சங்க இலக்கியம் பல்வேறு விதமான புதையல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, சொற்பொருள் குவியல்கள் ஏராளம். ‘ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’ என்பார்கள். ஏனென்றால், அந்தளவிற்குச் சொற்களானது பல்வேறு கருத்தியல்களை இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் வெளிப்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் அவண், இவண் என்ற இரு சொல்லையும் கவனத்தில் கொண்டு, அது எந்த மாதிரியான பொருட்பொதிவைக் கொண்டுள்ளது என்பதை ஆராய்ந்து விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது. இதில் மக்களின் இயல்பு வழக்கில் ஆண்பால் பொருளுடைய, அவன், இவன் என்கிற சுட்டுப் பெயர்களைக் கொண்டு அமையவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விழைகிறேன். மாற்றாக, அவண், இவண் என்ற சொற்களே முதன்மை பேசுபொருளாகும். இனி விரிவாகக் காணலாம்.
 
அகராதிகள் - நிகண்டுகள் கையளிக்கும் அவண் – இவண்
 
தமிழ் அகராதிகள் அவண், இவண் என்ற சொற்களுக்குப் பொருள் விளக்கம் அளிக்கையில், அவண் - அவ்விடம், அங்ஙனம், அவ்விதம், அப்படி, அவ்வாறு, அவ்வண்ணமே என்ற பொருளும் இவண் - இவ்விடம், இங்ஙனம், இம்மை, இப்படி, இவ்வாறு, இவ்வண்ணமே என்ற பொருளினை அளிக்கின்றன. அகராதிகள், நிகண்டுகள் வகையில் இத்தன்மையில் அமைய இலக்கியங்களில் இச்சொற்கள் எத்தன்மையில் அமைகின்றன என்பதும் கவனத்திற்குரியது. 
 
சங்க இலக்கியத்தில் – அவண்
 
சங்க இலக்கியத்தில் அவண் என்கிற சொல் மொத்தம் இருபத்தி எட்டு (28) இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அதனைப் பின்வரும் அடைவு தெளிவுபடுத்துகிறது. இவை எந்தப் பொருள்களில் வழங்கப்பட்டன என்பதனைக் காணலாம். நற்றிணை நூலில் ஏழு (7) இடங்களில் அவண் என்கிற இச்சொல்லானது இடம்பெற்றுள்ளது.
 
சேய்உயர் பெர வரைச் சென்று அவண் மறைய - (நற். 69/2)
 
சேகம்பூதனார் பாடியுள்ள இப்பாடலில், ‘பல கதிர்களை உடைய சூரிய மண்டிலம் பகற்பொழுதைச் செய்து முடித்துத் தொலைவில் உயர்ந்த பெரிய மலையின் கண்ணே (மலையிடத்தே) மறைந்தது’ அவ்விடம் என்னும் பொருளை உடைய கண் என்ற வேற்றுமை உருபு இடப்பொருளை உணர்த்தி நிற்கிறது.
 
எவாய் சென்றனை அவண் எனக் கூறி - (நற். 147/4) 
 
நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம் - (நற். 148/2)
 
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து - (நற். 183/4)
 
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து - (நற். 229/6)
 
என்நிலை உரையாய் சென்று அவண் வரவே - (நற். 277/12)
 
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே - (நற். 323/11)
 
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி - (அகம். 19/1)
 
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை - (அகம். 37/1)
 
அளி இன்மையின் அவண் உறை முனைஇ - (அகம். 40/11)
 
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி - (அகம். 106/8, 9)
 
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன - (அகம். 127/9,10)
 
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்
தங்கலர் வாழி தோழி வெல் கொடி - (அகம். 251/5, 6)
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக - (அகம். 302/12)
 
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை - (அகம். 336/17)
 
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் - (அகம். 399/5)
 
வன் திணி நீள் முளை போல சென்று அவண்
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய - (புறம். 73/ 10, 11)
 
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் - (புறம். 190/7)
 
வாராது அவண் உறை நீடின் நேர் வளை - (ஐங். 269/3)
 
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ - (ஐங். 295/2)
 
தாழ்நீர் இமிழ்சுனை நாப்பண் குளித்து அவண்
மீநீர் நிவந்த விறல்இழை கேள்வனை - (பரி. 21/39, 40)
 
இகல் பல செல்வம் விளைத்து அவண் கண்டு இப்பால் - (பரி. 24/32)
 
யாம் அவண் - நின்றும் வருதும் நீயிரும் - (மலை. 53)
 
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி - (மலை. 158)
 
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து - (குறு. 322/4)
 
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் - (பதி. 12/14)
 
யாம் அவண் - நின்றும் வருதும் நீயிரும் - (சிறு. 143)
 
அவண் முனையின் அகன்று மாறி – (பொரு. 198)
 
அகநானூற்றில் ஒன்பது (9) இடங்களிலும் புறநானூறு, ஐங்குறுநூறு, பரிபாடல், மலைபடுகடாம் ஆகிய நூல்களில் வரிசையில் இரண்டு (2) முறையிலும் குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பொருநாராற்றுப்படை ஆகிய நூல்களில் ஒரு முறையும் அவண் என்கிற சொல் இடம்பெற்றுள்ளது.
இவைகளில் பெரும்பாலும் அவ்விடத்தே என்கிற பொருளையே உணர்த்தி நிற்கிறது.
 
சங்க இலத்தியத்தில் – இவண்
 
இவண் என்கிற சொல்லானது சங்க இலக்கியத்தில் மொத்தம் எழுபத்தி ஏழு (77) இடங்களில் பயின்று வந்துள்ளது. இச்சொல்லானது மேற்கண்ட அகராதிகள் உணர்த்தும் பொருளையே வெளிப்படுத்துகின்றன. இவ்விடம், இவ்விடத்தே என்ற பொருளே பெரும்பாலும் சுட்டி நிற்கிறது.
 
நின்றது இல்பொருள் பிணி சென்று இவண் தரும்-மார் - அகம் 27/4
 
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து - அகம் 47/2
 
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி என் துறந்து - அகம் 55/15,16
 
மெய் இவண் ஒழிய போகி அவர் - அகம் 113/26
 
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய - அகம் 127/2
 
ஆய்ந்த பரியன் வந்து இவண்
மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே - அகம் 190/16,17
 
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை - அகம் 203/8
 
தான் இவண் வந்த-காலை நம் ஊர் - அகம் 210/8
 
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே - அகம் 215/17
 
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே - அகம் 230/16
 
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய - அகம் 239/10
 
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் - அகம் 275/9
 
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய - அகம் 275/13
 
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் - அகம் 283/2
 
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே - அகம் 298/13,14
 
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ - அகம் 310/11
 
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய - அகம் 313/8
 
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய - அகம் 318/10
 
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி - அகம் 325/6
 
அவணர் காதலர் ஆயினும் இவண் நம் - அகம் 333/18
 
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப - அகம் 340/12,13
 
செய்வினை வலத்தர் ஆகி இவண் நயந்து - அகம் 363/16
 
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் - அகம் 398/6
 
பல்பூ கானத்து அல்கி இன்று இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ - அகம் 398/20,21
 
தட்டோர் அம்ம இவண் தட்டோரே - புறம் 18/29
 
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - புறம் 18/30
 
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது - புறம் 50/14
 
இனிய காண்க இவண் தணிக என கூறி - புறம் 70/4
 
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - புறம் 99/2
 
இவண் வந்த பெரு நசையேம் - புறம் 136/19
 
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற - புறம் 158/19,20
 
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண - புறம் 158/26
 
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ - புறம் 210/4
 
என் இவண் ஒழித்த அன்பு இலாள - புறம் 222/4
 
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய - புறம் 261/15
 
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது - புறம் 275/6
 
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும் - புறம் 280/10
 
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி - புறம் 297/5
 
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் - புறம் 367/9
 
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் - புறம் 373/33
 
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லா - புறம் 387/31,32
 
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே - புறம் 392/21
 
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை - நற் 4/5
 
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து - நற் 56/7
 
அவணர் ஆகுக காதலர் இவண் நம் - நற் 64/11
 
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய - நற் 73/5
 
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் - நற் 78/6
 
நெடுநீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே - நற் 91/12
 
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய - நற் 129/3
 
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய - நற் 271/3
 
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று - நற் 400/5
 
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே - குறு 11/3
 
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய - குறு 22/1
 
ஏதிலாளர் இவண் வரின் போதின் - குறு 191/5
 
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல - குறு 223/2,3
 
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே - குறு 227/3,4
 
கழிந்த நாள் இவண் வாழும் நாளே - குறு 323/7
 
பூ கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பது ஆக என வேட்டோமே - ஐங் 8/5,6
 
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் - ஐங் 75/1
 
எம் இவண் நல்குதல் அரிது - ஐங் 86/3
 
நீ இவண் வரூஉம்-காலை - ஐங் 238/4
 
நீடி இவண் வருநர் சென்ற ஆறே - ஐங் 335/5
 
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே - ஐங் 456/5
 
யார் இவண் நின்றீர் என கூறி பையென - கலி 65/11
 
புறநிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா - கலி 99/9
 
செய்தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா - கலி 99/12
 
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா - கலி 99/15
 
உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் - மது 471
 
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து - மது 478
 
உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் - மது 471
 
உயர்நிலை உலகத்து செல்லாது இவண் நின்று - பதி 54/10
 
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே - பதி 71/27
 
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே - பதி 92/16
 
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை - பரி 1/37
 
அன்னோர் யாம் இவண் காணாமையின் - பரி 1/54
 
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் - சிறு 144
 
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப - மலை 541
 
மேற்கண்ட இவண் என்கிற சொல்லானது அகநானூற்றில் 24 இடங்களிலும் புறநானூற்றில் 18 இடங்களிலும் நற்றிணை – 9, குறுந்தொகை, ஐங்குறுநூறு – 6 என்ற முறையே, கலித்தொகையில் – 4, மதுரைக்காஞ்சி – 3, பதிற்றுப்பத்து – 3, பரிபாடல் – 2, சிறுபாணாற்றுப்படை – 1, மலைபடுகடாம் – 1 என 77 இடங்களில் இச்சொல்லானது இடம்பெற்று சிறப்புறுகிறது. சில இடங்களில் நேரடியாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் இச்சொல் பயின்று வந்துள்ளது.
 
சங்க இலக்கியத்தில் உவண் - உவன்
 
சங்க இலக்கித்தில் உவண் என்கிற சொல் எங்கும் இடம்பெறவில்லை என்றே அறிய முடிகிறது. ஆனால், உவண் – உவ்விடம், மேலிடம் என்ற பொருளை உணர்த்தி நிற்கிறது. இதனை, சீவகசிந்தாமணி பாடல் அடி – 12853இல் இச்சொல்லைக் காணமுடிகிறது.
 
உவன் என்கிற முன்னிலைச் சுட்டு நிலையில் நற்றினையிலும் (1) பரிபாடலிலும் (1) ஒரு இடங்களில் இடம்பெற்று இரண்டாக உள்ளது. அவை பின்வருமாறு,
 
உவன் வரின் எவனோ பாண பேதை - (நற். 127/3)
 
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன்
நாணாள் அவனைஇ நாரிகை என்மரும் - (பரி. 12/55, 56)
 
ஆண் என்கிற பாலை உணர்த்தி நிற்கும் போக்கில் உவன் என்கிற சொல்லானது கையாளப்பட்டுள்ளது.
 
தற்கால வழக்குப் பயன்பாடு
 
தொல் மனித இனத்தின் தொடர்ச்சி இன்று வரை நிலவுகிறது. அது பண்பாட்டுக் கூறுகளாக, சடங்குகளாக, பழக்க வழக்கங்களாக எனப் பல்வேறு நிலைகளில் காணப்படுகிறது. சொல்லும் பொருளும் அவ்வாறு காலத்திற்கு ஏற்றார் போல், மாறுபட்டும் வந்துள்ளதைக் காண முடிகிறது.
 
அவண், இவண் என்ற சொற்கள் இன்றைய இருபத்தியோரம் நூற்றாண்டிலும் மீள் பயன்பாட்டினைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியான செய்தியே. ஆயினும் அவற்றின் பொருள் அறிந்து பயன்படுத்துகின்றனரா? என்றால் அது வினாவே. புதிய சொல் ஒன்றைப் பயன்படுத்துகிறோம், மாற்றமாக உள்ளது, பிறரைக் கவர / ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் திருமண அழைப்பிதழ் தொடங்கி பேனர் / பிளக்ஸ் போன்ற நவீனக் கலச்சார வெளிப்படுகளிலும் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று அங்ஙனம், இங்ஙனம் என்ற சொற்களும் இம்முறையிலான பயன்பாட்டிலே தொடர்கிறது. காலம் தனக்கேற்றார் போல் மனிதர்களையும் மனிதனின் மொழியையும் அதன் சொல் வளத்தையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது.
 
நிறைவாக
 
அவண், இவண் என்ற சொற்கள், அவண் - அவ்விடம், அவ்வாறு என்ற பொருளிலும் இவண் - இவ்விடம், இவ்வாறு என்ற பொருளிலும் சங்க இலக்கியத்தில் பெருமளவில் பயன்பட்டு வந்துள்ளது. இச்சொற்களைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக சங்கப் பாடல்கள் திகழ்கின்றன. எனினும் மக்கள் பேச்சு வழக்கில் இன்னும் வழங்கப்படாத சொல்லாகவே இச்சொற்கள் உள்ளன. ஆயினும் இலங்கை – யாழ்ப்பாணத் தமிழில் இச்சொற்கள் வழங்கப்படடு வருகின்றன. இதுகுறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.
 
துணைநின்ற நூல்கள்
 
1. பாலசுப்பிரமணியன் கு.வெ. - நற்றிணை மூலமும் உரையும், 2004 – முதற்பதிப்பு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை – 600 098.
2. ஆலிஸ். அ - பதிற்றுப்பத்து மூலமும் உரையும், 2011 – நான்காம் பதிப்பு, நியு செஞ்சுரி புக் செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை – 600 098.
3. செயபால். இரா - அகநானூறு மூலமும் உரையும், 2011 – இரண்டாம் பதிப்பு, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், சென்னை – 14.
4. மாணிக்கவாசகன். ஞா - புறநானூறு மூலமும் உரையும், 2010 – நான்காம் பதிப்பு, உமா பதிப்பகம்,சென்னை – 600 001.
5. புலியூர்க் கேசிகன் - கலித்தொகை மூலமும் உரையும், 2021 – மூன்றாம் பதிப்பு, சரண் புக்ஸ், சென்னை – 600 017.
6. அறிஞர். ச. வே. சுப்பிரமணியன் – சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மதுரைக்காஞ்சி, தெளிவுரை, 2014 – முதல் பதிப்பு, மெய்யப்பன் பதிப்பகம், சென்னை – 600 021.
7. வித்துவான் நாராயண வேலுப்பிள்ளை M - பத்துப்பாட்டு, மூலமும் தெளிவுரையும், முதல் பகுதி, முல்லை நிலையம், சென்னை – 600 001.
8. சாமி. சிதம்பரனார் - பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், 2003 – முதல் பதிப்பு, அறிவுப் பதிப்பகம், சென்னை – 600 014
 
- முனைவர் ஜெ.மதிவேந்தன், கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, செய்யாறு – 604 407, திருவண்ணாமலை மாவட்டம்.
Pin It