஆகும். இது தேசிய இனங்களின் உரிமைகளைக் காப்பாற்றிட உதவாது; மதச் சார்பற்ற கொள்கை வலிமை பெறக் கை கொடுக்காது; வருண சாதியொழிப்புக்கு ஏற்ற சட்டங்களை நிறைவேற்ற உதவாது; உண்மையான சமதர்ம சமுதாயம் அமைய வழி விடாது.

நாம் இதிலிருந்து எங்கோ வெகு தொலைவில் நிற்கிறோம்.

26.11.1928இல் தென்னிந்தியச் சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், ஈ.வெ.இரா. தம் கொள்கை வெற்றி பெறுவதற்கான ஓர் அரசை நிறுவுவதே தம்நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம் என்பது நம் புரிதல். நாமும் நம்மை ஒத்த அமைப்பினரும் இவற்றைப் பற்றி ஆர அமரச் சிந்திக்க வேண்டும்; ஒன்று கூடி விவாதிக்க வேண்டும். இதில் ஒற்றுமை காண விரும்புவோர் ஒன்று திரள வேண்டும். இத்திசை நோக்கி முயற்சிப்போம், வாருங்கள்!  

Pin It