நிர்வாணம் குறித்த
அவனது ஆரம்பப்பார்வையில்
நீள அகலங்கள் 
ஒரு போதும் இருந்ததில்லை.
அது போல 
மனதை சோர்வடையச்செய்யும்
பிரபஞ்சத்தின் 
எல்லையில்லா நீட்சியும்
அறவே கிடையாது.
தேவை கருதி
வடிவமைக்கப்பட்டதுதான்
இந்த உடல் என்று
மிகத்திடமாக அவன்  நம்பியிருந்தான்.
மனதில் கருவை புடம் போட்டு
சொற்களைத்தேர்ந்தெடுக்கும்
ஒரு முதிர்ந்த கவிஞரின் நிதானம்
அவனுள் எப்போதும் இருந்தது.
புலன்களின் ஒன்றாக காமத்தையும்
துளியும் வெட்கம் இல்லாமல் 
நிறைவேற்றிக்கொண்டான்.
ஒப்புக்கொள்ளவும் செய்தான்.
ஒரு வசந்தகால முன் இரவில்
ஏவாளின் கைரேகை படிந்த 
கனியொன்றை உண்டபிறகு
காமத்தின் மென் சூடு
அவனுள் மெல்லப்பரவியது
வெட்கத்தின் முதல் முகவரி
அங்கங்களைத் தீண்ட 
தன் காமத்தின் கண்களை
இரு கைகளாலும்
இருகமூடிக்கொண்டான்.
இருண்டு போனது இப்புவி
முதல் முறையாக
- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It