தமிழில் மிகவும் முக்கியமானதொரு கோட்பாடு பின்நவீனத்துவம். Post-modernism - என்பது தமிழில் 'பின்நவீனத்துவம்' என்று அழைக்கப்படுகிறது. இது போன்று மேற்குலகுகள் வரையறுக்கும் கோட்பாடுகள் மேற்குலக பண்பாடு, வரலாறு, வாழ்வியல், சடங்குகள் மற்றும் சிந்தனை சார்ந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காலனியம், பின்காலனியம், இருத்தலியம், கட்டுடைப்பு, படைப்பாளி இறந்து விட்டான் எனப் பல்வேறு கோட்பாடுகள் தமிழக, இந்திய மரபில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்திய குறிப்பாகத் தமிழக மரபு என்பது மேற்குலக கருத்துக்களை அவ்வாறே எந்தவித மாற்றுச் சிந்தனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் மரபாகும். இது குறித்து கார்த்திக்கேசு சிவத்தம்பி அவர்கள் "பின்நவீனத்துவம் எனும் இவ் 'வெளிப்பாடு' மேற்குலகுக்கு (ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும்) வரையறுக்கப்பட்டுள்ள ஒன்றாகவே பார்க்கப்படல் வேண்டுமென்பதை அங்குள்ள சிந்தனையாளர் பலர் வற்புறுத்தி வருகின்றனர்" (நவீனத்துவம்- தமிழ் - பின்நவீனத்துவம், ப. 165) என்று கூறுகிறார். மேலும் அவர், "எனினும் 'பூகோளக் கிராம'மாகச் சுருங்கியுள்ள இன்றைய உலகில், ஒரு பகுதியின் கருத்துக்கள் இன்னொரு பகுதியில் ஊடாடுவது என்பது, அதுவும் ஆதிக்க பலமுள்ள மேற்கின் கருத்து மூன்றாவது உலகின் சிந்தனையைப் பாதிப்பது என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே. அந்தச் சிந்தனையை உள்வாங்கி எமது பண்பாடு - பண்பாட்டு வெளிப்பாடுகளை ஆராயும் பொழுது, எமது சூழலில் அதன் இருப்பு எத்தகையது, அது எந்த அளவுக்கு எந்த முறையில் வேர்விட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளல் அவசியமாகிறது" (மேலது, ப. 165) என்று கூறுவதைக் கவனிக்கவும்.

தமிழ் இலக்கிய சூழலைப் பொறுத்துவரை நவீனம், பின்நவீனம் என்பதிலேயே எழுத்தாளர்கள், ஆய்வாளர்களிடையே பெருத்த கருத்துக் குழப்பங்கள் நிலவுகின்றன. மேற்குலகில் மொடேணிசத்தை இலக்கியக் கலைச்சொல் அகராதியைத் (A Glossary of Literary Terms) தயாரித்த பிலிப் ஏப்றாம்ஸ் (1993) "மொடேணிசம் என்பது, இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் - சிறப்பாக, முதலாவது உலக யுத்தத்தின் (1914-18) பின்னர் இலக்கியத்திலும் பிற கலைகளிலும், அவற்றின் பொருள், உருவம், எண்ணக் கருக்கள், பாணிகள் ஆகியவற்றிலே தோன்றிய, புதிய, பிரித்தறியக்கூடிய அமிசங்களை இனங்காண்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் பதமாகும். மொடேணிசம் என்பது திட்டவட்டமாக எதைக் குறிக்கின்றது என்பது அதனைப் பயன்படுத்துவோருக்கிடையே வேறுபடுமெனினும், பொதுப்படையாக நோக்கும்பொழுது, அது மேற்கத்தியக் கலையில் மாத்திரமல்லாது, மேற்கத்தியப் பண்பாட்டிலே ஏற்பட்ட, வேண்டுமென்றே செய்யப்பட்டனவும் தடையற்ற பண்புடையனவுமான, மரபுத் தளவிடுபாடுகளைக் குறிக்கும் என்று கூறுவர்" (ப. 119) என்று வரையறுக்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், "மேற்கத்தியக் கலையில் மாத்திரமல்லாது, மேற்கத்தியப் பண்பாட்டிலே ஏற்பட்ட, வேண்டுமென்றே செய்யப்பட்டனவும் தடையற்ற பண்புடையனவுமான, மரபுத் தளவிடுபாடுகளைக் குறிக்கும்" என்பதைத்தான். ஆனால், தமிழில் வெளிவந்துள்ள நவீனம் மற்றும் பின்நவீன படைப்புகள் இந்தக் கருத்தியலைக் கைக்கொண்டுள்ளதா என்று பார்க்கின் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். இந்திய பண்பாட்டில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், படைப்புகளில் அது சாத்தியப்படாமல் மரபு, பண்பாடு என்கிற பெயரில் மீண்டும் மீண்டும் மனித சமூகத்திற்கே ஏற்றவற்றையே எழுதும் போக்குள்ளது. பின்நவீனத்துவம் என்பது மரபுவழிச் சமூக அமைப்பில் நிலையானவையென்று கருதப்பட்டவற்றை, மாற்றவே முடியாதது என்பதை, குறிப்பாக இந்திய மூளை வீங்கிகள் கூறுவதைப் போல சனாதனம் என்கிற சமத்துவமற்ற, காட்டுமிராண்டித்தனமான கோட்பாட்டைக் கேள்வி கேட்கும் படைப்புகள் அரிதாகவே தென்படுகின்றன. ஆரம்பகால சிறுகதைகள், நாவல்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டு, சனாதன தர்மத்திற்குக் கேடுறாத வண்ணம் சிற்சில சீரமைப்புகளை மட்டுமே பேசின. மயூரம் வேதநாயகம் பிள்ளை, பி.ஆர். ராஜம் ஐயர், அ. மாதவையா போன்ற படைப்பாளிகளைக் கூறலாம். சாதிய பெயர்களைக் கூடத் துறக்க முடியாத இவர்களும் இவர்களுக்குப் பின்னர் வந்த, தங்களை நவீன படைப்பாளிகள் என்று சுய அறிவித்துக் கொண்ட படைப்பாளிகளும் அவர்களது படைப்புகளும் நவீனம் என்பதைக் கூட இதுவரைக் கடந்து வரவில்லை என்பதே உண்மை. ஆரம்பகால படைப்புகள் சமூக சீர்திருத்தத்தைப் பேசின. குறிப்பாக விதவைத் திருமணம், குழந்தைத் திருமண எதிர்ப்பு, சாதியத்திற்கு எதிரான சிந்தனைகளைப் பேசின. ஆனால் இதற்கு அடிநாதமாக இருக்கும் பார்ப்பனியம் குறித்தோ, அது மையமிட்டிருக்கும் இந்து மதம் மற்றும் கடவுள்கள், தொன்மங்கள், புராணங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள் குறித்தோ அவர்கள் பேசவே இல்லை. இதில் சில உடைப்புகளைச் செய்த படைப்புகளாகத் தொண்ணூறுகளுக்குப் பின் உருவான தலித்தியம், பெண்ணியப் படைப்புகள் அமைந்தன. இவைகூட பழம் பண்பாட்டு அடுக்குகளுக்குள் சிக்கிக் கொண்டு கூக்குரலிட்டு அழுகிற ஒன்றாகவே வெளிப்பட்டன.

மேற்குலகில் ஏற்பட்ட சமூகவியல், தொழிற்புரட்சி போன்றதொரு புரட்சி இந்தியாவில் நிகழவே இல்லை. இந்தியச் சமூகத்தில் நிலவுடைமையானது அரசர்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள் என்பதிலிருந்து மாற்றமடைந்து முதலாளித்துவமாக வளர்ச்சியடைந்தது. ஆனால், மேற்குலகில் இது பூரண அழிவைச் சந்தித்தது. மனிதனையும் மனித சமூகத்தையும் விளக்கிப் புதிய தரிசனங்களைத் தந்த ஃபிராய்டிசம், மார்க்சீயம் போன்ற காரணிகள் இதற்குக் காரணமாக அமைந்தன. ஆனால், இந்தியாவில் சாதியம் கெட்டிதட்டிப் போனதால் இத்தகைய புதிய சமூகவியல் சார்ந்த கோட்பாடுகள் உருவாகவே இல்லை. அய்யங்காளி, அயோத்திதாசர், ஜோதிபா பூலே, அம்பேத்கர், பெரியார் போன்றோர் இதற்கெதிராகக் கிளர்ந்து எழுந்தாலும் அவர்களது எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மதம் கடவுள் சார்ந்து அழுக்குப் படிந்து கிடந்த இந்திய மனங்களைச் சுத்தப்படுத்த இவர்களால், இவர்களது சிந்தனைகளால் முடியாமல் போனது. இதனால், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள் முன்னெப்போதையும்விட வானளாவ வளர்ந்தன. இதற்கு விவேகானந்தர் போன்ற வட இந்திய மதவாதிகள் முக்கிய பங்காற்றினர். இந்தச் சிந்தனைப் போக்கு இந்தியாவை உலகம் நோக்கும் முறைமையை மீண்டும் மோசமாக்கியது.

"மேற்குலகில் உள்ளது போல், இங்கும் 'கடந்த காலத்திலிருந்து தளவேறுபாட்டு விடுபாடு' ஒன்று ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் அந்த 'விடுபாடுகள், அறுத்தெறிப்புகள்' (tearing - off) யாவை, அவற்றின் சமூக உட்கிடக்கை யாது என்பதை நோக்கல் வேண்டும். இங்கும் மேற்குலகில் ஏற்பட்டது போன்ற பார்வை வித்தியாசங்கள், எடுத்துரைப்பு வேறுபாடுகள் ஏற்பட்டனதான். ஆனால் அவற்றின் 'தரம்' (quality) வேறுபடுகின்றன. காலனித்துவத்தினூடேயும் இங்கு ஒரு சனநாயகமயப்பாடும் (democratisation) சமயச் சார்பின்மையும் (secularisation) ஏற்படுகின்றன. இவை ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் முதலே, பிரெஞ்சுப் புரட்சிக் காலம் முதலிலிருந்தே வந்தவை. எமக்கு நவீனத்துவத்துடனேயே வருகின்றன" என்கிற கார்த்திக்கேசு சிவத்தம்பியின் கூற்று எவ்வளவு நிதர்சனமானவை" (ப. 170).

மேலும் அவர், "மேற்குலக நவீனத்துவத்துக்கும் எமது தென்னாசிய, இந்திய, தமிழ், இலங்கை நவீனத்துவத்துமுள்ள முக்கியமான வேறுபாடு, மேற்குலகில் நவீனத்துவம், நவீனத்துவத்துக்கு முந்திய அம்சங்களை (கைத்தொழிற் புரட்சி, முதலாளித்துவம் காரணமாக) ஏறத்தாழ முற்றாகவே அழித்தது. மேற்குலகின் முந்தைய காலங்களில் இந்நடைமுறை நடந்தேறியது. ஆனால், எம்மைப் பொருத்தவரையில் இந்தக் (காலனித்துவம், கிறித்தவமயவாக்கம், மேனாட்டு மயவாக்கம் வழியாக மேற்கிளம்பிய) நவீனத்துவம், பாரம்பரிய மீட்புணர்வையும் ஏற்படுத்திற்று. மேற்கூறிய மூன்றும் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளினால் நாம் நமது 'முந்தைய பண்பாடு' பற்றிய ஒரு மீளுருவாக்கத்தைச் சிந்தித்து, சிந்தனை வழி பெறப்பட்ட அதற்கு உருவம் கொடுத்தோம் (reification)" (170) என்கிறார். இதேதான் அச்சுபிசகாமல் இந்திய, தமிழக படைப்பாளிகள் மேற்கொண்டனர்.

இன்றும் படைப்பாளிகளிடையே 'சமஸ்கிருதமயமாக்கம்' (Sanskritisation) எனும் கோட்பாடு மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. இந்திய மனம் என்பது அவர்களறியாமலேயே சாதியத்திற்குப் பழகிப் போன ஒரு மனமாக உள்ளது. நவீனத்துவம், மேற்குலகின் பெரும்பாலான நாடுகளில் 'சமத்துவமான வளர்ச்சி'யைக் (equal development) கொண்டிருந்தது. ஆனால், இந்தியாவில் சமனற்ற வளர்ச்சியையே இன்றும் கொண்டிருக்கிறது. இது பழையும் புதுமையும் கலந்த ஒரு மயக்கமாக மயங்கிக் கிடக்கிறது. இதனால் நவீனம் என்பதும் நவீனத்துவம் என்பதும் இந்தியர்களைப் பொறுத்தவரையில் வளராத குழந்தையாகவே உள்ளது.

மேனாட்டு இலக்கியச் சிந்தனை முறைமையில் இருபதாம் நூற்றாண்டு மிக முக்கியமான ஒரு காலப் பகுதியாகும். ஏறத்தாழ 1900 வரையில் முக்கியத்துவம் பெறத் தொடங்கும் தோற்றப்பாட்டுவாதம் (phenomenology) முதல், 1920, 1930களில் முக்கியத்துவம் பெறும் மார்க்சீய வாதம், 1940 - 1950களில் முக்கியத்துவம் பெறும் புதுமுறை விமர்சனம் (new criticism) ஆகியன ஊடாக, 1960களில் கட்டமைப்பு (structuralism), அதனைத் தொடர்ந்து வரும் பின்அமைப்பியல்வாதம் (post-structuralism), இதினுள் இடம்பெறும் கட்டவிழ்ப்புவாதம், ஃபூக்கோவின் அதிகாரமையவாதம், லக்கானின் நினைவிலி (unconscious) பற்றிய நோக்கு ஆகியன முக்கியமானவை. பின்னர் 1980களில் முக்கியத்துவம் பெறும் பண்பாட்டியல் ஆய்வு (cultural studies), நவ வரலாற்றுவாதம் (new historicism), பண்பாட்டுப் பொருள்முதல்வாதம் (cultural materialism) ஆகியன வரை மேனாட்டு இலக்கிய விமர்சன மரபு பலத்த சிந்தனையோட்டங்களின் தாக்கங்களுக்கு முகம் கொடுத்தது. இவற்றினூடே தோன்றி முக்கியத்துவம் பெற்ற வாசகர் மையவாதங்களும் (reader - oriented theories) மிக முக்கியமானவை. இக்கோட்பாடுகள் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் முக்கியத்துவம் பெறுகின்றன. போரின் கொடுமை, அதிகார வெறி, தனிமனித, பொதுமனித ஒழுக்கமின்மை, மதம், இனம், சாதிய மூடத்தனம் போன்றவை இக்கோட்பாடுகள் எழக் காரணமாயிற்று.

சமீபத்தில் பழைய மாணவர்கள் அடங்கிய ஓர் புலனக் குழுவில் ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. ஒருசாரார் படைப்பை மட்டுமே விமர்சிக்கலாம். படைப்பாளியை விமர்சிக்கக் கூடாது என்று 'படைப்பாளி இறந்து விட்டான்' என்கிற மேலை இலக்கிய கோட்பாட்டின் பக்கமும் மற்றொரு சாரார் இல்லை படைப்பாளியையும் சேர்த்தே விமர்சிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். பெரும்பான்மையர் படைப்பாளியை விமர்சித்தல் கூடாது. படைப்பை மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்று கூற, எதிர்தரப்பில் நான் மட்டுமே படைப்பாளியையும் சேர்த்தே விமர்சிக்க வேண்டும் என்று வாதிட்டேன். அந்தப் பழைய மாணவர் குழுவில் பேராசிரியர்கள், எழுத்தாளர்களும் இருந்தனர். அதில் ஒரு எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் படைப்பைத் தவிர படைப்பாளியை விமர்சிக்கவே கூடாது என்று வாதிட, அவருக்குத் துணையாகப் பலரும் வாதிட்டனர். இறுதியில் அந்த விவாதம் தனிமனித தாக்குதலாக மாறியது.

இங்கு எழுதக் கூடிய எழுத்தாளர்கள் பலரும் தனிமனித வாழ்வில் மிக மோசமானவர்களாகவும் தங்கள் படைப்புகளில் புனிதமானவர்களாகவும் இருக்கின்றனர். தமிழக சூழலில் முற்போக்கு பேசும் எழுதும் பலரும் மிக மோசமான சாதிய, மதவாதிகளாகவும், ஆணாதிக்கவாதிகளாகவும், ஆணவவாதிகளாகவும் இருப்பது பலரும் அறிந்ததே. குமரி மாவட்டத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் சாதிய, மதவாத (உள்மதவாத - கத்தோலிக்கம், தென்னிந்திய திருச்சபை) ஆதிக்கவாதிகளாக இருப்பது எனக்குத் தெரியும். ஆகவே, இவர்கள் மீது எனக்கு எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாது. எனக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் இவர்கள் மீது எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாது. ஆனால், இவர்கள் தாங்கள் மிகப்பெரியவர்கள் என்கிற கற்பனா உலகில் வாழ்ந்து மடிந்து போகும் அற்பர்களாக உள்ளனர். ஒரு பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஒருவர் நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் அ. மார்க்ஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, தனது பேச்சின் இடையே நான் இந்தச் சாதிய சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறினார். இதைக் கேட்ட அந்தப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளரான அந்த மனிதர் அந்தக் கூட்டத்தின்போதே எழுந்து, நீங்கள் இந்தச் சாதியா என்று கட்டித் தழுவிக் கொண்டார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் இது முகம் சுழிக்க வைத்தது. அந்த நபர் சாதிய கூட்டங்களில் கலந்து கொள்பவர். தனது படைப்புகளில் கிறித்தவத்தின் எல்லா கிளைகளையும் பிற மதங்களையும் விமர்சிக்கும் அவர் தான் சார்ந்த சபையை மட்டும் விமர்சிக்காது கடந்து செல்பவர். இது குறித்து பலரும் விமர்சனம் செய்துள்ளனர். ஆக, படைப்பினை விமர்சனம் செய்யும் அதேவேளை படைப்பாளியும் விமர்சனத்திற்குரியவராகிறார்.

இங்குதான் லக்கானின் கூற்று முக்கிய இடம்பெறுகிறது. லக்கானின் கருத்துப்படி மனிதன் மொழிக்கு அப்பாலே செல்வது என்பது முடியாத ஒரு காரியமாகும். படைப்பின் மூலமாக படைப்பாளி முன்வைக்கிற கருத்துகள் அல்லது சிந்தனைகள் என்பது மொழி அவனுக்குக் கற்பித்ததன் விளைவாகவே அமைகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு மொழியும் உடலும் ஒன்றாகப் பயணிப்பதில்லை. மொழி ஒன்றைக் கூறும்போது உடல் வேறொன்றை ஞாபகப்படுத்துகிறது. இதுபோலத்தான் படைப்பாளி தன் படைப்புக்குள்ளாக வேறொருவனாகவும், நடைமுறை வாழ்வில் மற்றொருவனாகவும் செயல்படுகிறான். படைப்பில் நியாயவானாக, நேர்மையாளனாக, சாதிய, மத மூடத்தனங்கள் அற்றவனாகக் காட்டிக் கொள்ளும் படைப்பாளி நடைமுறை வாழ்வில் மிக மோசமான விலங்காக இருக்கிறான். இதனடிப்படையில் அறநூல்களை எழுதிய திருவள்ளுவர் போன்றவர்களும் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். அவரது நல்லகாலம் அவரது காலத்தில் நாம் வாழவில்லை என்பது. அறம், தர்மம், நீதி, நியாயம் என்பவை யாருக்கானது என்கிற கேள்வி எழுகிறபோது படைப்பாளி தனது படைப்புகளில் வெளிப்படுத்தும் இதுபோன்ற வாதங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். அதுபோல படைப்பாளியும். படைப்பாளியின் தனிமனித வாழ்வை அவனது படைப்பில் பொருத்திப் பார்க்கக் கூடாது. அவனது படைப்பை மட்டுமே ஆராய்ந்து விமர்சனம் செய்தல் வேண்டும் என்கிற வாதம் ஒருவகையில் மோசமான மனிதனின் தன்னிரக்க குரலாக இருக்கலாம். மேலை நாட்டு கோட்பாடான இக்கோட்பாடு இந்தியச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாகவே படுகிறது. காரணம், இந்தியா என்கிற மிகவும் மோசமான பண்பாட்டு அடிப்படைகளைக் கொண்ட நாட்டிற்கு இந்தக் கோட்பாடு மிகப்பொருத்தமானதே.

இத்தகைய சூழலில் இலக்கிய விமர்சனத்தில், இலக்கியக் கொள்கை (literary theory) எனும் கருத்தியல் முக்கிய இடம்பெறுகிறது. ஒவ்வொரு இலக்கிய கோட்பாடுகளையும் ஒரே படைப்பிற்குள்ளாகப் பொருத்திப் பார்க்க முடியும். தமிழகச் சூழலில் எழுதும் எழுத்தாளர்களில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே தங்கள் கோட்பாடுகள் அறிந்து (முழுமையாக அல்ல) எழுதுகிறார்கள். வலதுசாரி எழுத்தாளர்கள் பெரும்பாலும் தங்கள் வலதுசாரித்தனம் அறிந்தே எழுதுகிறார்கள். இடதுசாரி எழுத்தாளர்களில் பலரும் முற்போக்கு வேடமிட்ட பிற்போக்குவாதிகளாகவே உள்ளனர். இடதுசாரி அமைப்பிலிருந்து வெளியேறி தனியொரு இலக்கிய அமைப்பை உருவாக்கி நடத்தி வரும் எழுத்தாளர் நடைமுறை வாழ்வில் மிகக் கேவலமான மனிதராக இருப்பதை நான் பார்த்துள்ளேன். பேராசிரியராகவும் இருக்கும் அவரிடம் தனிமனித ஒழுக்கம் கொஞ்சமும் கிடையாது. இடதுசாரி சிந்தனையாளராகக் காட்டிக் கொள்ளும் அவரிடம் இடதுசாரி சிந்தனைகள் குறித்த வாசிப்போ, அறிவோ சிறிதும் இல்லை.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களில் அமைப்பியல்வாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான படைப்பாளர்களுக்கு அமைப்பியல் வாதம் என்றால் என்ன? அது எந்தக் கருத்தியலை முன்வைக்கிறது என்ற புரிதலும் கிடையாது. முதல் தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் ஏன் படிக்க வேண்டும் என்கிற கேள்வியோடு எழுத வருவது இங்கு மட்டுமே சாத்தியமாகிறது. மேலை இலக்கிய கோட்பாடுகளை விடுங்கள், தமிழ் அல்லது வடமொழி இலக்கிய கோட்பாடுகளாவது தெரியுமா என்றால் அங்கும்கூடச் சுழியமே பதிலாக வருகிறது. இங்குக் கோட்பாடுகளைப் படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்கிற நிர்ப்பந்தமோ, கட்டாயமோ தேவையில்லை. ஆனால், நமக்கு முன் எத்தகைய எழுத்துக்கள் வந்துள்ளன, என்னென்ன கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, யார் யார் எழுதியுள்ளார்கள், எழுதுகிறார்கள் என்கிற குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா? சமூகத்தைக் கணிப்பதில் இவர்களது சிந்தனையின் போதாமைகள் இவர்கள் படைப்புகளில் தெளிவாக வெளிப்படுகின்றன. இந்தப் புள்ளியிலிருந்துதான் 'பின்அமைப்பியல்வாதம்' (post-structuralism) ஆரம்பமாகிறது. 1960களில் முக்கியத்துவம் பெற்ற இவ்வாதத்தின் தோற்றம் வளர்ச்சியில், சசூறே (Saussure) எனப்படும் பொறியியலாளரும் லெவி ஸ்த்ரோஸ் (Levi-Strauss) எனப்படும் மானிடவியலாளரும் முக்கியமானவர்கள். 'மொழி' மக்களிடையே எவ்வாறு செயலாற்றுகிறது, மொழியுடன், 'குறிகள்' (Signs), குறியீட்டு முறைமைகள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பது அமைப்பியல் வாதத்தின் மூலம் ஆராயப்படுகிறபோது பெரும்பாலான படைப்புகள் மொழி வளமோ, மொழிப் படிமமோ, குறியீடோ, மொழி ஏற்படுத்தும் நகைச்சுவை, ஈர்ப்பு, மகிழ்ச்சி, துக்கம் என ஏதுமற்ற ஜடமாகக் கிடக்கிறது.

இந்த இடத்தில் ஒரு படைப்பை ஒரு காலநிலையிலேயே வைத்துப் பார்க்க வேண்டும் என்கிற வாதம் பிழைபடுகிறது. இங்கு, காலங்களினூடாகப் பயணித்துப் பார்க்கின்ற வரலாற்று நோக்கு இல்லாமல் போய்விடுகிறது. படைப்பாளிகள் சில நிஜங்களைப் பிரதிபலிக்கிறார்கள் எனும் நிலைப்பாட்டை விடுத்து, நிஜங்கள் மொழியினால் கட்டமைக்கப்படுகின்றன எனும் நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். இதுதான் உண்மையும் கூட, சில நடைமுறைகள் மொழிகளால் உண்மை என்று கற்பிக்கப்படுகிறது. இங்குப் படைப்பாளியைவிட மொழி முக்கியமாகப்படுகிறது. இந்நநிலையில் படைப்பாளி (Author) என்பவர் முக்கியத்துவமில்லாது போய்விடுகின்றார். வாசகரே படைப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றார். உண்மையில் படைப்பு என்பது வாசகராalேயே பொருள் உணர்ந்து கொள்ளத்தக்கதாகப் பன்மைப் பொருளுடையதாக வாசகர் மையமாக மாறுகிறது. அப்படியானாலும், ஒரு சிறந்த படைப்புக்குள்ளிருக்கும் படைப்பாளி தன் படைப்புக்குள்ளிருந்து வெளிப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது போகிறது. அந்த வெளிப்படுதலை ஐயத்தோடு பார்க்கும் சூழலை சமூக நடைமுறை காட்டுகிறது. இங்குதான் மார்க்சிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. ரோலன்ட் பார்த் (Roland Barthes) 1970களில் ஒரு படைப்புக்கு ஓர் அர்த்தம் அல்லது பொருள் என்பது கிடையாது. படைப்பு என்பது வாசகனைப் பொறுத்து பன்முகப்படும். இதனால்தான், ஒருவருக்குப் பிடிக்காத ஒரு படைப்பு மற்றொருவருக்குப் பிடிக்கிறது, அதற்குப் பன்மைநிலை அர்த்தங்கள் உண்டு என்றார். வாசகர் மையம் சார்ந்த வாசிப்பு வாசகர்களைப் பொறுத்தவரை சரியாக இருக்கலாம். ஆனால், விமர்சகனைப் பொறுத்தவரை சரியாக இருக்க முடியாது. ஏனெனில் வார்த்தைகள் சொல்லும் பொருளுக்கு உள்ளும் வெளியும் பல அர்த்தங்கள் உள்ளன.

இந்த இடத்தில் படைப்புகள் குறித்த அமைப்பியல் வாதத்திலிருந்து பின்அமைப்பியல்வாதம் நோக்கி நகர்ந்த விமர்சனக் கோட்பாட்டின் முக்கிய இலக்கியக் கொள்கைகளுள் ஒன்று கட்டவிழ்ப்புவாதம் இருந்தது. இதனை முன்வைத்தவர் ஜாக் டெறிடா (Jacques Derrida) என்பவர். 'கட்டவிழ்ப்பு' (deconstruction) என்பது ஒரு படைப்பில் அதன் அர்த்தப்பாடு எவ்வாறு நிகழ்கிறது என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது ஒருவகை வாசிப்பு முறையாகவும் பகுப்பாய்வு முறைமையாகவும் அமைகின்றது. அமைப்பியல் வாதத்தின் முக்கிய கோட்பாடுகளை டெறிடா மறுதலித்து அதன் குறைகளை முன்வைத்து வேறொரு இலக்கிய கோட்பாடு உருவாக வழிவகுத்தார்.

பின் அமைப்பியல்வாதத்தின் பிரதான வெளிப்பாடாக எடுத்துக் கூறப்படுவது மிஷேல் ஃபூக்கோவின் நிலைப்பாடாகும். இவரது கருத்துப்படி 'கருத்தாடல்' அல்லது சொல்லாடல் என்பது சமகாலத்தில் நிலவும் அதிகாரத்துடன் இயைந்து நிற்பது என்பதும், 'மனிதாயதம்' என்பது கூட இந்த அதிகார முறைமையினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்பதும் ஆகும். இதனடிப்படையில்தான் இந்திய அல்லது தமிழக சூழலில் பல எழுத்தாளர்களும் இயங்கிக்கொண்டுள்ளனர். ஜெயமோகனைப் பொன்னீலன் புகழ்வதற்கான காரணமும் இதுவே. அதிகாரத்தைச் சார்ந்திருத்தல். இன்று விருதுகளுக்குள் ஒளிந்திருக்கும் மோசமான சாதிய, மத மனநோயை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தலித்திய எழுத்து, எழுத்தாளர் என்கிற வகைப்பாடு, பிற்படுத்தப்பட்ட எழுத்து, எழுத்தாளர், மிகவும் பிற்படுத்தப்பட்ட எழுத்து, எழுத்தாளர், முற்படுத்தப்பட்ட எழுத்து, எழுத்தாளர் என்கிற எதிர்மலை வாதத்தை நோக்கி நகர்த்துவதை எப்படிப் பார்ப்பது. இதனால் அல்தூசர் அமைப்பியல்வாதத்தை மார்க்சீயத்துக்குள்ளே கொண்டுவந்து சமூக உருவாக்கம் (social formation) எனும் கருத்தை பிரபலப்படுத்தியதை நாம் வரவேற்க வேண்டியதிருக்கிறது.

பயன்பட்ட நூல்கள்

  1. J. A. Cuddon, Dictionary of Literary Terms and Literary Theory, Penguin, 1991.
  2. Robert Audi (ed), The Cambridge Dictionary of Philosophy, Cambridge, 1996.
  3. M. H. Abrams, A Glossary of Literary Terms, USA, 1993.
  4. Terry Eagleton, Literary Theory, USA, 1996.
  5. Peter Collier and Helga Geyt (ed), Literary Theory Today, Blackwell, 1992.
  6. William Ray, Literary Meaning, Blackwell, 1989.

- இராஜேஷ் பெ.செ.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.