பாலஸ்தீன தேச விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு நீண்ட வரலாற்றினைக் கொண்டது. கடுமையான மதக் கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில் வாழ்ந்ததால், ஆரம்பத்தில் பெண்களின் செயலற்ற போக்கே நிலவியது. ஆனால் முதன்முதலில் 1884-ல் நடந்த சியோனிச யூத குடியேற்றத்தின் பொழுதே ஆண்களுக்கு நிகராக பெண்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பத் துவங்கினர்.

பாலஸ்தீனம் இங்கிலாந்தின் பிடியில் இருந்த 1920-களிலேயே, ஆண்களுடன் இணைந்து அரசியல் ரீதியான போராட்டங்களில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டிசாரை எதிர்த்த போராட்டங்களால் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் சமூக விடுதலை, தேச விடுதலையை அடிப்படையாகக் கொண்டு ஜெருசலேமை தளமாகக் கொண்ட அரபு மகளிர் சங்கத்தை 1921-ல் அமைத்தனர்.palastine womenஅதன் வழியே பல ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தனர். ஆணாதிக்க சமூக, மத அழுத்தங்களால் அது கலைக்கப்பட்டது. 1933-ல் சஹ்ரத் அல் உக்ஹாவான் என்கிற ஆயுதமேந்திய பெண்கள் குழுவும் இருந்தது. 1948 வரை அது யூத ஆயுதக் குழுவுடன் சண்டையிட்டது. பின்னர் அதுவும் வீழ்ச்சியடைந்தது. 1936-ல் நடைபெற்ற கிளர்ச்சிகளின் பொழுதும் பெண்கள் கூட்டமைப்பாக நிதி சேகரித்து பிரிட்டிசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு கைதான ஆண்களின் குடும்பங்களுக்கு உதவினர். அந்த கிளர்ச்சியில் ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரையும் பிரிட்டிசார் சிறைபிடிக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கற்களை மட்டும் வைத்துக் கொண்டு இராணுவத்தினர் முன் தீரத்துடன் நின்று ஆண்களை விடுவிக்கக் கூறி அதை சாதித்தும் காட்டியதாக கிராமவாசிகள் மூலமாக கேட்டறிந்ததாக ஒரு பாலஸ்தீனிய எழுத்தாளர் பதிவு செய்கிறார்.

இங்கிலாந்து தன்னுடைய அரசியல் நலனுக்காக 1948-ல் பாலஸ்தீனத்தை பிளந்து இஸ்ரேலுக்கு தாரை வார்த்த பொழுதும் உறுதியுடன் பெண்கள் எதிர்த்து நின்றனர். பாலஸ்தீன பெண்கள் சங்கம் 1964-ல் உருவானது. அதனால் பாலஸ்தீன தேசிய கவுன்சிலின் முதல் அமர்வில் பெண்கள் பங்கேற்றனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் பெரும் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் மத அழுத்தங்கள் தளர்ந்து பெண்கள் கூலி வேலைக்காவது செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பெண்களின் மீதான சமூக அழுத்தம் குறைந்தது. இதனால் முடிவெடுக்கும் அதிகாரமும் ஓரளவு பரந்த அளவில் உருவானதால் பெண்களின் கல்வி தளம் விரிவடைந்தது. படித்த மற்றும் நடுத்தர குடும்பத்துப் பெண்களால் பெண்களின் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் 1967-லிருந்து ஆயுதப் போராட்டமாக மாறியது. தாயகத்தை மீட்பதற்காக தோன்றிய பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் போர்க்குணமிக்க பெண்களாக சேர்ந்தனர். ஆயுதமேந்திய எதிர்ப்பு, சமூக பணி, மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இரகசிய நிறுவனப் பணி போன்ற தேசியப் பங்கேற்புகளில் ஈடுபட்டனர். அதில் முக்கியமானவர் பாலஸ்தீன விடுதலை முன்னணியை (Popular Front for the Liberation) சார்ந்த லீலா காலித் ஆவார்.

யாசர் அராபத் தலைமையிலான இது ஒரு முற்போக்கான இடதுசாரி அமைப்பு. லீலா காலித் விமானங்களை கடத்துவதில் வல்லவர். பெண் சேகுவேரா என்றழைக்கப்படும் அளவிற்கு புகழ் பெற்றவராக இருந்தார். பாலஸ்தீனப் பெண்களின் முன்மாதிரியாக மத்திய கிழக்கு விடுதலைப் போராடங்களின் போராட்ட தந்திரங்களை விவாதிக்கும் ஆற்றல் உடையவராக இருந்தவர். ஷாதியா அபு கசாலா என்கிற பெண் போராளி வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர். தற்செயலாக நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தால் இறந்தார். 1978-ல் ஃபதா ஆயுதக் குழுவைச் சார்ந்த பெண் போராளி தலால் மொக்ராபி ‘கடற்கரை சாலை நடவடிக்கை’ என்னும் பெயரில் நடந்த சண்டையில் ஒரு பேருந்தை கடத்திச் சென்றார். இந்த நடவடிக்கையில் 10 பாலஸ்தீன போராளிகளும் 38 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினரால் நிகழ்ந்த அரசியல், பொருளாதார சூழலே பெண்களை மதக் கட்டுப்பாடுகள் கடந்தும் போராட்டக்களத்திற்குள் ஈடுபடுத்தியது. பாலஸ்தீனத்தின் பாதி பகுதி இங்கிலாந்து செய்த வஞ்சகத்தால் இஸ்ரேலுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் எஞ்சிய மற்ற பகுதிகளும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பினால் மட்டும் சுமார் 35 லட்சம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். ஐ.நா அறிக்கையின் படி சுமார் 6.5 லட்சம் பேர் சிரியா, லெபனான், ஜோர்டான், மேற்குக்கரை மற்றும் காசாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்ற இடம்பெயர்வுகளால் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பின்(PLO) கிளைக் குழுவாக 1965-ல் பாலஸ்தீனிய பெண்களின் பொது ஒன்றியம் (General Union of Palestine women) ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பெண்களை அணிதிரட்டுதல், பாலின சமத்துவம், கல்வி, பொருளாதார அறிவை மேம்படுத்தல் போன்ற செயல் திட்டங்களை உருவாக்கினர். 1967-93 வரை ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகள் உதவியுடன் பெண்களுக்கான சமூக, பொருளாதார திட்டங்களை ஏற்படுத்தினர். 1993-ல் நடந்த ஓஸ்லோ உடன்படிக்கைக்குப் பிறகு, அரசியல் உரிமைகள், சுகாதாரம், கல்வி உரிமைகள் கிடைத்திட பாடுபட்டனர். விழிப்புணர்வுக்காக கருத்தரங்குகள் நடத்தினர். தொழில் பயிற்சி மையங்கள் திறந்தனர்.

பாலஸ்தீனப் பெண்கள் பெருமளவில் பங்கேற்ற போராட்டமாக இன்டிஃபடா போராட்டம் ஆண்டுக்கணக்கில் நடைபெற்றது. இன்டிஃபடாவிற்கு எழுச்சி என்பது பொருள். 1987-93 வரை முதல் இன்டிஃபடாவும், 2000-2005 வரை இரண்டாவது இன்டிஃபடாவும் நடந்தது. பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் 1967-லிருந்து 20 ஆண்டுகளாக நடைபெற்ற இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆயுதம் ஏந்தாமல் வன்முறையற்ற அணிதிரட்டலாக பெண்கள் மாபெரும் எழுச்சியுடன் இதனை நடத்தினர்.

முதல் இன்டிஃபடா எழுச்சிக்கு முன்பே அரசியல், சமூக ரீதியாக ஒருங்கிணைந்த அமைப்புகளை பெண்கள் ஏற்படுத்தி இருந்தனர். இந்த எழுச்சியில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தை எதிர்க்க ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், இஸ்ரேலிய பொருட்கள் புறக்கணித்தல் ஆகியவற்றைத் துவங்கினர். அதனால் ஏற்படும் நெருக்கடிகளைப் போக்க அந்தப் பெண்களே கூட்டுறவு சங்கங்கள், நடமாடும் மருத்துவமனைகள், நிலத்தடியில் பள்ளிகள் போன்றவற்றை உருவாக்கினர். இஸ்ரேலிய பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதிப்படைய வைத்தனர். ஆண்களின் போராட்டத்தின் பின்னணியில் முதுகெலும்பாக இருந்தனர். பெரும் கொடுமை இழைத்த ஆக்கிரமிப்பு படை மீது, குழந்தைகளின் குறைந்தபட்ச எதிர்ப்பான கல்லெறிதலில் உறுதுணையாக இருந்தனர்.

இரண்டாவது இன்டிஃபடா எழுச்சியின் போது இராணுவமயமாக்கல் மிகவும் அதிகமாக இருந்தது. இஸ்ரேலிய படையினரால் துப்பாக்கிச் சூடு, வான்வழித் தாக்குதல் போன்றவை நடத்தப்பட்ட போது, பெண்கள் தற்கொலைப் படைத் தாக்குதல், கல்லெறிதல் போன்ற எதிர்தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் படையினரால் பல பெண்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாயினர். குழந்தைகள் கொல்லப்பட்டனர். மோசமான கைது நடவடிக்கைகளால் பல பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இந்தக் கொடுமைகளைக் கண்டு தற்கொலைப் படையாகவும் பெண்கள் மாறும் அளவுக்கு தூண்டப்பட்டனர். அயத் அல் அக்ராஸ் என்கிற 18 வயது பெண் தற்கொலைப் படையாக மாறி தாக்குதல் நடத்தினார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினரை எதிர்க்கும் பாலஸ்தீன மக்களின் தற்போதைய ஒரே நம்பிக்கையான ஹமாஸ் அமைப்பிலும் பெண்கள் அதன் நிறுவனக் குழுக்களில் பணிபுரிகின்றனர். காலப்போக்கில் பெண்களை உயர் பதவிகள் பெறவும் ஹமாஸ் அமைப்பு அனுமதித்தனர். 2006-ல் ஆறு பெண் ஹமாஸ் தலைவர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் தொடர்பு, கல்விக்குழு, பிரச்சாரம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப் பட்டனர். முதல் ஆங்கில மொழிப் பேச்சாளராக 2013 -ல் தனது இயக்கம் சார்பாக இஸ்ரா அல் முதல்லா என்னும் பெண்மணியை நியமித்தனர். இருப்பினும் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை பெரிதும் கடைபிடிக்கும் ஹமாசினால் இராணுவ நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. யாசர் அராபத்தின் PLO அமைப்பைப் போன்று இடதுசாரி முற்போக்கு கொள்கை ஹமாசிடம் இல்லை.

‘பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை’ என்பார் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன். அதனால் பெண்களை ஆண்கள் ஈடுபடும் கடுமையான போர் பயிற்சியிலும் ஈடுபடுத்தினார். சிங்கள இராணுவத்தை துணிச்சலுடன் எதிர்த்து, பல இராணுவ முகாம்களை தகர்த்து வெற்றி வாகை சூடினர் பெண் விடுதலைப் புலிகள். சாதிய பிற்போக்குத் தனங்களில் மூழ்கிக் கிடந்த தமிழ் சமூகத்தில், பெண்களை போராட்டக் களத்தின் முன்னணி அணியாக நிற்க வைத்த பெருமை தேசியத் தலைவரையே சாரும்.

போர்க்களங்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதனால் இராணுவ ரீதியாக எதிர்த்து நிற்க பெண்களை ஆயத்தப்படுத்தியவர் தேசியத் தலைவர்.

தேசிய இனப் பிரச்சனையில் பாலஸ்தீனமும், ஈழமும் ஒரே மாதிரியாக இனவெறியர்களால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. தேசிய இன உரிமைக்கான போராட்டங்களும் இரு விடுதலைப் போராட்டங்களிலும் தொடர்கிறது. தமிழீழத்தில் பௌத்த இனவெறி கொண்ட சிங்கள அரசும், வல்லாதிக்க மேற்குலக அரசும் சேர்ந்து சாட்சிகளற்ற இனப்படுகொலை நடத்தியது போன்று, பாலஸ்தீனத்திலும் சாட்சிகளற்ற போராக நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் இணையத் தொடர்புகளை துண்டித்துள்ளது. போர் விதியை மீறி அம்மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு, மருந்து போன்றவற்றை தடை செய்துள்ளது. நம்மின அழிப்பின் போது மெளனமாய் வேடிக்கை பார்த்த ஐ.நா, சர்வதேச நாடுகள் இப்பொழுதும் பாலஸ்தீன மக்களின் அழிவை வேடிக்கை பார்க்கின்றனர். (https://may17kural.com/wp/israel-intensified-the-palestinian-genocide/)

மதக் கதைகளில் புனைந்திருக்கும் கற்பனைகளை வைத்து பாலஸ்தீனத்தை தங்களின் புராதன நாடு என்று சியோனிச அடிப்படைவாதக் குழு கருத்துப் பரப்பல்களை செய்து பாலஸ்தீன மக்களின் பாதி நிலத்தை பறித்துக் கொண்டு இஸ்ரேல் நாடாக்கிக் கொண்டது. இந்த துரோகத்திற்கு தனது அரசியல் நலனுக்காக இங்கிலாந்தும் உறுதுணையாக நின்றது. அதற்குப் பிறகும் பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து காசா பகுதியிலும், மேற்குக் கரையையும் நோக்கி அம்மக்களை தள்ளியது. தங்கள் நிலங்களைப் பறித்ததோடு நில்லாமல், தங்கள் மக்கள் மீதும் இஸ்ரேலிய இனவெறி அரசு தொடர்ந்த அடக்குமுறையைக் கண்டித்து மேலெழுந்திருக்கிறது ஹமாஸ் போராளிகள் அமைப்பு. ஹமாஸ் மதக் கட்டுப்பாடுகள் பின்பற்றும் அமைப்பு என்றாலும் சியோனிச இனவெறியை எதிர்த்து தம் மக்களுக்காக போராடும் அமைப்பாக இருக்கிறது.

வரலாற்றுப் பூர்வமான தங்களது தாயக நிலத்தைக் கோரிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்த வரலாற்றை, தமிழினப் படுகொலை வலியை அனுபவித்த நாம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதே அறமாகும். போர்ச் சூழலுக்குள் அந்த மக்கள் அனுபவிக்கும் மரண வலிகளை நிறுத்த குரல் கொடுப்போம்.

- மே பதினேழு இயக்கம்

Pin It