ஆங்கிலக் காலனி அரசு ஒரு நூற்றாண்டுக் காலம் இந்தியாவில் நிலைகொண்ட பின் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து ஒரு நுட்பமான மதிப்பாய்வினை மேற்கொள்ளுமாறு மிக மூத்த சிவில் அதிகாரியான ஹண்டர் என்பவரைக் கேட்டுக் கொண்டது. அவர் கொடுத்த அறிக்கையில் “இப்போது இந்தியா வானது பெரிதும் பாதுகாப்பாகவும், வளமிக்க தாகவும், மாறிவருகிறது. மேலும் சாலைகள், இரயில்வே, பாலங்கள், கால்வாய்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அடுத்து, பஞ்சங்கள் திறம்பட எதிர் கொள்ளப்பட்டன. கொள்ளையடிக்கும் சாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. வணிகம் பெருகியுள்ளது. காட்டுமிராண்டித்தன பழக்கங்களான விதவை களை எரித்தல் (சதி), குழந்தைக் கொலை போன்றவை ஒழிக்கப்பட்டுள்ளன....” என்று விவரித்துக் கொண்டே செல்கிறார். இந்த அறிக்கையில் கொள்ளையடிக்கும் சாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளன’ என்ற கூற்று பற்றிய ஆய்வை இக்கட்டுரை மிகச் சுருக்கமாக முன் வைக்கிறது.

வடஇந்தியச் சூழலும் தென்னிந்தியச் சூழலும்

1860களின் இறுதியில் ஆங்கில அரசு வட இந்தியாவில் குற்றமரபினரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த எண்ணியது. அதனால் அரசு குற்றவாளிப் பழங்குடிகளைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகளைச் சட்டமியற்ற வேண்டுமா எனக் கலந் தாலோசித்தது. அதன் பின்னர் 1871 இல் குற்றவாளிப் பழங்குடிகள் சட்டம் (ஒன்றை இயற்றியது. முதலில் பஞ்சாபிலும் வடமேற்கு மாகாணங்களிலும் இதனை நடைமுறைப்படுத்தியது. இச்சட்டத்தைச் சென்னை மாகாணத்தில் செயல் படுத்த வேண்டிய தேவை எழவில்லை என அப் போதைய காவல்துறை முதன்மை அதிகாரி தெரிவித்துவிட்டார். இதற்கிடையில் 1876இல் இச்சட்டம் வங்காளத்திலும் நடைமுறைப்படுத்தப் பட்டது.

அந்நூற்றாண்டின் இறுதியில் இச்சட்டம் சென்னை மாகாணத்திற்குத் தேவையா என மீண்டும் பரிசீலிக்கப்பட்டது. எனினும் போலீஸ் கமிஷன் அறிக்கை கிடைத்த பின் அது பற்றி முடிவெடுக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது (Judl.GO.725,20.5.1903). வடமேற்கு மாகாணக் காவல் துறையினர் பரிந்துரைத்ததுபோல் அப்போதைய சென்னை மாகாண காவல் ஆணையர் பரிந்துரைக்க மறுத்துவிட்டார் (judl.GO.1071 (Back Nos. 51-53) 10.8.1870). வடஇந்தியப் பகுதிகளில் உள்ளது போல் சென்னை மாகாணத்தில் நிலைமை மோசமாக இல்லை என அறிக்கை கொடுத்தார். மேலும் இப் பகுதிகளில் ஊர் சுற்றும் சமூகங்களின் சேவையையும் தேவையையும் நன்கு அறிந்து 1860களில் ஒரு அறிக்கை கொடுத்தார் (ளூரடிவநன in னுயஎனை ஹசnடிடன 1979).

அப்போதைய சென்னை மாகாணத்தில் ஊர் சுற்றி வணிகம் செய்து வந்த சமூகங்களின் தொழில்கள் மூலம் உள்நாட்டுச் சமூகத்தாரும் கடற்கரைச் சமூகத்தாரும் பெரிதும் பயன்பெற்றனர். மாட்டு வண்டி மூலமும், கழுதைகள் மூலமும் இப்பகுதி களுக்குச் செல்லும் உப்பு வணிகர்களை நிறுத்தி விட்டால் அதற்கு ஈடாக மாற்று ஏற்பாடு செய்வது இயலாது எனப் போலீஸ் கமிஷன் உணர்ந்தது. இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. ஒரு சாதாரண வணிகன் விற்கும் விலையைவிட இந்த உப்பு வணிகர்கள் விலை குறைவாகவே விற்கின்றனர். மேலும் இவர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் போது இவர்களைக் குற்றமிழைக்கும் மரபினர் என்று வகைப்படுத்திவிட முடியாது. அதனால் அவர் களைத் தனிமைப்படுத்தி ஓரிடத்தில் குடியமர்த்தும் தேவையும் எழவில்லை என்று அப்போதைய சென்னை மாகாண காவல் ஆணையர் எழுதி விட்டார்.

1900வாக்கில் சென்னை மாகாணத்தில் ஊர் சுற்றும் வணிகர்களாக மூன்று முக்கிய சமூகத்தார் இருந்தனர். தமிழ் பேசும் மாவட்டங்களில் குறவர் களும், தெலுங்கு பேசும் பகுதியில் எருகுலரும் கொரச்சர்களும் வணிகம் செய்தனர்.

லம்பாடிகளும் பஞ்ஞாராக்களும் பல மாநிலங் களுக்குச் சென்று உப்பு வணிகம் செய்தனர். கூடவே உப்புக்குப் பதில் பெற்ற தானிய வகைகளையும் மக்களிடம் விற்று வந்தனர். சில இடங்களில் உப்புக்குப் பதில் காட்டுப் பொருட்களையும் பண்டமாற்றமாகப் பெற்று அவற்றை மற்ற மக்களிடம் விற்று வந்தனர்.

காலனியப் பொருளாதாரக் கொள்கையும் மக்களின் வாழ்வாதார மாற்றங்களும்

19ஆம் நூற்றாண்டில் ஆங்கில அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பல வகையான மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக, பல பழமைச் சமூகங்களின் தொழில்களை ஒழித்துக்கட்டின எனலாம். குறிப்பாக, ஊர் சுற்றி வணிகம் செய்து வந்த குறவர்களுக்குப் பேரடியாக அமைந்தது.

மிக முக்கியமாக ஆங்கில அரசு 1880களில் உப்பு உற்பத்தியைத் தன்வசப்படுத்தியது. உற்பத்தியை முழுக்க முழுக்க தானே மேற்கொள்ள முடிவு செய்தது. இதனால் ஊர் சுற்றும் வணிகர்கள் உப்பினை அரசிடமிருந்து வாங்க வேண்டிய புதிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசானது 1850களில் இருந்தே இரயில்வே, சாலைப் போக்குவரத்து களைச் சென்னை மாகாணத்தில் ஏற்படுத்தியது. இதனால் அரசானது ரயில்வே வழி வணிகம் செய்யும் மிகச் சில முகவர்களையும் நிறுவனங்களையும் ஊக்குவித்ததால் உற்பத்தியும் வணிகமும் அவர்கள் வழியே தொடங்கியது. இதனால் பன்னெடுங் காலம் பாரம்பரியமாக உப்பு உற்பத்தி செய்த சமூகத்தாரும், உப்பு வணிகம் செய்த சமூகத்தாரும் தங்கள் தொழில்களை இழந்தனர் (காண்க: (Report of the Madras Salt Commission, 1876). இதனால் உடனடியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குறவர்கள், எருக்குலர்கள், கொரச்சர்கள். ஏனெனில், இவர்கள் சென்னை மாகாணத்திற்குள் தொழில் செய்து பிழைத்து வந்தவர்கள். லம்பாடிகளும் பஞ்ஞாராக்களும் உப்பைப் பிற மாகாணங்களுக்குக் கொண்டு செல்லும் பெரு வணிகர்களாக இருந்தனர். அதனால் பாதிப்பு முதல்வகைச் சமூகத்தாருக்கு ஒருவகையாகவும் பிந்தையவர்களுக்கு வேறு வகையாகவும் இருந்தது.

அடுத்து, ஆங்கிலக் காலனி அரசு 1880களில் திருத்திய புதிய வனக் கொள்கை இங்குள்ள குடி களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உப்பு வணிகம் செய்த மேற்கூறிய குடியினர் வைத்திருந்த கால்நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலம் வனக் கொள்கையின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. உப்புக்குப் பண்டமாற்றம் செய்யும் காட்டுப் பொருட் களுங்கூட எளிய முறையில் காடுகளிலிருந்து பெற முடியாமல் போனது. இதனால் காட்டுப் பொருட் களைக் கொடுத்து தானியமோ உப்போ பண்ட மாற்றம் செய்ய முடியவில்லை.

மேலும், 1866இல் ஏற்பட்ட மிகப் பெரும் பஞ்சத்தால் இந்த ஊர் சுற்றும் வணிகர்கள் புஞ்சை தானியங்களை மிக அதிக விலைக்கு விற்க ஆரம் பித்தனர். இவ்வளவு அதிக விலை கொடுத்துப் பண்டங்களை வாங்கவோ பண்டமாற்றம் செய்யவோ மக்களால் முடியவில்லை. இதற்கிடையில் பஞ்ச காலத்தில் வணிகர்களின் வண்டிகளை இழுக்கும் கால்நடைகளும் பெருமளவு மாய்ந்து போயின. இவ்வாறாக ஆங்கில அரசின் இன்னும் சில பொருளாதாரக் கொள்கைகளால் கிராமப்புறங்களில் குற்றங்களும் குற்றச் செயல்களும் பெருகத் தொடங்கின.

அதுவரை பாரம்பரியத் தொழில் செய்து வந்த இந்த ஊர் சுற்றும் வணிகர்களும் உப்பு உற்பத்தி செய்தவர்களும் தங்கள் தொழில்களை இழந்து விட்டனர். வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்தனர். இத்தகைய சூழலில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் உடைமைகள் மையமிட்ட குற்றங்கள் பெருகின. ஆங்கில நிர்வாகம் அதுவரை ‘ஊர் சுற்றும் மக்கள்’ என்று அடையாளப்படுத்தியிருந்ததை மாற்றி இம்மக்கள் இனி கண்காணிக்கப்பட வேண்டி யவர்கள் என்ற வகையின் கீழ்க் குற்றவாளிப் பழங்குடிகள் என வரையறை செய்யத் திட்டமிட்டது. 1877இல் ஏற்பட்ட மற்றுமொரு கடுமையான பஞ்சம் இம்மக்களைப் புதிய திசையில் இட்டுச் சென்றது. சாலைப் போக்குவரத்தும் ரயில் போக்கு வரத்தும் விரிவு பெற்றதால் உப்பு வணிகம் இவற்றின் வழியே புதிய வணிகர்களால் மேற்கொள்ளப் பட்டது. அரசின் உப்பு, வனக் கொள்கைகளால் ஊர் சுற்றும் வணிகர்கள் தங்களின் பாரம்பரியத் தொழிலை இழந்து செய்தவறியாமல் தவித்தனர். குற்றமிழைத்தலும் திருடுதலும் வாழ்வாதாரமாக ஏற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். பஞ்ச காலத்தில் மேலும் சில நிலையான சமூகத் தாரும்கூட இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பின்னர் இச்சட்டத்தைச் சற்று விரிவுபடுத்தி 1911 இல் சென்னை மாகாணத்திலும் நடைமுறைப் படுத்தியது. இதனால் இம்மாகாணத்தில் அரசின் புள்ளி விவரப்படி மட்டும் 14 லட்சம் மக்கள் குற்ற மரபினர் என்ற அடையாளத்தின் கீழ் அவ மதிப்பிற்கும் அவலத்திற்கும் உள்ளாயினர். இக் கட்டுரையில் நாடோடிச் சமூகமாக வாழ்ந்த குறவர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஆங்கில ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண மாக இருந்த ஒன்றுபட்ட தென்னிந்தியப் பகுதி களில் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த தமிழ் பேசும் குறவர், தெலுங்கு பேசும் கொரச்சர், எருகுலர் ஆகிய சமூகங்களையும், சுற்றித் திரியாமல் கிராமங் களில் நிலையாக வாழ்ந்த சமூகங்கள் சிலவற்றையும் 1911இல் இயற்றிய சட்டத்தின் கீழ் ஆங்கில அரசு குற்றவாளிப் பழங்குடிகள் (ஊசiஅiயேட கூசiநௌ) என அறிவித்தது.

1913இல் சென்னை மாகாணத்தில் குற்றவாளிப் பழங்குடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது லம்பாடிகளும் பஞ்ஞாராக்களும் வணிகம் செய்யும் சமூகங்களாகவே கருதப்பட்டனர். காரணம் இவர்கள் ஆங்கில இராணுவத் தளவாடங்களை உள்ளூர்ப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உதவினர்.

அரசின் நிபந்தனைகள்

குற்றவாளிப் பழங்குடிகள் என அறிவிக்கப் பட்டவர்கள் ஒரு கிராமத்தை விட்டு வெளியே தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வெளியே செல்ல முடியாது. அப்படிச் செல்ல வேண்டு மானால் கிராமத் தலைவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். அச்சான்றிதழைச் செல்லும் கிராமத் தலைவரிடம் காண்பித்து தான் வந்ததற்கான காரணத்தைக் கூறி ஒப்புதல் பெறவேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் அது தண்டனைக்குரிய குற்றமாக அமைந்துவிடும். ஊர் சுற்றும் மக்களுக்கு இச்சட்டம் பெரும் தொல்லையாக அமைந்தது. அதனால் தலைமறைவாகச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். சிலர் கிராம வருகைப் பதிவேட்டில் பதிந்துகொண்டு சென்றவர்களும் உண்டு.

மறுவாழ்வுத் திட்டத்தின் உள்நோக்கம்

சென்னை மாகாணத்தில் 1913இல் 14 லட்சத் திற்கும் மேற்பட்டவர்கள் குற்றமரபினராக அறிவிக்கப் பட்டவுடன் ஆங்கில அரசு அவர்களை ஓரிடத்தில் தங்கி வாழ நிர்ப்பந்தித்தது. இதற்காக மறுவாழ்வுத் திட்டங்களை முன்வைத்தது. காலனிய அரசின் இந்த எண்ணம் இன்னொரு முக்கிய தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டதாகும். காலனிய அரசு ஏற்படுத்திய கல்வாரிகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், தேயிலை-காப்பித் தோட்டங்கள் ஆகியவற்றில் கூலிகளாகப் பணியாற்ற நிர்ப்பந்தித்தனர். மறுவாழ்வுத் திட்டம் என்னும் போர்வையில் அவர்களின் கூலித்தேவையை நிறைவு செய்வதாகவே இத்திட்டம் அமைந்தது.

ஆங்கில அரசு குற்றவாளிப் பழங்குடிகளைப் புனரமைப்பதில் சில முயற்சிகளை எடுத்தது. இது குறித்து 1916இல் உதகமண்டலத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் குற்றவாளிப் பழங்குடிகளை ஓரிடத்தில் தங்கி வாழும் முறைக்குக் கொண்டுவரவேண்டும் என்றும், அதற்கு அவர்களை நூற்பாலைகளில், தொழிற்சாலைகளில், காப்பி-தேயிலைத் தோட்டங்களில் பணியமர்த்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. பஞ்சாலை உரிமை யாளர்கள் இப்பரிந்துரையைப் பெரிதும் வரவேற்றனர். ஏனெனில் அக்காலகட்டத்தில் பஞ்சத்தின் போதும் மழைக்காலத்தின் போதும் மட்டுமே ஆட்கள் அதிகம் கிடைத்தார்கள். விவசாயக் கூலிகள் விவசாய நாட்களில் பஞ்சாலைக்கு வருவதில்லை. அதனால் குற்றமரபினரை வேலைக்கு எடுத்தால் ஆட்கள் பஞ்சம் இருக்காது என எண்ணினர்.

1916கள் வாக்கில் ஆங்கில அரசு குற்ற மரபினரை மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை இரட்சண்ய சபையிடம் (Salvation Army) ஒப்படைத்தது. 55 நாடுகளில் பணியாற்றி வந்த இச்சபையினர் சென்னை மாகாணக் குற்றமரபினரை மும்பைக்கும், அசாம் தேயிலைத் தோட்டங்கள், சிலோன், பெனாங் முந்நீரகத்திற்கும் அனுப்ப யோசித்தது. மேலும் மெசபடோமியாவின் இராணுவ சேவைக்கும்கூட ஆள் அனுப்பும் யோசனை தெரிவித்தது (Report of the Indian Jails Committee, 1919 -20, ch.xxii). ஆனால் சென்னை மாகாண காவல்துறை உயரதிகாரிகள் இவர்களை வெளியிடங்களுக்கு அனுப்புவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

பின்னுரை

ஆங்கில அரசு ஐரோப்பிய ஜிப்சிகளை முன் வைத்தே இந்தியாவில் குற்ற மரபினரை அணுக முற்பட்டது. இந்தியக்குடிகள், குறிப்பாக உப்புக் குறவர்கள் (உப்பு விற்பவர்), தப்பைக் குறவர் (மூங்கில் வேலை செய்பவர்), இஞ்சிக் குறவர் (இஞ்சி விற்பவர்), கல் குறவர் (கல் உடைப்பவர்) போன்றவர்கள் ஆங்கிலேயர் வருவதற்குமுன் வணிகமும் வேறு வேலைகளும் செய்தவர்கள். இவர்களின் பாரம்பரியத் தொழில்கள் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட பின்னரே செய்வதறியாது நிர்மூலமாகினர். இவ்வாறே கள்ளர்களும் வழி தவறிப்போயினர். இவர்கள் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் கிராமங்களில் காவல் தொழில் மேற்கொண்டவர்கள். இதற்காக மக்களிடமிருந்து காவல் மான்யம் பெற்றவர்கள். இத்தகு பாரம்பரிய காவல் தொழில் ஆங்கில நிர்வாகத்தினரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து கள்ளருக்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஆங்கில நிர்வாகம் பிற சாதிகளைத் தயார் செய்தது (Anand Pandian 2005) இந்நிலையில் தமிழகத்தின் சில குடிகள் அந்நியரால் குற்றமரபினராக மாற்றப் பட்டனர்.

விடுதலைக்குப்பின் மைய அரசு 1949இல் ஒரு குழு அமைத்து குற்ற மரபினரின் நிலையை ஆராய்ந்தது. குற்றவாளிச் சட்டம் கொண்டு வந்தபின் 80 ஆண்டுகள் கழித்து 1952இல் ஒரு மாற்றுச் சட்டம் (The Criminal Tribes’ Laws {Repeal}Act, 1952) சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இவர்கள் குற்ற மரபிலிருந்து நீக்கப்பட்ட சீர் மரபினர் (Denotified communities) என்ற அடையாளத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று 68 சமூகத்தார் இவ்வடையாளத்துடன் உள்ளனர். இத்தகு அடையாளமும் கூட ஒரு வகையில் அவமதிப்பிற்குரியதாகவே தொடர்கிறது. பாதிப்பில்லாத மாற்று வரையறை வழங்க வேண்டியது சமத்துவச் சமூகத்தை நாடும் அரசின் கடமையாகும். சமத்துவ அடையாளம் கிடைக்கும் வரை காலனியத்தின் அவமதிப்பானது நவகாலனியத்தின் அவலமாகவே தொடரும்.

(உங்கள் நூலகம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It