கலர் கனவுகள் இப்போது தான் தெரிகிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது. நமக்கு எப்போதோ நிறங்கள் கூடி விட்டன. நித்திரைக்கு கூட நிறம் சூடி பார்க்கும் சித்திர வேலைக்காரன் இவன் இல்லையா. உனக்கு ஆட்டம் காட்டும் கருப்பு எனக்கு நீலத்தில் சமத்து. என் சிணுங்கல் கூட சிவப்பில் தான். சிருங்கார சொரூபம் அது கொண்ட ஜென்ம பிம்பம்.

எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது தான். நினைத்த மாத்திரத்தில் ஒரு வானவில்லை நெற்றியில் சூடும் உன் போன்ற பெண்ணோடு வானத்தில் கூடு கட்டும் எண்ண குருவியின் ஓர் அதிகாலை சிறகடிப்பு அது. மனதுக்குள் திறக்கும் முதல் ஜன்னலுக்கு எந்தன் நிறம். பிறகு திறக்கும் வீட்டு ஜன்னலுக்கு கண்கள் நிறம். எட்டி பார்க்க... கிட்ட நெருங்கும் சூரிய ஓசைக்கு என்ன நிறம். யோசிக்கிறேன்.

சரி தான். நானொரு நிறமி. கருப்பு வெள்ளையில் திரியும் கலர் நினைப்பு நான். இருக்கும் வண்ணமெல்லாம் பூசி... அந்த நேர இசைக்கு நிறம் இன்றி தவிக்கும் உன் ஓவியத்தில் கண்ணாடி கழற்றி விளையாடும் வண்ண டப்பாவும் நான். சுருட்ட முடியில் சுந்தர ஒளியில் உன் சிரிப்புக்கு வண்ணம் இருக்கிறது. கன்னம் நிறைய கண்டிருக்கிறேன்.

ஒளிகளின் வழியே நிறங்களின் முரண். முரண்பாடு தானே தேடலுக்கு வழி. உடன்பாடு ஓய்வு எனக்கு. மலர்ந்து உதிர்ந்து மலர்ந்து உதிர்ந்து வந்து பேசும் காற்றென கிசுகிசுக்கும் உன் சொற்களுக்கு சமர்ப்பணம்.... முன் சொன்ன மலர்ந்து உதிர்ந்து மலர்ந்து உதிர்ந்து.

படபடப்பும் பதற்றமும் என் அரண்கள். அது சூழும் வர்ணத்தில் உதிரும் சொற்களே என் அர்த்தங்கள். ஒவ்வொரு முறையும் புது முறை தான். ஒவ்வொரு நாளும் புது நாள் தான். கற்றுக் கொள்ள வந்த இடத்தில் கல்லுக்குள் ஈரமும் கலர் கலராய். கவனித்திருக்கிறாயா.

தொடர் பேச்சில் இருக்கும் மௌனமும்.... மௌனத்தில் முழங்கும் பேச்சும்... அதுவே சமநிலை. கைகள் விரித்து காற்றில் நிற்கையில்... மனதுள் எழும் நிறத்துக்கு என்ன வண்ணம் பூச... சகியே. தானாக விழும் இலைக்கு தான் பறக்கும் சக்தி உண்டு. அதன் நெஞ்சில் ஊர்ந்து பச்சை பூச எறும்புக்கும் ஆசை. கவனிக்கும் இந்த இரும்புக்கும் ஆசை.

ஆசைக்கு நிறம் உண்டு. அதன் ஓசை கவனி.

எடுத்து பூசிக் கொள்ள ஒரு வண்ணம் தினம் வேண்டும். கழற்றி வீசி எறியவும் அதற்கு தெரிந்திருக்க வேண்டும். நகர்ந்திட கொள்ளும் தீர்மானத்தில் நத்தை நிறத்து நளினம் ஒப்பனை. நாகத்தின் வேகத்தில் செங்குத்து கற்பனை பனை.

பயணங்கள் இல்லாமல் பரிணாமம் கிடையாது. பரிசோதனை கொள் மனமே... தூரங்கள் முடியாது. பரி பூரணம் எதுவென்றால்... பாதி சாம ஜன்னல் ஓரம். தூக்க களைப்பில் தோள் பொருந்த... மீதி ஜன்னல் மினுமினுக்கும். மினுமினுக்கும் நினைப்பில் எல்லாம் மின்னல் நிறம் யோசி பெண்ணே. மீறும் வண்ண குலவை எல்லாம் மெல்லிய கோட்டில் இவன் மாநிறம்.

கொண்டை ஊசி வளைவுகள் மீது தீரா காதல் உண்டு. எப்போதும் வளைந்து கொண்டே இருக்கும் வனத்தின் நிறம் அது. அதனூடாக ஓர் ஓவியம் நிகழ்த்துவது என் வேடிக்கை. நின்றபடியே பறக்க கற்று தரும் அதன் நெளிவில் நீண்ட கனவின் குறுக்கு வழி உண்டு. ரகசிய அடுக்குகளின் மன ஆழம் அது. மாயத்தின் விளிம்பில் மாற்றி யோசிக்கும் முன் பின்னற்ற அரை வட்டத்தில் ஆகாயமும் வளைந்திருக்கும். வளைந்து பாரேன்.

வண்ணங்கள் பூக்கும் மரங்கள் அடியே இந்த பயணத்தில்... அடுத்த நிறமும்.. அதற்கு அடுத்த நிறமும் கூட காத்திருப்பது மைல்கல் கூறும் வெளிர் நிற இடைவெளி.

வானுக்கடியே மேய்ச்சல் பழகுதல் வானவில் நடும் வனாந்திர கனவு. கால நேரம் என்பது காலத்தின் நிறம் என்று தான் யோசிக்கிறேன்.

மலை உச்சியில் இருக்கும் சிறு வெயிலின் கரம் இவன் சிரம். சரி...நண்பகல் நிலவுக்கு என்ன நிறம்.

- கவிஜி

Pin It