இன்று சரணோடு பேசிய போது.. "பாட்டு புக்" பற்றிய பேச்சு வர... அப்படியே மனம் பள்ளி நாட்களுக்குப் பறந்து விட்டது. யோசிக்க கிளம்பும் வாழ்க்கை பூதம் தான் நம்மிடம் ஏராளமாக இருக்கிறதே. இந்த ஞாயிறைக் கொண்டாடுவோம் என்றுதான் பாடல்களின் வழியே இந்த பருவ ஞாபகம்.

கேஸட் காலம் போல... அதே கால கட்டத்தில் பாட்டு புக் காலம் ஒன்று இருந்தது.

பாட்டு ஹிட் அடித்த எந்தப் படம் வந்தாலும்... உடனே அந்த படத்தின் பாட்டு புக்கை வாங்கி வந்து விடுவேன். ஊரில் பொரிக்கடை ஒன்றில் தான் பாட்டு புக் விற்கும். 50 பைசா தான். இன்னும் வரல என்று சொன்னாலும் 25 பைசா அட்வான்ஸ் கொடுத்து விட்டு ஓரிரு நாட்களில் வந்ததும் வாங்கி செல்வேன். புத்தக பையில் ஒரு மூலையில் ஒரு பாட்டு புக்காவது எப்போதும் இருக்கும்.

cinema paattu booksசரி... அந்த பாட்டு புத்தகங்களை வாங்கி... அடுத்து என்ன.

கச்சேரி தான்.

ஞாயிறு மாலை... வார வாரம் பாட்டு கச்சேரி தான். மனோவுக்கு நான். SPB க்கு ரவிண்ணன். இளையராஜா கங்கை அமரன்-க்கு குபேரன். மலேசியாவுக்கு பிரபு... என்று ஆளுக்கொரு குரல்... ஆளுக்கொரு பாட்டு. குரல்வளம் பொருந்தாவிட்டாலும்.. சுதி தப்பாது. அதில் இருக்கும் பிட்ச் விலகாது. நாங்களே பெண் குரலிலும் முயற்சி செய்ததுண்டு. கொஞ்சம் காமெடி ஆகி விடும். ஆனாலும்.. வாரம் ஒரு பாட்டாவது ஜானகிக்கு... அல்லது சித்ராவுக்கு வாய்ப்பு உண்டு. "யாருக்காக" போன்ற TMS பாட்டுக்கு சந்திரன்.

இதில் தபேலாவுக்கு பிரபாகரன். ட்ரம்ஸ்- க்கு குடத்தோடு வந்திருப்பான் லக்கி. வித்தியாசமான குரலுக்கு எப்போதாவது பாடவும் செய்வான். அதாவது.. "ஜகமே தந்திரம்.... சுகமே மந்திரம்...மனிதன் யந்திரம் சிவசம்போ" போன்ற பாடல்களுக்கு அவன் தான் குரல். சில நேரத்தில் நானும் சந்திரனும்...ஆடவும் செய்வோம். வேடிக்கை பார்க்கும் சிறுசுகள் சிலதும் ஆட்டத்தில் சேர்ந்து கொள்ளும்.

"வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" என்று குபேரன் பாடுகையில் தலைக்கு கர்சீப் கட்டிக்கொண்டு ஆடாமல் இருக்க முடியாது. நான் ஆடுவதற்காகவே அடிக்கடி அதை பாடுவதும் உண்டு.

ஞாயிறு மாலை ஆனாவே... குபேரனுக்கு குஷி வந்து விடும். வீதிக்குள் ஒரு வீர நடையில் வருவான். ஒவ்வொரு ஆட்களாக பிடித்து கச்சேரிக்கு அழைத்து போவது கடினம் தான் என்றாலும்.. கவலை மறக்கும் அதன் பிறகு. இந்தப் படைக்கு நான் தான் தளபதி. முதலில் பிடிபடுவேன். இசை இதயத்தில் இருப்பதால்.. கலை காலந்தொட்டு இருப்பதால்.. கலைஞனாக இருக்கும் அந்த நேரங்களை நான் தவற விடவே மாட்டேன். அடுத்து லக்கி வருவான். சில போது சோம்பேறித்தனத்தில் வரல என்பான். கடலை மிட்டாய் குடுத்து... கலர் வாங்கி குடுத்து கூட்டி செல்வோம். அடுத்து ட்ரம்ஸ்காரன் பிகு செய்வான். அவனுக்கு கட்டு பீடி வேண்டும். இப்படியே ஆள் சேர்த்து கச்சேரி நடக்குமிடத்தில் அமர்கையில் மணி 5 ஆகி விடும். குபேரன் மெல்ல இளையராஜா பாடலில் தான் ஆரம்பிப்பான். அதாவது கொஞ்சம் வாம் அப் செய்வதற்கு.

அடுத்து நான் மனோ பாட்டு. "வெல்வெட்டா வெல்வெட்டா... மனசுக்குள் வந்துட்டா..." என்று உச்சஸ்தாயில் இழுக்க...அப்படியே பிக் அப் ஆகும். ஆறு ஆறரை ஆகும் போதெல்லாம் ஓரளவுக்கு பார்வையாளர்கள் சேர்ந்து விடுவார்கள். புள்ளைங்க பசங்க என்று சுற்றிலும் கூட்டம் இருக்க... இடையில் நின்று பாடுவது பேரானந்தம். ஆடுவது பிரிய ஆனந்தம்.

சில போது சில பெருசுகள் கூட கூடி விடுவார்கள். ஆங்காங்கே அமர்ந்தும் நின்றும் கூட ரசிக்கத் தொடங்கி விடுவார்கள். அதுவும் மழை நாளில் அப்படி இசை சிக்கினால்.. அன்று கோயில் திண்ணைக்கே கொண்டாட்டம் தான். மழைக்கு ஒதுங்கிய கூட்டம்... இனம் புரியாத இன்பத்தில் இசைக்கு இதயம் வார்த்து நிற்கும்.

"டேய் விஜிய்யா... நீ சினிமாக்கு போய்டுடா" என்று ஒருவராவது சொல்லாமல் இல்லை. ஒரு கலைச் சிறுவன் றெக்கை முளைத்துத் திரிய... அது போதாதா.

உள்ளத்தை அள்ளித்தா... சின்னத்தம்பி... எங்க தம்பி... ராசாமகன்... பூவே உனக்காக... வேலை கிடைச்சிருச்சு... குணா... சிங்காரவேலன்... முத்து... பாண்டியன்... ஐ லவ் இந்தியா... சூரியன்... எட்டுப்பட்டி ராசா... சின்ன ஜமீன்... கருப்பு ரோஜா... இணைந்த கைகள்... பிரம்மா... திருமூர்த்தி... மேட்டுக்குடி இப்படி இல்லாத பாட்டு புத்தங்களே இல்லை. எந்த ஒரு நல்ல பாட்டுக்கும் இங்கே மேடை உண்டு.

"நான் பேச நினைப்பதெல்லாம்" பாட்டு புக்கெல்லாம் திரும்ப திரும்ப பாடிய நேயர் விருப்பங்கள்.

பூங்குயில் ராகமே... புது மலர் வாசமே...
நாளை நம் வானிலே... நாளும் புது ஊர்வலம்..

என்று இழுக்கும் போதே கண் கலங்கி விடும் ட்ரம்ஸ் அடிப்பவனுக்கு. பெருமிதம் பொங்க அடுத்த வரிக்கு செல்வேன்.

"கா....தல் கடிதம் வரைந்....தேன் உனக்கு..." என்று பாடி இடைவெளி விட்டு.... "வந்ததா... வந்ததா.. வசந்தம் வந்ததா" எனும் போது... ஹோ.........ய் என்று நாங்களே கை தட்டி ஆரவார உச்சியில் இருப்போம். டேய் தம்பிகளா அந்த பாட்ட இன்னொரு வாட்டி பாடுங்கடா என்று ஒன்ஸ் மோர் கேட்ட..." சின்ன சின்ன சேதி சொல்லி... வந்ததொரு ஜாதி மல்லி.. ஆனைமலை காத்தடிக்கும் தோப்போரம்... ஆசை மனம் பாடுதொரு தேவாரம் " என்று செந்தூர பாண்டி... பாட்டு... உற்சாக பானம். அதே படத்தில் "செந்தூர பாண்டிக்கொரு ஜோடி கிளி ஜோடி கிளி கூட.." ரவியண்ணன் கேப்டன் மாதிரியே நடு உச்சி தலை வாரல் குலுங்க ஆடுவதெல்லாம் அழியாத கோலங்கள்.

"நம்ம கடை வீதி கல கலக்கும்" போன்ற பாடல் வரும் போதெல்லாம்... கலை உச்சத்தில் இருக்கும். கண்களில் ஒளி கூடிய ராட்சச உற்சாகம் பீறிட்டுக் கொண்டிருக்கும்.

பாட்டு புக்கின் கலெக்சன் என்னிடம் தான் இருக்கும். எந்த பாட்டு யாருக்கு வேண்டும் என்றாலும்... "டேய் விஜிப்பையா... இந்த பாட்டு என்ன படன்டா..." என்று சந்தேகம் வந்தாலும்.. நானே தீர்வு. நானே பதில். ஆனால் கொடுத்த பாட்டு புக்கை பத்திரமாக நாலைந்து நாட்களில் திரும்ப வாங்கி என் மரப்பெட்டிக்குள் வைத்து விடுவேன். தராமல் இழுத்தடித்த ஆட்களும் உண்டு. புள்ளைங்க என்பதற்காக எந்த சலுகையும் இதில் இல்லை. கறாராக வாங்கி விடுவேன். பத்து பத்து புக்காய்.... நானே ஊசியில் தைத்து பைண்டும் செய்து விடுவேன். ஒவ்வொன்றும் பாட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு மூன்று பக்கங்கள் வரும். பழுப்பு வண்ணத்தில் அந்த காகிதமே ஒரு ஆன்சர் சீட் மாதிரி தான். பழுப்பு பக்கங்களை நினைத்தாலே பழுத்த நினைவுகள் தானாக விழுகின்றன.

கைக்கொள்ளா அளவுக்கு சேர்ந்து விட்ட பாட்டு புத்தகங்களை ஊரை விட்டு வருகையில் ரம்பாக்காவிடம் கொடுத்து விட்டு வந்தேன். பத்திரமாக வைத்திருக்கும் என்றே நம்புகிறேன். அதில் இருப்பது பாடல்களாக இருந்தாலும்.. பல குரல்களின் பிரியங்கள் அல்லவா. கலைஞர்களின் கால பொக்கிஷம் அல்லவா. கலை என்று தெரியாமலே கலைஞர்களாக இருந்த காலத்துக்கு காணிக்கை தான் இந்த நினைவுகள்.

ஞாயிறு மாலை... ஞாபக மாலையில் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறது. கேட்கிறதா...!

- கவிஜி

Pin It