பள்ளிக் கல்விக்கான தேர்வுகள் தொடங்கி விட்டன. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்குத் தேர்வுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் மெட்ரிக் மற்றும் மாநிலக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. மாணவர்கள் தேர்வுகளை எழுதுவதற்கு முழுப் பயிற்சியுடன் கூடுதல் மதிப்பெண்ணை அதிகப்படுத்துவதற்கான கடின உழைப்பையும் செலுத்தித் தயார் நிலையில் இருக்கின்றனர். மாணவர்களின் மதிப்பெண் என்பது மாணவர்களின் முயற்சியால் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. ஆசிரியர், பெற்றோர், நண்பர்கள், சமூகம் மற்றும் மாணவரின் மனநலம், உடல் நலம் இவைகளை எல்லாம் சார்ந்தவை என்பதை மாணவர்கள் உணர்ந்து தேர்வை அணுகத் தயாராகும் பொழுது உயர்ந்த மதிப்பெண் இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

தேர்வும் வெளிப்பாடும்

கற்றல் செயல்பாடுகள் என்பது ஓராண்டு கால செயல்பாடாக அமைந்தாலும் ஓராண்டு காலம் மாணவர் படித்தவற்றைச் சிந்தித்துச் செயல்திறனை வெளிப்படுத்திக் காட்டி மதிப்பெண்களாக மாற்றுவது என்பது அந்தப் பாடத் தேர்வுக்குரிய மூன்று மணி நேரம் மட்டுமே. இந்த மூன்று மணி நேரத்தில் மாணவர்கள் ஓராண்டு வகுப்பறைக்குள் கற்றவற்றைத் திறம்பட வெளிப்படுத்த வேண்டும். இந்த வெளிப்பாடு என்பதும் சிந்தித்தல் அளவிலும், விடை எழுதுதல் மற்றும் நேர்த்தியாக விடையளித்தல் முறைகளை உள்ளடக்கிய பகுதிகளாகப் புரிந்து கொண்டு தேர்வை எழுத தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.exam centreதற்காலிகத் துயர்

படித்து உணர்ந்து கொண்ட பாடத்தைத் தேர்வில் வெளிப்படுத்துகின்ற இந்தக் காலம் அதாவது தேர்வு தொடங்கி எல்லா பாடங்களின் தேர்வுகளும் நடந்து முடிகின்ற கால இடைவெளி என்பது தேர்வுக்குப் படித்த காலங்களை விட மிக முக்கியமான காலங்கள் என்பதை மாணவர்கள் உணர்ந்து தங்களைச் சுயமாகப் பாதுகாத்துக் கொள்ள தயாராக வேண்டும்.

தேர்வை எதிர்கொள்ளாமல் போகப் பல்வேறு பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நிகழ்வதற்கான சாந்தியங்கள் ஏராளமாக இருக்கின்றன. தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி போன்றவை வருவது இயல்பானவைகள். ஆனாலும், இவைகளில் எது ஒன்று வந்தாலும் அதன் பாதிப்புப் பொதுத்தேர்வின் மதிப்பெண்களின் உண்டாக்கும் என்பதை உணர்ந்து தினமும் நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவதும் உடலுக்கும் வயிற்றுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் துரித உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதும் நன்மை பயக்கும்.

கோடை காலத்தின் தொடக்கத்தில் தேர்வுகள் நடைபெறுவதால் வெயில் தொடர்பான அம்மை போன்ற வெப்பு நோய்கள் தொற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் நன்றாகக் குளிப்பது, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகின்ற இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் போன்ற உணவுகளை உண்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

தனிநபர் வாகனப் பயணம் தவிர்த்தல்.

தேர்வு காலத்தில் இயற்கை சில நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அவைகள் கடந்து சில துயரங்களை மாணவர்கள் அவர்களின் அறியாமையால் நிகழ்த்திக் கொள்கிறார்கள், அவற்றின் முக்கியமானது வாகன விபத்து. வாகனங்களை எடுத்துக் கொண்டு நண்பரைச் சந்திக்கவும் கடைவீதிக்கும் அருகில் தானே இருக்கிறது சென்று வந்து விடலாம் என்கிற அலட்சியமான போக்கை கைகொண்டு மாணவர்கள் பெற்றோரின் அனுமதியோ, வழிகாட்டுதலோ இல்லாமல் செல்கின்ற பொழுது பெரும் விபத்துக்கள் நடைபெற்று விடுகின்றன. இந்த விபத்துகள் என்பது முற்றிலுமாக மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து விடுகிறது. மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியாத சூழலில் ஓராண்டு கால படிப்பு முற்றிலுமாக முடங்கிப்போய் விடுகிறது. இந்தச் சூழலை எல்லாம் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படியான விபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான செயல்பாடுகளைத் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுச் செயலாற்ற வேண்டும்.

பாதுகாப்பே முதன்மையானது

கண்விழித்துப் படித்துத் தேர்வுக்குத் தயாராவது என்பதையெல்லாம் விட படித்து உள்வாங்கிக் கொண்ட பாடத்தைத் தேர்வு தாளில் கொண்டு சேர்ப்பதற்கு உடல் நலமும் மனநலமும் நூறு சதவீதம் ஒத்துழைப்பைத் தந்தால் மட்டுமே முழுதாகத் தம் திறனைத் தேர்வில் வெளிப்படுத்த முடியும். காலம் முழுதும் ஒரு அழகிய பானையை வனைந்து , சுட்டுத் தண்ணீரைப் பானையில் சேமிக்கின்ற காலத்தில் பானையின் அடியில் அறியாமையால் ஒரு ஓட்டை போடுவது போல தேர்வு நடைபெறும் காலங்களில் தங்களின் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது.

தேர்வை விட பாதுகாப்பு முக்கியமானது மாணவர்களே உங்கள் பாதுகாப்பை ஆசிரியரும் பெற்றோரும் சேர்ந்தே முன்னெடுப்பார்கள் அவர்களின் கருத்துக்களுக்குச் செவி கொடுங்கள் தேர்வு வெற்றி என்பது இயல்பானதாக அமையும்.

- மகா.இராஜராஜசோழன், தமிழாசிரியர், எஸ்.ஆர்.வி சீனியர் செகன்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

Pin It