கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய அரசியலமைப்பு ஒரு சமூக ஆவணமாக, சமூக நீதியை உறுதியளிக்கிறது, எனவே, வரலாற்று ரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சிறப்பு ஏற்பாடுகளை உருவாக்குவதை கட்டாயப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்ட வாக்குறுதிகளை விட அரசியல் மற்றும் தேர்தல் நிர்ப்பந்தங்கள் காரணமாக, அடுத்தடுத்து வந்த அரசுகள் தேர்தலை ஒட்டி இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த அடிப்படையில் 2019 ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அறிமுகப்படுத்தியதில் ஆச்சரியமில்லை. அதைத் தொடர்ந்து 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தத் திருத்தம் பல முதல்களைக் கொண்டிருகிற்து. எடுத்துக்காட்டாக, முதன் முதலாக பொருளாதார அளவுகோல் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலாக SC, ST, OBC வகுப்பினர் புதிதாகச் சேர்க்கப்பட்ட உட்பிரிவுகள் 15(4), 16(4) ஆகியவற்றில் இருந்து விலக்கப் பட்டிருக்கின்றனர். முதன் முதலாக 50% இட ஒதுக்கீடு என்ற உச்சவரம்பு மீறப்பட்டுள்ளது. முதன் முதலாக ஒரு குழுவின் பிற்படுத்தப்பட்ட தன்மையை விட தனி நபரின் பின்தங்கிய நிலை இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையாக மாறியுள்ளது. இருப்பினும், நீதிபதி ரவீந்தர் பட், தலைமை நீதிபதி யு யு லலித் ஆகியோர், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, ஜே பி பர்திவாலா ஆகியோரின் பெரும்பான்மையான தீர்ப்பை மறுத்திருக்கின்றனர்.Supreme Court 424செண்பகம் துரைராஜன் (1951) வழக்கில் தொடங்கி எம் ஆர் பாலாஜி (1963), இந்திர சஹானி (1992), எம் நாகராஜ் (2006) வழக்கு வரை, இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கான நீதித்துறையின் தீர்ப்பை உன்னிப்பாகக் கவனித்தால், இந்திய நீதித்துறை இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. பல சந்தர்ப்பங்களில், விலக்குகள், கோட்பாடுகள், விதிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் புதிய தடைக்கற்களை உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. உண்மையில், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இந்திரசாவ்னி தீர்ப்பை ரத்து செய்ய 77 ஆவது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டியிருந்தது. இதேபோல், SC, ST வகுப்பினருக்குப் பிறகு பதவி உயர்வு பெற்ற பொதுப்பிரிவினர் SC, ST பிரிவினரை விட விரைவில் பணி மூப்பு நிலையை (Seniority) அடையும் “கைப்பற்றுதல் விதி யை” (Catch Up Rule) அறிமுகப்படுத்திய விர்பால் சிங் சவுகான் (1995), அஜித் சிங் (1999) தீர்ப்புகளை, ரத்து செய்ய 85 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்திய நீதிமன்றங்கள் “தகுதி”க்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன, மேலும் “தகுதியை” நீர்த்துப்போகாமல் செய்வதில் அவை அக்கறை காட்டுகின்றன. பல இட ஒதுக்கீடு விஷயங்களில், உயர் சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் அதிக அக்கறை காட்டுகின்றன. உண்மையில், EWS இட ஒதுக்கீடு உயர் சாதியினருக்கானது மட்டுமே.

அரசியலமைப்புத் சட்டத் திருத்தங்கள் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிப்பது அரிதினும் அரிதானது. ஏனெனில் எந்த ஒரு திருத்தத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறும் திருத்தம் என்ற அடிப்படையில் மட்டுமே தடை செய்ய முடியும். 1973 ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு முன்மொழியப்பட்டதிலிருந்து, 70 க்கும் மேற்பட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஐந்து மட்டுமே இதுவரை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசிய நீதிபதிகள் பணிநியமன ஆணையச் (NJAC) சட்டத்திருத்தம் கடைசியாக 2016 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது.

எம் நாகராஜ் (2006) வழக்குத் தீர்ப்பின்படி, நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டின் பேரில் ஆய்வு மேற்கொள்ள இரண்டு சோதனைகள் உள்ளன. ஒன்று, சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் பாராளுமன்றத்தின் அதிகார எல்லைகளை ஆராயும் எல்லைச்சோதனை, அடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அடையாளத்தை மாற்றுகிறதா என்பதை ஆராயும் அடையாளச் சோதனை. எந்த சட்டத் திருத்தமும் அரசியலமைப்பின் அடிப்படை அடையாளத்தை மாற்ற முடியாது. இச் சோதனைகளின் படி, சட்டத் திருத்தத்திற்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இல்லாது அப்படியே இருக்கின்றது என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவின் இட ஒதுக்கீட்டுத் திட்டம் இதுவரை வரலாற்று அநீதிகளையும் சமூகப் பின்தங்கிய நிலைகளையும் சார்ந்து மட்டுமே வேலை செய்து வந்தது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரியின் கருத்துப்படி, இந்த நன்மையை மற்றவர்களுக்கும் தருவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு அடையாளத்தை மாற்றாது. அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் (Preample) குறிப்பிடப் பட்டுள்ள சமூகப், பொருளாதார, அரசியல் நீதி எனும் இலக்கை அடைவதற்கான வழியாக புதிய EWS இட ஒதுக்கீடு இருக்கு என நீதிபதி தினேஷ் மகேஸ்வரியின் கருத்து. மற்ற நீதிபதிகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மற்றும் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாட்டுடன் (Directive Principle) ஒத்துப்போகும் எந்தவொரு விதியும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை மீறியதாகக் கருத முடியாது என்றனர்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு புதியதாக இருந்தாலும் அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை தலைகீழாக புரட்டிப் போடுமளவுக்கு இல்லை என்று பெரும்பான்மை தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வறுமை என்பது பின்தங்கிய நிலைக்கான அடிப்படை ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக நீதிபதி தினேஷ் மகேஸ்வரி பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார். மக்களின் தேவைகளை பாராளுமன்றம் நன்கு புரிந்து கொண்டுள்ளது என்றார் நீதிபதி திரிவேதி. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு, பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை அளவுக்கோலாக வகுப்பதில் இருந்து பாராளுமன்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்று பெரும்பான்மைத் தீர்ப்பு கருதுகிறது. எனவே அத்தகைய திருத்தம் அரசியலமைப்பின் சமத்துவக் குறியீட்டுக்கு (Equality Code) எதிராக இல்லை எனும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, “வறுமை என்பது வெறும் தேக்க நிலை மட்டுமல்ல, அது பின்னடைவின் ஒரு புள்ளியாகும்” என்கிறார்.

ஆனால், ஜாதிப் பாகுபாடு போலல்லாமல் பொருளாதாரக் குறைபாடு என்பது தனிநபர் சார்ந்தது. இதில் எந்த சமூக அவமானமும் இல்லை. இந்த விஷயத்தில் தனது முந்தைய தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால்தான் நீதிபதி ரவீந்தர் பட், குறிப்பாக SC, ST, OBC வகுப்பினர் EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட்ட காரணத்தை ஏற்க தன்னால் முடியவில்லை என்றார்.

புதிய இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்துவதற்கும் அதன் மூலம் பலன்கள் விளைய வேண்டுமானால் இத்தகைய விலக்கு தவிர்க்க முடியாதது என்று பெரும்பான்மை நீதிபதிகள் கருதினர். ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறும் SC, ST, OBC பயனாளிகள் விலக்கப்படாவிட்டால், அவர்களுக்கு அதிகப்படியான நன்மையையும் சலுகைகளையும் தருவதற்குச் சமமாகும் என்பது அவர்கள் கருத்து. ஏற்கனவே வழங்கப்படும் சாதி ரீதியான இட ஒதுக்கீட்டிலும், மற்ற சிலர் விலக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி மகேஸ்வரி கூறினார். எனவே மற்றவர்களுக்கான புதிய ஒதுக்கீட்டுக் கொள்கையில் தாங்கள் விலக்கப்படுவதை அவர்கள் எதிர்க்க முடியாது என்றும் அவர் கருதுகிறார். ஆனால், ஏழை மக்களில் பெரும்பாலோர் SC, ST, OBC வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை விலக்குவது சரியல்ல என்று நீதிபதி ரவீந்தர் பட் குறிப்பிட்டார். புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை அறிமுகப் படுத்த பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்றும் பெரும்பான்மை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நீதிபதிகள் ஃபசல் அலி, வி ஆர் கிருஷ்ண ஐயர் ஆகியோரை கொண்ட N.M. தாமஸ் வழக்குத் (1976) தீர்ப்பு உட்பட 50% உச்சவரம்பு குறித்த முந்தைய பல தீர்ப்புகளையும் பெரும்பான்மை நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். வசந்த் குமார் (1985) வழக்கில், நீதிபதி சின்னப்ப ரெட்டி, "நீதிமன்றம் 40 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றோ, 50 அல்லது 60 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றோ சொல்வது தன்னிச்சையானது. அரசியலமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்தை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கவில்லை" என்று குறிப்பிட்டார். இந்திர சஹானி வழக்கில் கூட அரசு 50% உச்சவரம்பை மீறிச்செல்ல செல்ல ஒரு சிறிய திறப்பை வைத்திருந்தது. தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் SC, ST, OBC பயனாளிகளுக்கும் இதையே செய்திருந்தால், அகில இந்திய அளவில் இத்தகைய மீறலை நீதிமன்றம் அனுமதித்திருக்குமா என்பதே உண்மையான கேள்வி. 50% உச்சவரம்பு உயர்சாதியினரின் (பொதுப் பிரிவின்) நலனுக்கானது என்றும், தற்போதய இட ஒதுக்கீடு (SC, ST, OBC) பிரிவினருக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஒப்புக் கொண்டார். ஆனால், நீதிபதி ரவிந்தர் ரவீந்தர் பட், இதுவரை இல்லாத வகையில், புதுப்புது பிரச்சினைகள் இனி உருவாகும் என்று கருதினார்.

பெரும்பான்மை நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எத்தனை காலம் தொடருவது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள நிலையில், அவர்களே உயர் சாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் உறுதி செய்துள்ளனர். இது இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் முடிவா, அல்லது தொடக்கமா என்பதைக் காலம்தான் சொல்லும்.

- பைசான் முஸ்தபா, அரசியலமைப்பு சட்ட நிபுணர் 

நன்றி: The Indian Express இணையதளம் (2022, நவம்பர் 8 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: கவுதமன்