கீற்றில் தேட...

பள்ளித்தேர்வு முடிந்து விட்டது. அனல்பறக்கும் வெயிலுக்குப் பயந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகின்றனர். வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை kavithakumar_kabadiரசித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள், ஒன்றரை மாத விடுமுறைக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் சேர பெற்றோர்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது பள்ளிப்பிராயத்தில் தேர்வு முடிந்து அறிவிக்கப்படும் விடுமுறைக் காலங்களில் பசி மறந்து நண்பர்களுடன் விளையாடுவேன். சூரியன் உதிக்கும் முன்பே மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டுத் திடலுக்கு எனது வயது நண்பர்களுடன் விளையாடக் கிளம்பி விடுவேன். நடுவில் கால்பந்து மைதானம். பசுமையான அந்த மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் மூன்று காலரிகள். ஒவ்வொரு காலரியும் சுமார் 26 படிக்கட்டுகளைக் கொண்டது. ஒவ்வொரு காலரியாக ஏறி, இறங்கி நண்பர்களுடன் நான் அடிக்கும் கூத்து, இரவெல்லாம் கால் வலியேற்பட்டு அதன் பின் அம்மா காலை அமுக்கி சுடுதண்ணீரில் ஒத்தடம் தருவாள்.

அன்றைய காலங்களில் கால்பந்து பிரபலமாயிருந்தது. சீசாகோவா, போர்ட்ரஸ் கோவா, மர்மகோவா போன்ற புகழ்பெற்ற அணிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விளையாடி உள்ளன. இதனைப் பார்க்க வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் ஏராளமான கூட்டம் வரும். உலகத்தமிழ் மாநாட்டை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இந்த ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தான் நடத்தினார். முதல் முதலாக அடிபம்ப் என்பது அம்மாநாட்டையொட்டி தான் அறிமுகமானது. இப்போது அந்த அடிபம்ப்பிற்கு பெயர் டப்பா பம்ப். ஆனால், அப்போதெல்லாம் அதற்குப் பெயர் எம்.ஜி.ஆர் குழாய். காலையில் இருந்து மாலை வரை விளையாடி விட்டு இந்தக்குழாய் தண்ணீரைப் பருகி விட்டு தான் வீட்டுக்குச் செல்வோம். முன்பெல்லாம் வெயிலில் அலைந்து வயிறு வலித்து கழிப்பறை செல்ல வேண்டும் என்றால் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கண்மாய்க்குச் செல்ல வேண்டி வரும்.

மதுரையில் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடத்தியதால் பல இடங்களில் இலவசமாக கழிப்பறைகள் கட்டப்பட்டன. வீடுகளைத் தவிர்த்து முதல் முதலாக நகர்ப்புறங்களில் கட்டப்பட்ட கழிப்பறைகள் அவைகள் தான். அந்தக் கழிப்பறைகளை தற்போது மதுரை மாநகராட்சி பல இடங்களில் நவீன கட்டணக் கழிப்பிடம் எனப் பெயர்பலகை மாட்டி வசூல் செய்து கொண்டிருப்பது தனிக்கதை.

ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகிலேயே பூங்கா, அதில் இருக்கும் வெட்டரிவாள் தாங்கிய மிகப்பெரிய சிலை பலருக்கு பயத்தை உருவாக்கி கோரிப்பாளையம் பள்ளிவாசலில் மந்திரித்து தாயத்து கட்டும் அளவிற்கு தோற்றத்தில் கொடூரமாக இருக்கும். தற்போது அங்கு பூங்கா என்ற பெயரில் பூங்கா இல்லாவிட்டாலும் சிலை அப்படியே நின்று கொண்டிருக்கிறது. அப்பூங்காவைத் தாண்டிச் சென்றால் மின்வாரிய அலுவலகம். அங்கு ஞாயிற்றுக்கிழமையாகி விட்டால் திரை கட்டி படம் போடுவார்கள்.

இங்கு மட்டுமல்ல ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் பின்புறம், ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நார்த் பட்டாலியன் பிரிவு, தற்போது நத்தம்சாலையில் இரண்டு தியேட்டர்களைக் கொண்டுள்ள காம்ப்ளக்ஸ் எதிரில் இருக்கும் ராம்நாட் பட்டாலியன், ரேஸ்கோர்ஸ் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு, டி.ஆர்.ஓ.காலனி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு, திருவள்ளுவர் போக்குவரத்து பணிமனை என பல இடங்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் வாரம், வாரம் இலவசமாக படம் திரையிடப்படும்.

எங்கள் பகுதி மட்டுமின்றி தல்லாகுளம், அய்யர்பங்களா, மூன்றுமாவடி என பல இடங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கோவிலுக்குச் செல்வது போல கூட்டமாக படம் பார்க்க வருவார்கள். இந்தப்பழக்கம் எங்கள் தெருவில் உள்ள தேசிக விநாயகர் கோவில் திருவிழாவிலும் திரைகட்டி படம் போடும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டது. திரை முன்பு குவிந்திருக்கும் குழந்தைகள் படம் பார்க்காது தங்களுடைய நண்பர்களுடன், குறிப்பாக படம் போட்டவுடன் விளக்கு அணைத்த பிறகு கள்ளன், போலீஸ் விளையாட்டைத் துவக்கி விடுவார்கள். படம் முடிவதற்குள் அவர்கள் விளையாட்டும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த வாரம் அந்த விளையாட்டு என்பது துவங்கும். இப்படியாக வாரம், வாரம் ஆரவாரம் என்பது குழந்தைகளுக்கு உண்மையில் அன்று கிடைத்தது. நான் சொன்ன எந்த இடத்திலும் இப்போது படம் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி வந்த பிறகு பேச்சு என்பதே குறைந்து போய் விட்ட நிலையில், திரைகட்டி படம் எப்படி போடுவார்கள்?

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம், எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கம் என அழைக்கப்படுகிறது. அங்கு பலமுறை முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது வந்திருக்கிறார். கபடி விளையாட்டு இந்த மைதானத்தில் மிகப்பிரபலமாக நடக்கும் போட்டியாகும். அன்றைய காலத்தில் மதுரை மாவட்டத்தில் எங்கு கபடி போட்டி நடந்தாலும், கோ.புதூரைச் சேர்ந்த டான்போஸ்கோ அணி தான் முதல் பரிசைத் தட்டிச்செல்லும். அதற்கு அடுத்ததாக மேலக்கோபுரவாசல் பகுதியைச் சேர்ந்த உதயகதிரவன் அணி இரண்டாவது பரிசைப் பெறும். இந்த போட்டிகளைப் பார்த்து தென்மாவட்டங்கள் முழுவதும் நூற்றுக்கணக்கான கபடி அணிகள் உருவாகின. இன்று தமிழகத்தின் மிகப்பிரபலமாக உள்ள அணிகளின் பயிற்சியாளர்கள் அனைவரும் ரேஸ்கோர்ஸ் விளையாட்டுத் திடலில் தான் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை செல்லூரைச் சேர்ந்த அணியினர் மேலூர் சாலையில் உள்ள உத்தங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியின் போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் இறந்து போக, மதுரை மாவட்டத்தில் செல்லூர் அணி விளையாடவும், கபடி போட்டி நடத்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் செல்லூர் அணி தனது பெயரை மாற்றிக்கொண்டு விளையாட வந்தது.

கபடி விளையாட கூட்டம் சேர்வதைப் போல காற்றடிக்கும் காலங்களில் பட்டம் விடுவதற்காக நூற்றுக்கணக்கானோர் குவிந்து விடுவார்கள். இதில் பெரும்பாலும் சிறுவர்கள் தான். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் நடுவில் கட்டப்பட்ட கட்டிடத்தில் ஏணி ஒன்று அமைக்கப்பட்டது. அதில் இருந்து பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த ஏணியில் ஏறி நின்று ஏராளமானோர் பலர் பட்டம் விடுவார்கள். அப்போது கலர் பேப்பரில் பட்டம் செய்து கொண்டுவரும் சிறுவர்களை மற்றவர்கள் பொறாமையாகப் பார்ப்பதும், அதை அவர்கள் பெருமையாக கருதுவதும் வாடிக்கையாக இருக்கும். என் தந்தை வாங்கும் "தீக்கதிர்" நாளிதழில் பல பேருக்கு பட்டம் செய்து கொடுப்பதால் என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மாதாகோவில் அருகே இருக்கும் சூப்பர் ஸ்டோரில் வண்ண, வண்ண பேப்பரில் செய்யப்பட்ட பட்டங்கள் வந்ததும் அதை வாங்குவதற்காக காசு சேர்க்க, அம்மா சொல்லும் வேலையை தட்டாது செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை இதற்காகவே அதிகரிக்க ஆரம்பித்தன.

மைதானத்தில் இப்படிப்பட்ட விளையாட்டுகளால் கோடை விடுமுறை காலத்தில் கூட்டம் நிரம்பி வழியும் என்றால், தெருக்களில் பெண் குழந்தைகளின் கூட்டம் அதைவிட அதிகமாக இருக்கும். கண்ணாமூச்சி குழந்தைகளுக்கு மிகப்பிடித்தமான விளையாட்டு. "கண்ணாமூச்சி ரே ரே, காதடைச்சா ரே ரே! ரெண்டு முட்டைய தின்னுட்டு மூனு முட்டைய கொண்டு வா" என்ற குழந்தைகளின் குதூகலத்தில் தெரு முழுவதும் மகிழ்ச்சி வழிந்தோடும். கூட்டம், கூட்டமாக குழந்தைகள் விளையாடும் விளையாட்டு "கொலை கொலையா முந்திரிக்கா". துண்டை பிரிமனை போலச்சுற்றி முதுகிற்குப் பின் போட்டு அவுட்டாக இந்த விளையாட்டின் போது படிக்கும் பாட்டு தான், "கொலை கொலையா முந்திரிக்கா- நரிய நரிய சுத்தி வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்-கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி".

சாக்பீசால் வட்டம் போட்டு அதற்கு நடுவில் புளியங்கொட்டைகளைப் போட்டு செதுக்கு முத்து விளையாடுவது, அதே புளியம்கொட்டைகளை வைத்து பல்லாங்குழி விளையாடுவது, ஆடு,புலி, ஆட்டம் விளையாடுவது, தாயம் விளையாடுவது, நொண்டி விளையாடுவது, பாண்டி விளையாடுவது, கயிறு கொண்டு தாவிக்குதிப்பது, நீச்சல் அடிப்பது, ராஜா-பொக்கா விளையாடுவது என பல விளையாட்டுகள் சிறுவர்களிடையே பிரபலம். கொஞ்சம் வெவரமான சிறுவர்கள் ஈ காசு விளையாடுவார்கள். தங்கள் கீழே போடும் காசில் ஈ உட்கார்ந்தால் ஜெயித்ததாக அர்த்தம். தோற்றவர் பிலிமோ, தீப்பெட்டி படமோ தரவேண்டும். தங்களுடைய காசில் ஈ உட்கார வேண்டும் என்பதற்காக மிட்டாய் தின்று விட்டு எச்சிலைத் தொட்டு காசு போட்டு ஏமாற்றவும் செய்வார்கள். இதைப் பார்த்து கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொண்டு வந்து காசைக் கழுவிவிட்டு போட்டி நடத்தவும் செய்வார்கள்.

அந்த காலத்தில் சிகரெட் அட்டையை வைத்து சிறுவர்கள் வெட்டுச்சீட்டு விளையாடுவது அதிகமாக இருக்கும். மைதானத்தில் இருந்து வந்ததும் களைத்துப் போய் உட்காரும் போது இந்த விளையாட்டுத் துவங்கி விடும். பாசின்சோ என்ற சிகரெட் அட்டைக்கு அப்போது அவ்வளவு மவுசு. இந்த அட்டைக்காக பெட்டிக்கடைகளுக்குச் சென்று காலிப்பெட்டிகளை எடுத்து வந்து பெருமை பொங்க காட்டுவதும் வீரம்கொள்ள நிகழ்வாக அப்போது கருதப்பட்டது. இந்த வெட்டுச்சீட்டுப் போட்டியில் பரிசுப்பொருளாக சினிமா பிலிம்களை வைத்து விளையாடுவார்கள். அதற்கு அடுத்து தெருவில் சிறுவர்கள் அதிகமாக விளையாடுவது கிட்டி தான். சிறு கம்பின் இருமுனையையும் ஊசியாக சீவி விட்டு, அதை பெரிய கம்பைக் கொண்டு கீந்தி விளையாடும் விளையாட்டு தான் இந்த கிட்டிப்புல்.

இது தவிர குண்டு விளையாடுவது ஒரு கோஷ்டிக்கு பிடிக்கும். குழிபறித்து குண்டு விளையாடுவது ஒரு வகை என்றால், நீண்ட தூரம் அடுத்தவனின் குண்டை அடித்துக் கொண்டே செல்வது "பூந்தா" என்ற விளையாட்டு. அடுத்து பம்பரக்கட்டை. இதற்காக நாட்டுக்கருவேலை மரத்தில் இருந்து கட்டையை சீவி பம்பரம் செய்வோம். இந்த கட்டையைக் கொண்டு செய்யப்பட்ட பம்பரங்களைக் கொண்டு விளையாடும்போது பலரின் பம்பரங்கள் உடைந்து போகும். ஆக்கர் வைக்காமலே குத்தும் குத்திலேயே பம்பரம் உடைந்து போகும் போது கதறும் சிறுவனின் தாயார் வந்து அவனது முதுகில் அறைந்து அழைத்துச் செல்வது வாடிக்கையான விஷயமாகும்.

இது போதாதென்று ஞாயிறன்று விளையாடச் செல்கிறோம் எனக் கூறிவிட்டு கவட்டை வாரை எடுத்துக் கொண்டு தற்போது மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக இருக்கும் வண்டியூர் கண்மாயில் குளிக்கச்செல்வோம். இதற்காக எங்கள் தெருவில் இருந்து மாடு மேய்க்கச் செல்லும் கிருஷ்ணபாண்டி, ராஜபாண்டி சகோதரர்களிடம் நீச்சல் கற்றுத்தரச்சொல்லி பலமுறை பலர் கண்மாய் தண்ணீரைக் குடித்த கதை உண்டு.

குளித்து விட்டு கற்களை எடுத்து தவளைக்கல் விடுவது என்பது பலத்த போட்டியாக இருக்கும். யாருடையக்கல் ஐந்து முறைக்கு மேல் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு மேலே செல்கிறதோ அவர்கள் ஜெயித்ததாக அர்த்தம்.

கண்மாயில் பயிரிடப்பட்டிருக்கும் வெள்ளரிக்காய்களையும், பழங்களையும் பறித்துக் கொண்டு கருப்பாயூரணி அருகே இருக்கும் பாண்டிகோவிலில் வைத்து தின்போம். வெள்ளரிப்பழத்திற்கு நாட்டு சர்க்கரையை வாங்கிச்செல்வோம். அவ்வளவு சுவையாக இருக்கும். இப்படி வெள்ளரிக்காய் பறிக்கும் போது தோட்டக்காரன் விரட்டுவது அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சியாகும். எங்கள் ஊரில் ஏராளமான கண்மாய்கள் முன்பிருந்தன. காந்திபுரம், வண்டியூர், சம்பக்குளம், புதுக்குளம் என பல்வேறு பகுதிகளில் இருந்த கண்மாய்களுக்கு நீச்சல் அடிக்க வார, வாரம் சென்று வந்து அப்பா, அம்மாவிடம் அடிவாங்கும் கூட்டம் நாங்கள்.

ஒவ்வொரு வாரத்தின் ஞாயிறன்று தெருவில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் பாட்டு, படிப்பு, நடனம், நாடகம் என விளையாட்டுப் போக்காக நடத்தப்பட்ட நிகழ்வுகளைப் பார்க்க அனைத்துப் பெற்றோர்களும் கூடுவதால் அன்றைய நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டுவிடும் எங்கள் தெரு. விடுமுறை நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலர், முறுக்கு, கடலைமிட்டாய் என வித்தியாசம் பார்க்காமல் வாங்கித்தருவார்கள். முறுக்கு என்றால் மாலை, கடலைமிட்டாய் என்றால் பாக்கெட், கலர் என்றால் லவ்வோ என வகை, வகையாக கவனிப்பு. இதற்காக பாட்டுப்போட்டிக்காக சினிமாப் பாடல்களைப் பாடிக்கொண்டே திரியும் குழந்தைகள் ஏராளம். நாடகம் என்றவுடன் குழந்தைகளுக்குள் பேசி ஸ்கிரிப்ட் உருவாகும். இதில் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் நடிப்பார்கள். இதனால் பள்ளியில் நடக்கும் நாடகங்களில் கலந்து கொள்வதற்கு நல்ல பயிற்சியாகவும் அமையும். ஆனால், தற்போது பள்ளிகளைத் தவிர ஆண், பெண் பேதமில்லாமல் பழக இடம் கிடைக்காமல் போய்விட்டது.

தற்போது பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோடைகால பயிற்சி என்ற பெயரில் மதுரை காந்தி மியூசியத்தில் குழந்தைகளுக்கான முகாம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓவியம், பாட்டு, சிலம்பம், நடனம் என தங்களுக்குப் பிடித்த விஷயத்தில் ஈடுபாட்டோடு ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டுள்ளதைப் பார்க்கும் போது மிகமகிழ்ச்சியாக இருந்தது.

ஏற்கனவே, நமது பாட்டி, தாத்தா சொல்லித்தந்த விளையாட்டுக்களை மறந்து விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை அதாவது ஒன்றரை மாதகாலம் தங்களுக்குப் பிடித்த விஷயத்தை, அதுவும் கற்க வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாப்பாட்டுக் கூடையோடு குழந்தைகள் செல்வதைப் பார்க்கையில் பயிற்சி என்பது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் பார்க்க முடிகிறது.

பாடங்களை மனனம் செய்து பழக்கப்பட்ட குழந்தைகள்,விளையாட்டுகளை மறந்து போய் வெகுநாட்களாகிறது. அவர்களுக்கான விளையாட்டுக்களை பெற்றோர்கள் ஞாபகமூட்டுவதுடன் அதைச் சொல்லித்தர வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் உடல்நலத்திற்கு மட்டுமின்றி மனநலனையும் பாதுகாக்கும். நெருக்கடி மிகுந்த வாழ்க்கை முறையில் விளையாட இடம் இல்லாமை என்பதும், புதிய விளையாட்டுத் திடல்கள் உருவாக்கப்படாததும் எதிர்காலத் தலைமுறையினரின் விளையாட்டுத் திறனை முற்றிலும் முடக்கிப்போடும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. ஆனாலும், அன்று நெருக்கடி மிகுந்த சந்துகளில் வசித்த போது விளையாடக்கூடும் கூட்டத்தில் சேக்காளிகளோடு இருந்த நட்பு, இன்றைய குழந்தைகளுக்குத் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சிகளைப் பெற்றோர்களாகிய நாம் தாம் செய்ய வேண்டும். "கண்ணாமூச்சி ரே ரே, காதடைச்சா ரே ரே! ரெண்டு முட்டைய தின்னுட்டு மூனு முட்டைய கொண்டு வா"."கொலை கொலையா முந்திரிக்கா- நரிய நரிய சுத்தி வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்-கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி". விளையாட்டுச்சத்தங்கள் கேட்க ஆரம்பிக்கட்டும் வீடுகளில் இருந்து, தெருவுகளில் இருந்து ஆரவாரமாக.

-ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)