இரண்டு நாட்களுக்கு முன் சரண் உடன் பேசிக்கொண்டிருக்கையில் இந்த பிலிம் ரோலின் சின்ன சின்ன கட்டிங் பற்றிய பேச்சு வந்தது. தன் வீட்டுக்கு எதிரே இருக்கும் திரை அரங்கில் இருந்து (90 களில்) கிடைத்த பிலிம் கட்டிங்குகளை எல்லாம் சேகரித்து வைத்திருப்பதாக... அதை போட்டோ கூட எடுத்து காட்டி இருந்தாள். எனக்கும் இதே மாதிரி நினைவுகள் ஈஸ்ட்மென் கலரில் மனதுக்குள் உருள.. சரி எழுதுவோம் என்று தோன்றியது.

சின்ன சின்ன பிலிம் கட்டிங்குகளை ஒட்டி ஒட்டி சுவற்றில் டார்ச் அடித்து படம் காட்டிய பால்யம் எனக்குள்ளே பளிச்சிடுகிறது. சினிமா எனக்கு சிறு வயது முதலே சில்லென பூத்த சிறு வண்ண சிறகு என்றால் இன்னமும் சிலிர்த்துக் கொள்கிறேன். உள்ளூர் சினிமாக்களில் இருந்து உலக சினிமாக்கள் வரை நல்ல சினிமாக்கள் என்றால்... விடிய விடிய பார்க்கும் பரவசம் இன்னமும் விட்டபாடில்லை. கோயில் திருவிழாவுக்கு டெக் எடுத்து போட்ட வெற்றி விழா உள்பட மூன்று படங்களை முழு இரவும் பார்த்து விட்டு காலையில் அப்படியே கிளம்பி பள்ளி சென்ற சினிமா விரும்பி இவன்.

Karpagam complex coimbatoreடிவி வந்த புதிதாகட்டும்.. ஊருக்குள் திரை கட்டி போடும் படமாகட்டும்... சோலையார் டேமில் இருந்த டென்ட் கொட்டாயில் பார்த்த படங்களாகட்டும்... சினிமா ஒரு மாய சித்திரத்தை மனதுக்குள் அப்போதே வரைய ஆரம்பித்து விட்டது. அடுத்த வாரிசு...படமெல்லாம் அங்கே பார்த்தது தான். நானே வருவேன்.. இந்தியன் எல்லாம்....வால்பாறை கல்பனாவில் பார்த்தது.

முத்து சேட்டா கடையில்... சின்ன சின்ன பிலிம் கட்டிங்குகளை ஐந்து பைசாவுக்கு வாங்கி வந்து... ஸ்டாம்ப் கலெக்சன் போல... அதை சேகரிப்பதில் எனக்கு அலாதி வேட்கை. அதை சனிக்கிழமைகளில் வரிசையாய் காட்டி காட்டி அதன் பின்னிருந்து டார்ச் அடித்து அதை வெள்ளை சுவற்றில் விழும் படி செய்து சினிமா காட்டுவது ஒரு கெத்தான தித்திப்பு. அதை பார்ப்பதற்கு என் வயது பசங்களை.... பிள்ளைகளை... வயதான தாத்தா பாட்டிகளை எல்லாம் அழைத்து வந்து அமர வைத்திருப்பேன். எல்லாம் எல்லாம் அத்தனை அழகாய் ஆழ்மனதில் கட கட கடவென ஓடிக் கொண்டே இருக்கிறது. அது நமக்கே நமக்கான ப்ரொஜெக்டர் சத்தம். மனதுக்குள் கேட்கும் அந்த சத்தத்துக்கு ஈடு இணை ஒன்றுமில்லை.

பிறகு ஊரில் இருக்கும் போது தூங்கி எழுந்தால் எதிரே இருக்கும் பாலமுருகன் தியேட்டர் தான் கண்ணில்ஆடும் சாமி. அதைக் காண்பதே அப்படி ஒரு சந்தோசம். எழுந்தமர்ந்தவாறே எழுச்சி பெரும் கண் பார்வையை அதன் கோபுர உச்சியில் பறவையாக்கி இருப்பேன். ஆனால் பறக்காமல் அமர்ந்திருக்கும் பறவை போதை அது. முகப்பில் இருக்கும் அந்த கலை சார்புடைய பட்டையான தட்டை வடிவ தடுப்பு சுவர்.... சிற்பத்திற்கு முந்தைய வருடலை மனதுக்குள் நிகழ்த்தும். இன்னதென தெரியாத இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் எந்த எழுத்து வடிவத்திலும் அல்லாமல் அது ஒரு தான்தோன்றி சிரிப்பென உள்ளே நிகழ்வதை யாரிடமும் பகிர என்னிடம் அப்போது மொழி இல்லை. வெள்ளந்தி வெறித்தல் தான் அது. வியாக்யானமற்ற விட்டேத்தி நெற்றியில்... என் சிறகு கோடுகள் பூத்திருக்கிறது. இப்போது புரிகிறது.

ஊரில் இருக்கும் நான்கு தியேட்டர்களிலும்... புதிதாக அன்றைய காலகட்ட லேட்டஸ்ட் வடிவத்தோடு இருக்கும் திரையரங்கம் இது. மஞ்சு வீட்டு வாசலில் நின்று தியேட்டரையே வெறித்து பார்ப்பேன். தியேட்டர் ஆப்ரேட்டர் நமக்கு அண்ணன் முறை என்பதால் எப்போது வேண்டுமானாலும்..எனக்கு அனுமதி உண்டு. பிலிம் சுருளை ஒரு தகர தட்டில் இருந்து இன்னொரு தட்டுக்கு கையால் தான் சுழற்ற வேண்டும். நான் சுழற்றி கொடுப்பேன். ப்ரொஜெக்டரில் இருந்து ஒளி செல்லும் சதுர வழியில் படம் பார்ப்பது கெத்தான விஷயம். என்னவோ நாமே தான் நடித்தது போல அப்படி ஒரு பாவனை. ரயிலில் இருப்பதை விட எஞ்சின் அருகே இருப்பது எத்தனை குதூகலம். அப்படி ஒரு தோரணை அது. ரிக்சா மாமா... மருது பாண்டி.... புது மனிதன்... பாண்டி நாட்டு தங்கம்... சின்ன பசங்க நாங்க... என் ஆசை மச்சான்.... சின்னத்தம்பி... நான் பேச நினைப்பதெல்லாம் என்று பார்க்காத படங்கள் இல்லை. ஊரில் இருக்கும் நான்கு தியேட்டர்களிலும் மாறி மாறி பார்த்த படங்கள் கண்களில் அடங்காதவை.

செல்லகுமாரா தியேட்டரில்...கேப்டன் பிரபாகரன்... நாடோடி தென்றல்... இணைந்த கைகள்... என்று இன்னும் ஏராள படங்கள். துர்கா படமெல்லாம் இங்கு தான். மின்சார கனவு கூட இங்கு தான். ஒரு மாலை காட்சியில்... மனம் நிறைந்து மாலினியோடு பார்த்தது இங்கு தான். இந்த தியேட்டரே ஒரு மாளிகை மாதிரி தான் இருக்கும். அடர் படிந்த நீல வண்ணத்தில்.. அழுக்கேறி ஆனாலும்... அதில் இருக்கும் ஓர் ஈர்ப்பு அலாதி. செல்லகுமாரா -க்கு சென்றால்.. 2.50 பைசா டிக்கெட் தான். பால்கனியில் தான் பார்ப்பேன். இருள் சூழ்ந்த அந்த சூழல் தியேட்டர்களுக்கே உண்டான கலை வடிவம். எந்த மனிதனும் எந்த பாகுபாடும் இல்லாமல்... நீங்க என்ன வகுப்பு என்று எவனும் கேட்காத ஒரு புனிதம் தியேட்டரில் உண்டு.

நான்கு தியேட்டர்களிலும் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர் தான் படு பயங்கரமாக இருக்கும். ஒரு குகைக்குள் சென்று வருவது போலவே வேண்டி விரும்பும் அச்சம் அது. அதுவும் சுவாமி தியேட்டரில் அந்த குறுகிய சந்தின் நீண்ட... வளைந்த டிக்கெட் கவுண்ட்டர்.. வேர்த்து பூக்க வைத்து விடும். அதுவும் சிறுவர்கள்.. உள்ளே நுழைந்து வெளியேறுகையில் திகில் அடித்து... திக் திக் என சிரிப்பும் படபடப்புமாக நகரும் கட்டிட ரயில் போல அது. கனவுக்கன்னி.... பாசத்தை திருடாதே... போலீஸ் பாப்பா போன்ற தெலுங்கு டப்பிங் படங்கள் நிறைய இங்கு பார்த்திருக்கிறேன். நாளைய செய்தி... அண்ணாமலை போன்ற தீபாவளி படங்கள் இங்கு பார்த்தவை தான்.

சில சூப்பர் டூப்பர் படங்கள் ஒரே நேரத்தில் இரண்டு தியேட்டர்களில் ஓடும். ஒரு ரீல் முடிந்ததும் அடுத்த ரீலை தூக்கி கொண்டு சைக்கிளில் வைத்து அழுத்திக் கொண்டு அடுத்த தியேட்டரில் சேர்ப்பார்கள். இப்படி நான்கு ரீலும் இரண்டு பக்கமும் அடி தூள் கிளப்பும். மருது பாண்டி... அமைதிப்படை எல்லாம் இப்படி ஓடின படங்கள் தான்.

அடுத்து சீதாலட்சுமி. எங்கள் பள்ளிக்கு பின்புறம் இருக்கும் தியேட்டர். அங்கு பெரும்பாலும்... பலான படங்கள் தான். அஞ்சரைக்குள்ள வண்டி.. சகிலாவின் ஆரம்ப கால படங்கள் எல்லாம் அங்கு பார்த்தவை தான். அலெஸ்ஸ்சாண்டிரியா என்றொரு ஆங்கில படம்.. மாத கணக்கில் ஓடியது நினைவில் உண்டு. அவ்வப்போது நல்ல படங்களும் சட்டென போட்டு விடுவார்கள். அமைதிப்படை... கோகுலம்...மேட்டுக்குடி... முற்றுகை....போன்ற படங்கள் எல்லாம் அங்கு பார்த்தவை தான். கொஞ்சம் பழைய தியேட்டர். ஆனால் பள்ளி பசங்களுக்கு படக்கென்று உள்ளே நுழைந்து கொள்ள ஏதுவானது.

நான்கு தியேட்டர்களின் வடிவம் ஒன்றுக்கு ஒன்று வேறானவை. ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு வாசம் இருக்கும். ஒவ்வொரு வண்ணம் இருக்கும். வகைமை கூட வேறு தான். ஆனால் சினிமா எனும் பதம் ஒரே ரிதத்தில் அதிரும். நான்கு தியேட்டர்களையும் 20 வருடங்களுக்கு பிறகு - பார்க்க வேண்டும் என்றே - சென்று பார்த்தேன். இன்று பாலமுருகனைத் தவிர மற்ற மூன்று தியேட்டர்களும் இல்லை. செல்லகுமாரா இருந்த இடத்தில் மால் வந்து விட்டது. சீதாலட்சுமி சிதிலம் அடைந்து கிடக்கிறது. சுவாமி இடிக்கப்பட்டு தரைமட்டமாகி விட்டது. தியேட்டரே கோயிலாக இருந்தவனுக்கு துக்கம் வரும் தானே. சொல்லொணாத் துயரங்களை அந்த இடங்கள் கொண்டிருப்பதாக நம்புகிறேன். தியேட்டர் என்பது ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவத்தை மனிதனுக்கு கற்று தருகிறது. அதுவும் நம்மை போன்ற சினிமாவை நேசிக்கும் மனதுக்கு அவைகள்... நிறைந்து வழியும் ஐஸ் கோன்கள்.

ஊருக்கு... ஒரு பக்கம் கோயில் அழகென்றால்... மறுபக்கம் தியேட்டர் அழகு. எத்தனையோ ஊருக்கு புதியவர்களுக்கு லேண்ட் மார்க்காக இருக்கும் தியேட்டர்கள் ஊரின் வசீகரம். அதுவும் சின்ன டவுன்களில் இருக்கும் தியேட்டர்கள்... மனதுக்கு நெருக்கமானவை. மனம் முழுக்க திரை விரியும் தத்ரூபம் அவைகளுக்கு இயல்பு.

பிறகு கோபியில் மாருதி அதன் பக்கத்திலேயே இருக்கும் இன்னொரு தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ரசிகன்.... விஷ்ணு எல்லாம் இங்கு பார்த்தவை தான். ஈரோட்டில்... அபிநயாவில் பார்த்திருக்கிறேன். வி ஐ பி.. உல்லாசம் எல்லாம் அங்கு பார்த்தது தான்.

பொள்ளாச்சியில்... ATSC... தங்கம்.... சாந்தி- யில் பார்த்திருக்கிறேன். காதலுக்கு மரியாதை... ராஜாதி ராஜா(புதுசு) எல்லாம் அங்கு பார்த்தது தான்.

திருப்பூரில் நிறைய படங்கள். சங்கீதா... யூனிவெர்சல்... உஷா... தமிழ்நாடு... ஜோதி... ராம்லக்ஷ்மன்... டைமண்ட் ... ஸ்ரீனிவாசா... என்று பார்த்த தியேட்டர்கள் அதிகம். கர்ணா... பூவே உனக்காக... உள்ளத்தை அள்ளித்தா... தொட்டில் குழந்தை போன்ற படங்கள் இங்கு தான் பார்த்தேன். கரூரில் ஒரு தியேட்டரில் திருப்பாச்சி பார்த்தது... பெங்களூரில் ஒரு தியேட்டரில்.. ரெயின்போ காலனி பார்த்தது... எல்லாம்... எல்லாம் சினிமா காட்டிய தியேட்டர் அனுபவங்கள். பெருந்துறையில் ஒரு தியேட்டரில் எங்க சின்ன ராசா பார்த்திருக்கிறேன். கள்ளியம்புதூர் சாந்தியில் தில் பார்த்த நினைவு.

கோவையில்... கங்கா யமுனா காவேரியில் தான் பிரியமுடன் என்ற படத்தை முதன் முதலாக பார்த்தேன். இன்று வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சினிமா புதையல் என்றால் அதை பொத்தி அழகாக பாதுகாப்பாக வைத்திருக்கும் தியேட்டர்கள் பொக்கிஷங்கள். இன்று மால்களில் சினிமா தியேட்டர்கள் சினிமாஸ் ஆகி விட்டன. ஆனாலும்... அதன் உள்ளார்ந்த வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. அது இருள் சூழ்ந்த இனிமையில்... ஒன் டு ஒன் திரைக்கும் மனதுக்குமான அற்புதமான வண்ண வண்ண சமாச்சாரம்.

- கவிஜி

Pin It