தமிழ்நாட்டு இலக்கிய மேடைகளில் - அண்மையில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு உட்பட - பட்டிமன்றம் செல்லப் பிள்ளையான வடிவமாக ஆகி விட்டது. சின்னத் திரையிலும் மிகுந்த செல்வாக்கான இடம் அதற்கு உண்டு.
தமிழ்த் திரையுலகக் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்களுக்கு இணையான செல்வாக்கைப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பெற்றுள்ளார்கள். அதனாலேயே பிரபலப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் திரைப்படத்திலும் கூட தலைகாட்டினார்கள்.(ஆனால் அதன் மூலம் மக்களின் எதிர்ப்பைத்தான் ஈட்டினார்கள் என்பது வேறுகதை)
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, மேதினம், மகளிர் தினம், சுதந்திர நாள்... இப்படி எல்லா விழாநாட்களிலும் பட்டிமன்ற நடுவர்கள் தங்களைச் சார்ந்த அணியினரோடு எதோ ஒரு தலைப்பில் பேசிக் கொண்டே இருப்பதை நாம் பார்க்க,கேட்க முடிகிறது. அதுவே சிறு சிறு மாற்றங்களுடன் பாட்டு மன்றம், பேச்சரங்கம், அரட்டை அரங்கம், அகட விகடம், வழக்காடு மன்றம், வாங்க பேசலாம் வாங்க, நீயா நானா என்று ஏதேதோ தலைப்புகளில் ,உலா வந்து கொண்டிருக்கின்றன. தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலாவது இத்தனை விதமான பேச்சு மேடைகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கூடத் தோன்றுகிறது.
இந்நிலையில் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால், பட்டிமண்டபம் என்பது பண்டைக் காலத்தில் சமயக் கொள்கைகளின் ஆழ்ந்த விவாத மேடையாக இருந்திருக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தில், "பட்டி மண்டபப் பாங்கறிந்து ஏறுமின்" என்று விழாகால அரச கட்டளையாக முரசறிவிப்பான் அறிவிப்பதாக உள்ள வரியின் மூலம் அறியலாம்.
அதன்பின் இலக்கிய மேடைகளில் புராண, இதிகாச, காப்பிய மாந்தர்கள், நிகழ்வுகள் குறித்துப் பேசத் தொடங்கினர். "கற்பில் சிறந்தச்வல் கண்ணகியா, மாதவியா? தம்பியருள் சிறந்தவன் இலக்குவனா,பரதனா? இராமன் மறைந்து நின்று வாலியைக் கொன்றது சரியா தவறா?" என்று சலிக்க சலிக்கப் பேசினார்கள்; இன்றும் கூடப்பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தங்கள் அணியையும் தங்கள் அணி நாயகர்களையும் நிகழ்ச்சிகளையும் வலுப்படுத்துவதற்காக எதிரணி மாந்தர்களைப் பலவீனமனவர்களாகவும், நடத்தை பிறழ்ந்தவர்களாகவும் பேசுவதைப் பல நேயர்களால் ஏற்கமுடியவில்லை; ஒரு நிகழ்வில் ஒருகதை மாந்தரை உயர்த்திப் பேசும் ஒருவர் மற்றொரு நிகழ்வில் தரம் தாழ்த்திப் பேசுவதையும், நடுவர்களின் கருத்தோட்டத்திற்கு ஏற்ப தீர்ப்புகள் மாற்றப்படுவதையும் நேயர்களால் ஏற்கமுடியவில்லை.
இச்சூழ்நிலையில் பட்டிமன்றங்கள் தேவையா, இத்தகைய தரம் தாழ்த்தும் விவாதங்கள் தேவையா.. என்பது போன்ற விவாதங்களும் எழத் தொடங்கின. இத்தகைய கலை இலக்கியச் சூழ்நிலையில் புராண இதிகாச,காப்பிய நிகழ்வுகள்,கதை மாந்தர்கள் குறித்த விவாதங்களுக்கு மாறாக,பாரதி,பாரதிதாசன், கவிதைகள் குறித்தும், இன்றைய சமுதாயப் போக்குகள் குறித்தும் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும் புதிய சூழல் உருவானது. கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் இத்தகைய புதிய நிகழ்வுகளை முன்வைத்தனர். கம்ப ராமாயணம், பெரியபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களையும் கூட மனித நேயப் பார்வையில் பார்க்கும் பார்வையை ஜீவா, குன்றக்குடி அடிகளார், ஜெயகாந்தன், முத்தையா, கைலாசபதி போன்றோர் மக்களிடையே முன்வைத்தனர். அதனால் இலக்கியங்களை இன்றைய வாழ்வியல் பார்வையில் பார்க்கும் போக்கு வளர்ந்தது. அதனால் பட்டிமன்றங்களின் தன்மையும் மாறின.
"பாரதி விரும்பிய நாட்டு விடுதலை நனவாகிவிட்டதா? கனவாகவே இருக்கிறதா? இருட்டறையில் உள்ளதடா உலகம் காரணம் மக்களே! தலைவர்களே! சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பது மூடநம்பிக்கைகளா? கல்வியறிவின்மையா ? நாட்டு முன்னேற்றம் தடைபடுவது ஊழலாலா? திறமை இன்மையாலா?...... என்பது போன்ற தலைப்புகளால் சில ஆண்டுகள் மீண்டும் மக்களது ஆதரவைப் பெற்றன.
ஆனால் காலப்போக்கில் பேச்சாளர்கள் ஆழமான கருத்துக்களை முன்வைக்காமல், நகைச்சுவைத் தோரணங்களாக தாங்கள் பேச்சை அமைத்துக் கொள்ளும்பொழுது பிற்போக்குத் தன்மை ஏற்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக திரைப்பாடல்கள் தொடர்பான சின்னத்திரை பட்டிமன்ற விவாதங்கள் தொடங்கிய பிறகு முற்றிலும் திசைமாறி விட்டது. எந்தப் பாடல்கள் ஆபாசமானவை என்று கூற விரும்புகிறார்களோ அவற்றையே மிக ரசித்துப் பாடிக்காட்டும் போக்கும் வளரத்தொடங்கியது
திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் அருவருப்பான பேச்சுகள், மட்டமான நகைச்சுவைகள் போன்றவை பட்டிமன்றங்களிலும் இடம் பெறத்தொடங்கின. வெறும்நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்க்காமல் தலைப்பை ஒட்டி கருத்துடன் பேசுபவர்கள் பட்டி மன்றங்களுக்குத் தகுதி அற்றவர்கள் ஆகி விட்டார்கள்.
இந்நிலை மாற்றப் பட வேண்டும். பட்டிமன்றம் என்னும் நல்ல இலக்கிய வடிவம் நீர்த்துப் போகாமல், நல்ல கருத்துக்களையும், அவற்றை விளக்கும் வகையில் தரமான நகைச்சுவையையும் சரியான விகிதத்தில் கலந்து பேசுங்கள். சட்டினி தொட்டுக் கொண்டு இட்டலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதன்று. அதுபோல நகைச்சுவையையே பிரதானமாக்கி விட்டு, சொல்ல வேண்டிய கருத்தை கவனம் பெறாமல் செய்து விடக்கூடாது.
பட்டி மன்றங்கள் பயன் தரும் மன்றங்கள் ஆகட்டும்.
- புதுவை ஞானகுமாரன் (