காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தம் அடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத்மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது, அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன்.

நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், அவர்கள் அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத் தனமான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல்கின்றனர்.

இரண்டாவதாக, மகாத்மா என்ற சொல்லினால் மக்கள் திட்டவட்டமாக என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படியிருந்த போதிலும், என்னிடமிருந்து ஒரு பதிலைப் பெறுவதில் 'சித்ரா' இதழின் ஆசிரியர் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகத் தோன்றுவதால் இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதற்கு மனப்பூர்வமான முயற்சிகள் செய்வதென்று நான் முடிவு செய்து விட்டேன். பொதுவாகக் கூறுவதெனில், ஒரு சாதாரண இந்துவின் கருத்துப்படி, மகாத்மா என்ற ஒரு தகுதியைப் பெறுவதற்கு ஒரு நபர் மூன்று விஷயங்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, அவருடைய நீண்ட மேலங்கி (robe), அவருடைய குணநலன் (Character) மற்றும் அவருடைய சித்தாந்தம் (doctrine). ஒருவரை மகாத்மா என்று மதிப்பிடுவதற்கு இந்தத் தன்மைகள் ஓர் அளவு கோலாக எடுத்துக் கொள்ளப்படுவதென்றால், அறியாமையிலும் கல்வியறிவும் இல்லாதவர்களின் பார்வையில், ஜென்ம விமோசனத்திற்கு மற்றவர்களை எதிர்நோக்கும் இவர்களின் பார்வையில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை ஒரு மகாத்மா என்று அழைக்கலாம்.gandhi 711தனது உடையை மாற்றுவது மூலமாக மட்டுமே இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் மிகவும் அசாதாரணமான உன்னதமான செயல்களைச் செய்த போதிலும், யாரும் உங்களை கவனிக்க மாட்டார்கள். ஆனால் மாமூலான முறையில் நடக்காத ஒருவர், சில விநோதமான போக்குகளைக் காட்டினால், தனது பண்பாட்டில், இயற்கைக்கு மாறான குணங் களைக் கொண்டிருந்தால் அவர் ஒரு மகான் அல்லது ஒரு மகாத்மா ஆகிவிடுகிறார். நீங்கள் வழக்கமான, ஒரு சாதாரண உடையணிந்து கொண்டு ஏதாவது செய்திருந்தால், மக்கள் உங்களைப் பார்க்கவும் கூட விரும்ப மாட்டார்கள். ஆனால் அதே நபர், தனது ஆடைகளைக் களைந்தெறிந்துவிட்டு, நிர்வாணமாக ஓடினால், நீண்ட முடிவளர்த்துக் கொண்டு, மக்களைக் கேவலமாகப் பேசி, சாக்கடையிலிருந்து அசுத்தமான தண்ணீரைக் குடித்துக் காட்சியளித்தால், மக்கள் அவருடைய காலில் விழுந்து, அவரை வழிபடுவதற்குத் தொடங்குவார்கள். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் காந்தி, மகாத்மாவானால் இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. வேறு எந்த நாகரிகமான நாட்டிலாவது இவைகள் கடைப்பிடிக்கப்பட்டால் மக்கள் அவரை ஏளனம் செய்து சிரிப்பார்கள். ஒரு சாதாரணப் பார்வையாளருக்கு காந்தியின் போதனைகள் மிகவும் இனிமை யாகவும், மனதைக் கவர்வதாகவும் தோன்றுகின்றன. உண்மையும் அகிம்சையும் மிகவும் உன்னதமான கோட்பாடுகள், சத்தியத்தையும் (உண்மை) அகிம்சையையும் (வன்முறையற்றது) காந்தி போதித்ததாக உரிமை கொண்டாடப்படுகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பினார்கள். எனவே ஆயிரக்கணக்கில் அவர்கள் காந்தி சென்றவிடமெல்லாம் அவரைச் சூழ்ந்தார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை உலகுக்கு அளித்தார். இந்த விஷயத்தில் காந்திதான் இதனுடைய மூலகர்த்தா என்று ஓர் அறிவற்ற முட்டாளையும், இயல்பாகவே அறிவிலியாகவும் உள்ளவரைத்தவிர, வேறு யாரும் அவருக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். மனித நாகரிகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு மெய்மையும் அகிம்சையும் அத்தியாவசியமானவை என்று பிரகடனம் செய்வதில் புதிது ஏதுமில்லை. இந்த மூதுரைக்கு காந்தி மதிப்பு சேர்த்ததில் புதிது ஏதுமில்லை. நான் ஏற்கனவே கூறியது போன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மகான் புத்தர் இந்தக் கோட்பாடுகளை போதித்தார். 'மெய்மை, அகிம்சை' மீதான பரிசோதனையிலிருந்து எழும் சிக்கலான பிரச்சினைகளின் மீது காத்தி கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டயிருந்தாரேயானால் அவருடைய மகாத்மா தன்மைக்கு அது ஒளியைக் கூட்டியிருக்கும். உலகம் என்றென்றும் அவருக்கு இதற்காக நன்றி செலுத்தியிருக்கும். இரண்டு புதிர்களுக்கு, அதாவது, 'உண்மை' என்று உன்னதமான கோட்பாட்டை எவ்வாறு கடைப்பிடிப்பது, எந்த சூழ்நிலைகளில் வன்முறை' ஒரு சரியான செயலாகக் கருதப்படுவது என்பவற்றுக்கான தீர்வை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

'உண்மை' மற்றும் 'அகிம்சை'யின் பாலான கண்ணோட்டம் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று மகான் புத்தர் போதித்தார். இந்தக் கேள்விக்கு இயேசு கிறிஸ்து என்ன பதிலைக் கொடுத்திருப்பார்? துரதிருஷ்டவசமாக இதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு எந்த சாதனமும் இல்லை. ஒரு வேளை, இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்குப் ’பிலேத்து’ அவருக்குப் போதிய அவகாசமளிக்காதிருந்திருக்கக்கூடும். காந்தி இக்கேள்விக்கு பதில் அளித்திருக்கிறாரா? நான் எங்கும் இதைக் காணவில்லை. அவருடைய போதனைகளையும் உபதேசங்களையும் நாம் ஆய்வு செய்தால், அவர் மற்றவர்களின் மூலதனத்தின் மீது விளையாடி வருகிறார் என்பதைக் காண்கிறோம். 'உண்மையும் 'அகிம்சை'யும் அவருடைய மூலக்கண்டுபடிப்புகள் அல்ல. காந்தியின் குணாம்சத்தை நான் ஆழ்ந்து ஆராயும்போது, அவருடைய குணாம் சத்தில் ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணர்கிறேன். அவருடைய செயல்களை ஒரு மோசமான நாணயத்திற்கு ஒப்பிடலாம். அவருடைய பிறருக்குப் பரிவு காட்டும் தன்மையானது 'டேவிட்காப்பர்ஃபீல்ட்' என்று புகழ்பெற்ற ஆங்கில நவீனத்தில் வருகின்ற கதாபாத்திரங்களின் 'யூரியா ஹீப்' பின் பண்பாட்டுத் தன்மையைப் போன்றதாகும். தந்திரத்தினாலும், அவரிடம் உள்ளார்ந்துள்ள புத்திக் கூர்மையினாலும் எப்போதும் அவர் தன்னை முன்னணியில் இருக்கும்படி செய்து கொண்டு விடுவார்.

தனது ஆற்றலிலும், குணாம்சத்திலும் நம்பிக்கை உடைய ஒரு நபர் வாழ்க்கையின் எதார்த்தங்களை துணிச்சலுடனும் ஆண்மையுடனும் எதிர்கொள்வார். அவர் தனது இடுப்பில் ஒரு குத்தீட்டியைச் சொருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நெப்போலியன் எப்போதும் முன்புறமிருந்தே தாக்குவார். வஞ்சகத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை. ஒருபோதும் பின்னாலிருந்து தாக்கியதில்லை. நய வஞ்சகமும் துரோகமும் பலவீனமானவர்களின் ஆயுதங்களாகும். காந்தி எப்போதும் இந்த ஆயுதங்களையே பயன்படுத்தி வந்துள்ளார். தன்னை கோகலேயின் ஓர் அடக்கமான சீடர் என்று பல ஆண்டுகளாக அவர் அறிவித்து வந்துள்ளார். அதற்குப் பின்னர் பல ஆண்டுகள் அவர் திலகரைப் பாராட்டி வந்துள்ளார். பின்னர் அவர் திலகரையும் வெறுத்தார். எல்லோரும் இதை அறிவார்கள். நிதி திரட்டுவதற்கு அவர் திலகரின் பெயரைப் பயன்படுத்தி யிராவிட்டால் சுயராஜ்ய நிதிக்கு ரூ.1கோடியை அவரால் திரட்டியிருக்க முடியாது என்பதை எல்லோரும் அறிவார்கள். தனிப்பட்ட முறையிலான தனது உறவை மறந்தும், பிற விஷயங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்தும், ஒரு புத்திக் கூர்மையுள்ளன அரசியல்வாதி என்ற முறையில், அவர் அந்த நிதிக்குத் திலகரின் பெயரை சேர்த்துக் கொண்டார்.

காந்தி கிறிஸ்துவ மதத்தின் உறுதியான எதிராளியாவார். மேலைய உலகத்தை மகிழ்விப்பதற்காக, நெருக்கடியான சமயங்களில் அவர் அடிக்கடி விவிலியத்திலிருந்து அவர் மேற்கோள் காட்டுவார். அவருடைய மனதைப் புரிந்து கொள்வதற்காக, மேலும் இதர இரண்டு உதாரணங்களை நான் மேற்கோள் காட்டுவதற்கு விரும்புகிறேன்.

வட்டமேஜை மாநாட்டின் போது அவர் மக்களிடம் "தாழ்த்தப் பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் எந்த ஆட்சேபணையையும் எழுப்ப மாட்டேன்" என்று கூறினார். ஆனால் தாழ்த்தப்பட்டவர்க்கங்களின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை சமர்ப்பித்தவுடனேயே காந்தி, தான் அளித்த உறுதிமொழிகளையெல்லாம் ஓசைப்படாமல் மறந்துவிட்டார். இதைத் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் மக்களுக்கு அவர் செய்த துரோகம் என்று நான் கருதுகிறேன். அவர் முஸ்லீம்களிடம் சென்று, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் எதிர்த்தால், அவர்களுடைய முஸ்லீம் களின் 14 கோரிக்கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். ஒரு கயவன்கூட இதை செய்திருக்க மாட்டார். இது காந்தியின் துரோகத் திற்கு ஓர் உதாரணம் மட்டுமேயாகும்.

நேரு கமிட்டியின் அறிக்கை காங்கிரசின் பொதுமாநாட்டில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தன. அது குறித்து நீங்கள் எல்லோரும் தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். இந்தத் திருத்தங்களை எதிர்ப்பதற்கு திரு.ஜெயகரை திரு.காந்தி  அமர்த்தினார். திரு. ஜெயகரும் அவருடைய ஆதரவாளர்களும் இந்தத் திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்தனர். இது பலருக்கும் தெரியும். ஆனால் அந்தத் திருத்தங்கள் யாவை? அவை ஏன் வன்மையாக எதிர்க்கப்பட்டன? இந்தத் திருத்தங்களின் பின்னணி பலருக்குத் தெரியாது ஜெயகர் இந்த இவற்றை எதிர்த்ததைப் பற்றி இந்தத் திருத்தங்களை எதிர்த்தவர் களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். இது உண்மை. இந்த உண்மையைக் கேள்வி கேட்பதற்கு எனக்கு எந்தக் காரணமும் இல்லை. பண்டிட் மோதிலால் நேருவும், திரு. காந்தியினால் துரோகம் செய்யப்பட்ட திரு. ஜின்னாவும் இவற்றை வெளிப்படுத்தினர். நேரு கமிட்டியின் அறிக்கையில் செய்யப்பட வேண்டுமென்று பிரேரேரிக்கட்டிடவிருந்த திருத்தங்கள், தமது சமூகத்தின் நன்மைக்காக திரு. ஜின்னாவினால் ஆலோசனை கூறப்பட்டிருந்தது. ஆனால் காந்திக்கு இது தெரியவந்தவுடன், முன்னதாகத் தான் வழங்க விரும்பியதைக் காட்டிலும் மிகவும் கூடுதலான சலுகைகளை பண்டிட் மோதிலால் நேரு முஸ்லீம்களுக்கு வழங்கியுள்ளார் என்று அவர் நினைத்தார். பண்டிட் மோதிலால் நேருவை சிறுமைப் படுத்துவதற்காக, அவர் இந்தப் பிரேரணைகளைக் கடுமையாக எதிர்த்தார். காந்திஜியின் ஏமாற்றுத் தன்மை வாய்ந்த செயலின் விளைவாகவே இந்து-முஸ்லீம் பகைமை ஏற்பட்டது.

தீண்டப்படாதவர்கள் மற்றும் முஸ்லீம்களின் நண்பர் என்று கருதப்பட்ட மனிதர், யாருடைய நலனுக்காகத் தான் பாடுபட்டதாகக் கூறிக் கொண்டாரோ, அதே மக்களின் நலனுக்கே அவர் துரோகம் செய்து விட்டார். இது பெருமளவு என்னை வேதனைப் படுத்தியது. ஒரு பழைய மூதுரை இந்த சந்தர்ப்பத்திற்கும் மிகவும் பொருத்தமானதாகும். (பாகல் மெய்ன் சுர்ரீ முன்ஹ் மெய்ன் ராம்). அதாவது, கடவுள் பெயரை உச்சரித்துக் கொண்டு, அதே பொழுதில் கத்தியைக் கையில் மறைவாக வைத்துக் கொள்வதாகும். ('படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமான் கோயில்" என்று தமிழ் நாட்டில் வழக்கிலுள்ளது. மொர்). இத்தகைய ஒரு நபரை மகாத்மா என்று அழைக்க முடியுமானால், காந்தியை ஒரு மகாத்மா என்று தாராளமாக அழையுங்கள். என்னைப் பொறுத்தமட்டிலும், அவர் ஒரு சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத் தவிர வேறொன்றுமல்ல.

'சித்ரா' ஆசிரியர் கேட்டதைக் காட்டிலும் அதிகமாக நான் கூறிவிட்டேன். 'சித்ராவின் வாசகர்கள் ஜீரணிக்க முடிவதைத்காட்டிலும் அதிகமாக நான் நிறையக் கூறிவிட்டேன் என்று நான் நினைக்கிறேன்.

இங்கே மேற்கோள் காட்டப்பட்ட சம்பவங்களைத் தவிர. மேலும் இரண்டு விஷயங்களைக் கூறி நான் முடித்துக் கொள்கிறேன். ரானடே, கோகலே, அகர்கர், திலகர் ஆகியோரின் காலமும், அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கங்களும் காந்தி காலத்தினின்றும் வேறுபட்டவையாகும். அவர்களின் காலம் அறிவின் காலமாகும். அது குறித்து முற்றிலும் எவ்வித ஐயமும் இல்லை. காந்தியின் காலத்தை இந்தியாவின் 'தமோ யுகம்' என்று அழைக்கலாம். அகர்கர் மற்றும் திலகரின் அரசியல் நாணயத்தையும் உண்மையையும் அது அடிப் படையாகக் கொண்டிருந்தது. அது பொருளற்றதாகவோ, ஆரவாரமான தாகவோ இருக்கவில்லை. ஆனால் காந்தியின் அரசியல் பொருளற்றதும் ஆரவாரமானதுமாகும். இந்திய ஆட்சி அரசியலின் வரலாற்றில் அது மிகவும் நேர்மையற்ற அரசியலாகும். அரசியலிலிருந்து ஒழுக்கம் அகற்றப்படுவதற்கான பொறுப்பு காந்தி என்ற மனிதரையே சாரும். அதற்குப் பதிலாக இந்திய அரசியலில் வர்த்தகத் தன்மையைக் கொண்டு வந்தார். அரசியலிலிருந்து அதனுடைய நற்பண்பு அகற்றப்பட்டு விட்டது. 'உப்போ அதனுடைய தன்மையை இழந்து விட்ட பிறகு, எதைக் கொண்டு நீ அதன் உப்புத் தன்மையை மீட்க முடியும்? என்று இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம் கேட்டார்.

இந்தியப் பொதுவாழ்விலிருந்து காந்திஜியின் தீங்கான மகான் தன்மையுடன் கூடிய கோமாளித்தனங்களை எவ்வாறு போக்குது என்பது இரண்டாவது மற்றும் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். இந்து இந்தியா இதை இன்று உணராவிட்டால், அது தனது பாதையைத் திருத்திக் கொள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். பெரும் பான்மையான இந்திய மக்கள் தற்குறிகளாகவும் அறியாமையில் உழல்பவர்களாகவும், நாகரிக மற்றவர்களாகவும் இருக்கின்றனர். இது மக்களின் தவறாக இல்லாமலிருக்கலாம். சமூகத்தின் வசதி படைத்த சிலர் வெகுஜனங்களை திட்டமிட்டு அறிவற்றவர்களாகவும் தற்குறிகளாகவும் வைத்துள்ளனர். உண்மையில், தர்க்க நியாயம் மற்றும் பகுத்தறிவின் (rationalism) வலுவினால் மட்டுமே மகாத்மாவை எதிர்த்துப் போராட முடியாது. இது அற்புதங்கள் மற்றும் கோமாளித்தனங்களுக்கு எதிராக அறிவார்ந்த தன்மையின் போராட்டமாகும். மகாத்மா அற்புதங்களின் வசியப்படுத்தும் விளைவை பகுத்தறிவினால் மட்டும் போக்கிவிட முடியாது. இந்த சூழ்நிலைகளில், நான் சில ஆலோசனைகளைக் கூறுவதற்கு விரும்புகிறேன். மகாத்மாவின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இதர மகாத்மாக்கள் இந்தியப் பொது வாழ்வில் செயலுக்கமான பங்கெடுத்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும். மற்றும் தங்களுடைய சொந்த அரசியல் பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவில் மகாத்மாக்களுக்குப் பஞ்சமில்லை. உபசானி புவா, தாதா மகராஜ். மேஹர் பாபா, நாராயண் புவா கெட்கோங்கர் முதலியவர்கள் சில பிரபலமானவர்களாவர். எண்ணற்ற மகான்களும் 'மகாத்மாக்களும் இந்தியாவில் உள்ளனர். அப்பாவிகளான மக்களை ஏமாற்றி, வசியப்படுத்தும் கலையை அவர்கள் அறிவார்கள். அவர்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை காந்திஜியைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையைவிட மிக மிகக் குறைவு என்பது மெய்யே, ஆனால் அவர்களின் ஆற்றலின்மையோ அல்லது திறமையின்மையோ மட்டும் அதற்குக் காரணமாக இருக்க முடியாது. இந்து மக்கள் திரளுக்கு கதிமோட்சம் கிடைக்கச் செய்வதோடு கூடவே, சுதந்திரம் பெறுவதற்குள்ள திறமையும் வலிமையும் அவர்களுக்கு உண்டு, அவர்கள் இதைத் தெரிந்து கொள்ள முடியாமலிருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. தனது இரட்டைக் கொள்கை மற்றும் குணத்தின் காரணமாக காந்திஜி, எல்லோருக்கும் ஆன்மிக மற்றும் அரசியல் விடுதலையையும் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததின் மூலம் தன்னைப் பின்பற்றுபவர்களை உருவாக்கிக் கொள்வதில் காந்திஜியினால் வெற்றியடைய முடித்துள்ளது.

உஸ்பானி புவா, நாராயண மகராஜ் முதலியவர்களும் காந்திஜியின் வழி முறையைக் கடைப்பிடிப்பார்களேயானால், காந்தியைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவர்களைப் பயனுறுதியாக எதிர்கொள்ளும் ஓர் அணியை அவர்களாலும் நிறுவப்பட முடியும் என்று தான் உறுதியாக நம்புகிறேன். இதில்தான் இந்தியாவின் கதி மோட்சம் அடங்கியுள்ளது. இந்த நாட்டில் பல கட்சிகளிருப்பது குறைந்தபட்சம் தற்போதைக்காவது இந்த நாட்டுக்கு அனுகூலமானதாகும். இந்த நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்ட ஓர் அமைப்பு நிறுவப்படுமேயானால், புராணங்களில் வருகின்ற அப்சரஸ்கள் ஆற்றிய அதே சேவையை இதனாலும் புரியப்பட முடியும் - அதாவது அவர்களின் எதிரிகளை ஒழித்துக்கட்ட முடியும். இது ஏற்படாமற் போனால், இந்த அமைப்பு பிற்போக்கானதாக இருந்து விடுமே யானால், அப்பொழுதும்கூட அது இருப்பது பயனுள்ளதாக இருக்கும். இந்த வழியில் எல்லாப் பக்கங்களிலும் தனது கொடுங்கரங்களைப் பரப்பிவரும் பாசிஸம் என்ற தீய போக்கைத் தடுத்து நிறுத்த முடியும். ஒரு மகாத்மா வந்து, தனது கொள்கை அறிக்கையை முன்வைத்து, தன்னால் விடுதலை பெற்றுத் தரமுடியும் என்று நேர்முகமாகக் கூறினால், ஒரு வேளை இந்தியா அறிவுத்துறை விடுதலையைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன். இது தமாஷ் அல்ல, இது யாரையும் இழிவுபடுத்துவதோ அல்லது குற்ற விமர்சனம் செய்வதோ அல்ல. இதை நான் மிகவும் ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதுகிறேன்.

தாதா மகராஜ். மேஹர் பாபா, அல்லது நாராயண புவா போன்ற மகாத்மாக்களின் மனங்களை மாற்றுவதன் மூலம் இந்துக்கள் இந்தியாவுக்கு சேவை புரிவதற்கு முயல்வார்களா?

டாக்டர் அம்பேத்கர்

தொகுப்பு: பேரா. எ.பாவலன்

Pin It