சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் சரி, இதற்கு முந்தைய பல ஒலிம்பிக் போட்டிகளிலும் சரி, எவ்வாறு உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார இந்திய நாடு சர்வதேச விளையாட்டு அரங்கில் வெட்கம் கெட்டு பல்லிளித்தது என்றோ, எவ்வாறு உலக வரை படத்தில் கண்ணுக்குக் கூடத் தெரியாத சிறு புள்ளியாக இருக்கும் நாடுகள்/தீவுகள் கூட ஒரே ஒரு தங்க பதக்கத்தை வென்று விட்டது என்றோ, எவ்வாறு உலக மக்கள் தொகையில் முதன்மை நாடாக இருந்தும் அஞ்சுக்கும் பத்துக்கும் (பதக்கங்கள்) எவ்வாறு சிங்கியடித்தது என்றோ, எவ்வாறு ஒரு லட்சம் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கூட இந்தியாவை விட அதிக பதக்கங்கள் வென்றன என்றோ, எவ்வாறு மிக மோசமான பஞ்ச நாடுகள் கூட தங்க பதக்கங்களை வென்றுள்ளது என்றோ, எவ்வாறு இந்தியா பதக்கப் பட்டியலில் 71 வது (ஒருவேளை ஜோதிட ராசி பார்த்து இந்த எண்ணை தேர்வு செய்திருப்பார்களோ?) இடத்தில் இருந்தது என்றோ, இன்னும் இதுபோன்ற பல புள்ளிவிவரங்களை அடுக்கி புலம்பினாள் மட்டும் ஏதாவது மாறிவிடப் போகிறதா? ஒன்றும் இல்லை.
"நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது, எல்லோரும் செத்து சுண்ணாம்பு ஆகிக்கொண்டிருக்கிறோம், நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறோம், இதில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாததுதான் பெரிய பிரச்சனையா?" என்று இதை அவ்வளவு சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது. Sportsmanship என்பது எவ்வாறு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நீதிநெறி (ethics), ஒருமைப்பாடு (integrity), சக வீரர்கள் மற்றும் எதிர் அணியினருடனும் மரியாதையுடன் நடத்தல் (courtesy), fair play, தோற்றாலும் மீண்டும் ஒருங்கிணைந்து களத்தில் நின்று போராடுவது மற்றும் வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தை கற்றுக் கொடுக்கிறதோ, அதே போல ஒரு நாட்டின் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கெடுப்பு என்பது அந்த நாட்டின் பண்பட்ட முதிர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, அரசியல் நோக்கங்கள், சர்வதேச அரங்கில் தங்களை பெருமைமிக்க நாட்டின் குடிமக்களாக உணர்வது (global image), கலப்பு கலாச்சார புரிதல்கள் போன்றவற்றை சீரிய முறையில் வளர்த்தெடுக்க வழிவகுக்கும். ஆனால், இவ்வளவு கேவலமாக தோற்று வந்தால், கூனிக் குறுகி கேவலப்பட்டு சந்தி சிரிப்பது தவிர வேறொன்றும் நடக்காது...அதிலும் ஒரேயொரு தினேஷ் போகத்துக்கு நடந்த கொடுமையால் தான் நாங்கள் ஒட்டுமொத்தமாக தோற்றோம் என்ற ரீதியில் இந்திய tabloids ஒரேயடியாக ஒப்பாரி வைப்பது என்பது கொஞ்சம் கூட சகிக்கவில்லை...உட்சபட்ச அருவருப்பு தான் மேலிடுகிறது!"இந்திய நாடு - அதன் மக்கள் தொகை - விளையாட்டு தோல்விகள்", இவற்றை பற்றிய நம்முடைய பார்வையும் புரிதலும் (analysis) தான் தவறாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது...
1. இந்திய நாட்டின் ஏதோ ஒரு மூலையில், ஏதேனும் ஒரு விளையாட்டில் திறமை மிக்க விளையாட்டு வீரர் ஒருவருக்கு, முதலில் அவருக்கு தேவையான சர்வதேச தரத்திலான விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளர்கள், பயிற்சி மையங்கள், நிதி ஆகியவை அவருடைய குடியிருப்புக்கு அருகில் கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. அதற்காக அவர் மிக அதிக தூரம் பயணித்து இவ் வசதிகளை பெற வேண்டியிருக்கிறது. இத்துவக்க புள்ளியிலேயே பல திறமைகள் அடிபட்டுப் போகின்றன.
2. அப்படியே இவையெல்லாம் கிடைக்கப் பெற்று அவர் அவருடைய விளையாட்டை திறமையாக விளையாடி முன்னேறிச் செல்ல விளையும் பொழுது, பார்ப்பன சனாதன இந்திய சமூகத்துக்கே உரித்தான சாதி, மதம், இனம் (நிறம் உட்பட), வர்க்கம், பின்புலம்/செல்வாக்கு, அரசியல், பாலியல் வேறுபாடு, பாலியல் சீண்டல் போன்ற இத்தனை தடைகளையும் தாண்டி முன்னேறிச் செல்லும் வாய்ப்பு எத்தனை விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும்? இதில் பலப் பல திறமைகள் (almost everyone) அடிபட்டு fallout ஆகின்றனர்.
3. இதற்கும் மேல், இவ்வளவு பெரிய பரப்பளவு, இவ்வளவு அதிகமான மக்கள் தொகை, இத்தனை மாநிலங்கள் என்று பரந்து விரிந்துள்ள நாட்டில், நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் துவங்கும் விளையாட்டு வீரர், மேலே கூறப்பட்ட அத்தனை தடைகளையும் தாண்டி, மேற்கொண்டும் local level, பள்ளி, பள்ளிகளுக்கிடையிலான, கல்லூரி, கல்லூரிகளுக்கிடையிலான, zonal, மாவட்டம், மாவட்டங்களுக்கிடையிலான, மாநிலம், மாநிலங்களுக்கிடையிலான, தேசிய அளவில் போன்ற அத்தனை போட்டிகளிலும் பங்கேற்று பின்னர் இறுதியாக சர்வதேச அளவிலான போட்டிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இதை தட்டச்சு செய்வதற்குள்ளாகவே எனக்கு நாக்கு தள்ளுகிறது ! இப்படிப்பட்ட நீண்ட நெடிய lengthy strenuous journey (LSJ) என்பது உண்மையில் விளையாட்டு வீரர்களின் நேரத்தையும், சக்தியையும், நிதியையும் வீணடிக்கிறதே தவிர பயன்கள் எதுவும் தருவதாக தெரியவில்லை.
4. சன் டிவி சீரியலை விட பெரிதாக நீளும் இத்தகைய நீண்ட நெடிய போராட்டத்தில் இவற்றையெல்லாம் தாண்டி சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெற்று ஒருவர் வந்தால், இந்திய தேசிய அளவிலான விளையாட்டு Federations செய்யும் அயோக்கியத்தனமான அட்டூழியங்கள் எவ்வாறு இருக்கின்றன என்றால், ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் சர்வதேச நாடுகள் தயார் செய்யும்படி wholesome approach in building an athlete என்ற protocol ஐ சுத்தமாக கடைபிடிக்காமலும், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்பாக வீரர்களுக்கு தடையில்லா நிதி வழங்கி அவர்களை சரிவர போட்டிகளுக்கு தயார்படுத்தாமலும், விளையாட்டு வீரர்களுக்கு அந்தந்த விளையாட்டுகளுக்கு தகுதி பெரும் திறமை இருந்தும் சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்கும் criteriaக்களை முன்பே தெரிந்து கொண்டு அவற்றை வீரர்களுக்கு சரிவர வழங்காமல் அதனால் வீரர்கள் disqualify ஆவதும், இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் செய்து, சர்வதேச விளையாட்டு அமைப்புகளால் கண்டிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சில சமயங்களில் தடை கூட செய்யப்பட்ட அமைப்புகளாக விளங்குபவை தான் இந்திய நாட்டின் "சிறப்புமிக்க" விளையாட்டு federations - ஒலிம்பிக், ஹாக்கி, கால்பந்து ஆகிய மூன்றும். இப்பேற்பட்ட எதற்கும் லாயக்கற்ற federationகளை தான் நம் விளையாட்டு வீரர்கள் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டியிருக்கின்றது. இந்திய தேசிய விளையாட்டு federationகளின் நிலைமையே இப்படியென்றால், இவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் விளையாட்டு வீரர்களின் நிலைமை எப்படி இருக்கும்?
இத்தனை இத்தனை அசாதாரண தடைகளையும் ஒரு விளையாட்டு வீரர் மேல் ஏற்றிவிட்டு, இவற்றையெல்லாம் கடந்ததற்குப் பின்னும் நீ விளையாட்டில் உன் திறமையை காட்டி பதக்கம் வெல்ல வேண்டும் என்றால், எவரால் தான் இது முடியும்? அவர்கள் என்ன மனிதர்களா இல்லை இயந்திரமா? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ! உண்மையிலேயே, இவற்றையெல்லாம் கடந்து வந்ததற்காகவே அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு தங்கப் பதக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகிறது...இந்த அளவுக்கு ஒரு LSJஐ உலகில் வேறு எந்த நாட்டு வீரரும் கடந்திருக்க மாட்டார் என்பதே உண்மையாக இருக்கக் கூடும். மேலும், இவ்வளவு தடைகளையும் தாண்டி வரும் தெம்பும் திராணியும் இந்த நாட்டில் எப்பேர்ப்பட்ட சாதி வர்க்க பின்புலம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் வாய்க்கப்பெறும் என்பதும் நம் அனைவருக்கும் தெரியாதது ஒன்றுமில்லை, விளையாட்டு திறமை இருக்கிறதோ இல்லையோ. இதற்காக அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
இவற்றிலிருந்தெல்லாம் என்ன அறிந்து கொள்ள முடிகிறதென்றால், இதுவரை சர்வதேச விளையாட்டு விடயங்களில் இந்திய ஒன்றிய அரசு புடுங்கிய ஆணிகள் அனைத்தும் தேவையற்ற ஆணிகள் தானென்று ! இவ்வளவு பெரிய நாட்டை மேய்த்து, இவ்வளவு மக்கள் தொகையிலிருந்து வீரர்களை அடையாளம் கண்டு, பயிற்சி கொடுத்து அவர்களை இத்தனை level களையும் தடைகளையும் கடக்கச் செய்து, ஏகப்பட்ட குளறுபடி அமைப்புகளை மேய்த்து, தானும் துன்பப்பட்டு துயரப்பட்டு, விளையாட்டு வீரர்களையும் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கி, இதெல்லாம் ஒரு பொழப்பா?
பேசாமல் ஒட்டுமொத்த விளையாட்டு விடயங்களையும் அல்லது சர்வதேச விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் நேரடியாக பங்கெடுக்கும் அதிகாரத்தை மட்டுமாவது மாநில பட்டியலுக்கு மாற்றிவிட்டால் என்ன?
இப்படி ஒரு கோரிக்கையை முன் வைப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் அடுக்க முடியும் என்றாலும், மிக எளிமையான காரணம் logistics தான் ! கடந்த பல ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளை ஆராயும்போது, மிகச்சிறிய நாடுகளும் தீவுகளும், மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் கூட பல பதக்கங்களை வெல்ல முக்கிய காரணம் logistics ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் மிகச்சிறிய நிலப்பரப்பில், மிகச்சிறிய மக்கள் தொகையில் விளையாட்டு திறமைகளை (raw talents) கண்டறிவது மிகச் சுலபம், அவர்களுக்கான பயிற்சி, விளையாட்டு சார்ந்த விடயங்கள், நிதி போன்றவற்றை கிடைக்கச் செய்வதும், அவர்களை சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதும் திறம்பட நடந்தேறும் என்றே கருதலாம். மேலும் தேவையற்ற LSJயை கடப்பதோ, அதிகமான தடைகளை தாண்டிச் செல்ல வேண்டிய அவசியமோ இருக்காது என்பதே உண்மை (தடைகள் முற்றிலும் நீங்கும் என்று கூறமுடியாது, வெகுவாக குறைய வாய்ப்பிருக்கிறது). இத்தனை ஆண்டுகளும் "அய்யய்யோ இவளோ பெரிய நாடு இவளோ மக்கள் தொகை ஆனால் பதக்கம் இல்லை" என்ற வாதமே தவறானதோ, infact, மிகப்பெரிய மக்கள் தொகை தான் மிகப்பெரிய disadvantage ஆக இருக்கக் கூடுமோ என்று கருதவேண்டியுள்ளது.
சில உதாரணங்கள் மூலமாக இவற்றை நிறுவ முடியும். நாம் அனைவரும் நன்கு அறிந்த துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் திரு. அபினவ் பிந்த்ரா, மேற்கூறப்பட்ட எவ்வித தடைகளையும் கடக்கவில்லை. அவர் மிகப்பெரிய பணக்காரராக இருந்ததால், தன்னுடைய சொந்த செலவில் ஜெர்மனி நாட்டுக்கு சென்று பயிற்சி பெற்ற பிறகு நேரடியாக சர்வதேச விளையாட்டுகளில் கலந்து கொண்டு, சில ஆண்டுகள் முயற்சியிலேயே ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், சென்னையை சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் சமீபத்தில் எவ்வாறு உலகத்தையே தமிழ்நாட்டை பார்க்க செய்தார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர்களின் சதுரங்க விளையாட்டுப் பயணமும் மேற்கூறப்பட்ட எவ்வித தடைகளும், LSJ உம் அற்றது. அதற்காக அவர்களுடைய சாதனை என்பது சாதாரணமானது அல்ல. சதுரங்க விளையாட்டு பயணம் என்பது மிகவும் expensive பயணம் மற்றும் அந்த விளையாட்டுக்கே உரித்தான அத்துணை சிரமங்களும் அதில் இருக்கின்றன. ஆனால், அவர்கள் சிறு வயது முதலே நன்றாக தொடர்ந்து பயிற்சி பெற்றுவிட்டால் நேரடியாக சர்வதேச செஸ் federations நடத்தும் போட்டிகளில் பங்கெடுக்க முடியும். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சேர்க்கும் புள்ளிகள் அவர்களை சர்வதேச அளவில் ரேங்க் செய்யும். இப்படித்தான் சென்னையை சார்ந்த பெருமைமிக்க உடன்பிறந்தோர் வைஷாலி - பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் போன்றோர் மிகச்சிறிய வயதில் சர்வதேச பட்டங்கள் பெற்றுள்ளனர்! இது போன்ற உதாரணங்கள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், சர்வதேச விளையாட்டுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட்டால், சர்வதேச அளவிலான பயிற்சி ஒரு விளையாட்டு வீரருக்கு அளிக்கப்படும் பட்சத்தில் அவர் நேரடியாக சர்வதேச போட்டியில் பங்கேற்க வேண்டியது தான், இதை மாநில அரசுகள் நிச்சயம் திறம்பட செயல்படுத்த முடியும்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஒன்றிய அரசு தேசிய அளவிலான குளறுபடி federationகளை பராமரித்தது போதாது என்று, இப்போது khelo India என்ற ஒன்றை துவக்கி மாநிலம் தோறும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்புகளை நிறுவியுள்ளது. இது எங்க போய் முடியும் என்பது தெரியவில்லை. முதலில் "khelo" என்றாலே என்னவென்று எங்களுக்கெல்லாம் புரியவில்லை. இதிலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியுள்ளது ஒன்றிய அரசு. எவ்வாறு மத்திய பிரதேசத்துக்கு 25 கோடி ஆனால் தமிழ்நாட்டுக்கு வெறும் பத்து கோடி நிதி என்றும், தமிழகத்துக்கு மிக மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்ட போதும் 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட khelo India போட்டிகளில் எவ்வாறு தமிழகம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தது என்பது பற்றி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுவே போதுமான சான்று எதற்காக விளையாட்டு மாநில அரசு பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதற்கு !! ஆனால், khelo India வில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், ஒன்றிய அரசு வகுக்கும் கொள்கைகளுக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, ஒன்றிய அரசின் khelo India அமைப்புகளின் rules and regulationsளுக்கு கட்டுப்பட்டு, அதே பல்வேறு தடைகளை தாண்டி, மீண்டும் LSJவை விளையாட்டு வீரர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். Khelo India ஒருபுறம் நடந்து விட்டு போகட்டும், ஆனால் சர்வதேச விளையாட்டுகளில் நேரடியாக பங்கெடுக்கும் அதிகாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்றிவிட்டு, நிதியை மட்டுமே மாநிலங்களுக்கு ஒதுக்கிவிட்டு, முற்றும் முழுவதுமாக ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்தால் மட்டுமே போதுமானது என்பதுதான் எதிர்பார்ப்பு.
ஒலிம்பிக் பதக்க பட்டியலில் எப்போதும் கோலோச்சும் நாடுகளை கவனித்தால் அவர்கள் சில குறிப்பிட்ட விளையாட்டுகளை மட்டுமே குறிவைத்து பதக்கங்களை வெல்வதை காண முடியும். முக்கியமாக பதக்க பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகளில், அமெரிக்க நாடு அனைத்து போட்டிகளிலும் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்றாலும், எப்போதும் தடகள போட்டியிலும் நீச்சல் போட்டிகளிலும் பெரும்பாலான தங்கப் பதக்கங்களை அள்ளிவிடும், அவர்கள் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெறுவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். சீனா பெரும்பாலும் குவித்த தங்கங்கள் நீச்சல் குளம் டைவிங் போட்டியில் தான். பதக்கப் பட்டியலில் முதல் சில இடங்களைப் பிடித்த நாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தி அவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
இந்திய ஒன்றிய அரசும் சர்வதேச விளையாட்டுகளை மாநில பட்டியலுக்கு மாற்றுமானால், நாமும் நம்முடைய மாநிலத்தில் எவ்வாறான திறன்கள் திறமைகள் (raw talents) இருக்கின்றன என்பதை கண்டறிந்து, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, பயிற்சி கொடுத்து, சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்பதைத் தான் இங்கே வலிந்து கூறுகின்றேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இரண்டாவது நீளமான கடற்கரையோர எல்லையை கொண்ட மாநிலம், எனவே இயல்பாகவே மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்து வாழ்பவர்களின் நீச்சல் திறன் எவ்வாறு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கடலோர நிலங்கள் என்றில்லாமல், பொதுவாகவே தமிழகம் முழுவதும் கிராமங்களில் ஒரு கிணறு ஆறு குளம் என்று எவ்வகையான நீர் நிலையாக இருந்தாலும் நம் பிள்ளைகள் எப்படியெல்லாம் அவர்களுடைய திறமைகளை காண்பிப்பார்கள் என்பது கண்கூடு. இயல்பாகவே இத்திறைமைகளை பெற்றிருக்கும் நம் பிள்ளைகளை தமிழகத்துக் குள்ளாகவே கண்டறிவதும், அவர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகளை வழங்கி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்குமளவுக்கு தயார்படுத்துவது என்பது எளிதினும் எளிதான விடயம் என்றுதான் தோன்றுகிறது. அதுபோல அந்தந்த மாநிலங்கள் அவரவர் திறன்களை கண்டறிந்து அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய விளையாட்டு வீரர்களை தயார் செய்து கொள்ளட்டும். இதனால் என்ன கெட்டுவிடப் போகிறது ?? இவ்வாறு செய்யும் போது சர்வதேச விளையாட்டுகளில் சர்வதேச அரங்கில் உண்மையில் இந்தியா மிளிர முடியும் என்றே கருதலாம் (நீச்சல் ஒரு உதாரணம் மட்டுமே, இது போன்ற எண்ணற்ற திறமைகள் தமிழகத்தில் குவிந்து கிடக்கின்றன).
தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக விளையாட்டு துறையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரிலேயே சென்று வந்துள்ளார் என்றும் செய்திகள் இருந்தது. எல்லா துறை அமைச்சர்களாலும் அவர்கள் வகிக்கும் துறைக்கான அனைத்து விடயங்களையும் திறம்பட சாதித்துவிட முடியும் என்று கூறிவிட முடியாது. ஆனால் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நினைத்தால் அத்துறைக்கான எதையும் சாதிக்க முடியும். அவர் இனி துணை முதல்வரானாலும் சரி, முதல்வரானாலும் சரி, விளையாட்டுத் துறையை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொண்டு தமிழகத்தை உலக அரங்கில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
மாநில பட்டியலுக்கு மாற்றினால் தான் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை, அபினவ் பிந்த்ரா போல தன்னிச்சையாக தமிழக அரசே ஒரு முன்மாதிரி முயற்சியாக ஒன்றிரெண்டு சர்வதேச விளையாட்டுகளை மட்டும் தேர்வு செய்து, விளையாட்டு வீரர்களை தயார் செய்து, இந்தியா சார்பில் சர்வதேச போட்டியில் நேரடியாக பங்கெடுக்கச் செய்து வெற்றி பெற்றால், பிறகு அதையே பிற மாநிலங்களும் பின்பற்றும் என்றே கருதலாம். இந்தியாவிலேயே அனைத்து விடயங்களிலும் முதன்மை மாநிலமாக முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு, நேரடி சர்வதேச விளையாட்டு முயற்சியிலும் நிச்சயம் வெற்றி வாகை சூடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மாற்றம் நிச்சயம் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன்...
- தேன்மொழி