பெயர் என்பது அழைப்பதற்கு மட்டுமா என்ன. அடையாளத்துக்கும் தான்.
பெயர்களின் வழியே தான் நம்மை நாமே முதலில் காண்கிறோம். நம் பெயர் தான் நமது முதல் உடைமையாகிறது. அதன் வழியே தான் அடுத்தடுத்து... இவ்வுலகுக்குள் நுழைகிறோம். ஆக... ஒவ்வொருவருக்குமே அவரவர் பெயர் என்பது மிகவும் அந்நியோன்யமானது. அந்தரங்கமானது. அழகானது.
சிலருக்கு பெயருக்கும் ஆளுக்கும் பொருத்தமே இருக்காது. அது அவர்கள் பெற்றோர்களின் போதாமையே அன்றி வேறொன்றும் இல்லை. ஆனால் சிலருக்கு பெயர் கன கச்சிதமாக பொருந்தி போகும். அது அதுவாய் அமைந்த அல்லது பெற்றோர்களின் தீர்க்கதரிசன தொலை நோக்கு பார்வை என்றே சொல்லலாம். பெயர் வைக்க தெரியாத... பெயர் வைப்பதில் இருக்கும் ஆளுமை அறியாத ஒரு காலம் இருந்தது. அதில் இருந்து வெகு தூரத்து சிந்தனையின் வழியே தான் இந்த பெயர் பற்றிய பகிர்தல்கள் அரங்கேறுகின்றன. மற்றபடி பெயருக்கும் வாழ்வுக்கும் தொடர்பில்லை என்று நாமும் அறிவோம்.
சிலருக்கு மிக வித்தியாசமான பெயராக அமைத்திருக்கும். அது அழகாய் பொருந்தியும் இருக்கும். சிலர் புதிதாக வைக்கிறேன் என்று சொதப்பியும் வைத்திருப்பார்கள். ஒரு காரில் பார்த்தேன். "ரேவதிகா" என்று எழுதி இருந்தது. பிரச்னை ஆனாலும் பரவாயில்லை... காருக்கு குறுக்கே வண்டியை போட்டு.. பெயர் வைத்தவனை ஓங்கி அறைய தோன்றியது. இந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். இந்த கூட்டமைவில் முடிய வேண்டும் என்போர் பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பிச்சை என்று பெயர் வைத்துக் கொண்டு... பெரிய இடத்தில் தன்னை நிரூபித்த ஆட்களும் உண்டு. ஆக பெயர்க்கும் வாழ்வுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. அது பற்றியும் இங்கே நாம் விவாதிக்கவில்லை. பெயரின் வழியே அந்த பெயருக்கு சொந்தக்காரர்களின் பார்வை... தன்னை பற்றியோ தன் மூலமான... தன் உலகம் பற்றியோ எந்த மாதிரி வடிவம் இருக்கும் என்பது பற்றி தான்.
இந்த எழுத்தில் தான் பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்று ஏதோ ஒரு ஆலஜி குரு சொன்னார் என்பதற்காக... தனக்கு பிடிக்காமல் கூட அந்த குறிப்பிட்ட பெயரை தன் குழந்தைக்கு வைத்த ஒரு நண்பரை நான் அறிவேன். ஏதோதோ விவாதம் செய்து விட்டு போய் சாவுங்கடா என்று சொல்லவில்லை. ஆனால் சொல்ல நினைத்தேன்.
சிலர் பாதி பெயர் பிடிக்காமல் மீதிக்கு அவர்களே ஏதாவது சேர்த்துக் கொள்வதும் உண்டு. சிலர் பழைய பெயரை மொத்தமாக தலை முழுகி விட்டு புது பெயரை சூட்டிக் கொள்வதும் உண்டு. அந்தளவாவது தனக்கு... தன் சுயத்துக்கு நியாயம் சேர்க்கும் வலிமை உண்டே என்று பாராட்டலாம். சிலருக்கு... அவர்களுக்கிருக்கும் பெரிய பெயரை காலமே சுருக்கி சிறுசாக்கி விடும். என்னை விஜி ஆக்கியது போல.
சில பெயர்கள் எப்போதும் நம்மை துரத்துவதாகவே நான் நம்புகிறேன். அல்லது பிடித்த விஷயங்கள் மீது நம் கவனம் குவிகையில் அதுவாகவே திரும்ப திரும்ப நம்மை சுழலும் சூட்சும விதியாக கூட இருக்கலாம்.
எனக்கு விபரம் தெரிந்து... நான் மிகவும் ரசித்து லயித்த பெயர் என்றால் அது "காயத்ரி" தான். அதன் மீது கொண்ட வசீகரம்... காலத்துக்கும் அழியாது என்று தான் சொல்ல வேண்டும். காயத்ரி என்றாலே ஒரு மன நிறைவு வந்து விடுகிறது. ஒரு அதிகாலை ஊதுபத்தி வாசம் அந்த பெயரில். மார்கழி மாத மைக்செட் பாடல் போல ஒரு தெய்வீக சாந்த நிலை. அந்த பெயரில் காதலிகளும் கிடைத்ததாலோ என்னவோ... அதன் மீதான வசீகரம் இன்னும்... இன்னும் கூடி விட்டது.
கடந்த வாரம் கவுண்டம்பாளையத்துக்கு ரோடு போடுகிறார்கள் என்று குறுக்கு வழியே செல்ல நேரிட்டது. அவ்வழியே கண்ட ஒரு கடையின் பெயர் பலகை சற்று நேரம் அங்கேயே என்னை நிற்க வைத்து விட்டது. கடையின் பெயர் "பூங்கனி". பூங்கனி... பூங்கனி... சொல்லி பார்த்தேன். சொல்லையும் பார்த்தேன். பூங்கனியில் எதுவோ சுழன்றது. உள்ளே தேன் துளி குழப்பி எழுதி இருப்பார்களோ என்று கவிதை கூட கணத்தில் காய்த்து விட்டது. இப்போதெல்லாம் அவ்வழியே அடிக்கடி செல்கிறேன்.
"நற்பவி" எனும் பெயர் என்னை தொந்தரவு செய்யும். அது தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த பெயர் பலகையின் அருகே அவ்வப்போது செல்வது உண்டு. நற்பவிக்கு தெத்துப்பல் சிரிப்பென்று ஏனோ உள்ளே ஒரு ததும்பல்.
"சீதாவனம்" இந்த பெயரை தொண்டாமுத்தூர் பக்கம் லொகேஷன் பார்க்க சென்ற போது... ஒரு தோட்டத்தின் வாசலில் பார்க்க நேர்ந்தது. இப்போதும் அந்த பக்கம் செல்கையில்... சீதாவனம் - க்கு ஒரு உருவம் கொடுத்து வருவதுண்டு. மலை உச்சி அருவியின் அடியே இலை சுற்றிய இசை ஒருத்தியின் கன்னம் அதிரும் சிரிப்பு அது.
தோழர் ஒருவரின் பெயர் "தைலா". அது என்ன தைலா என்று ஆரம்பத்தில் அதன் மீது ஒரு வகை ஆச்சரியம் தான் இருந்தது. பிறகு அந்த பெயரை உச்சரிக்க...உணர... அதில் இருக்கும் வித்தியாசத்தை புரிய முடிந்தது. பிறகு அந்த பெயர் மீது இனம் புரியாத விருப்பம். தைலம்மன் என்ற சாமியின் பெயரில் இருந்து சுருங்கி வசீகரம் சேர்ந்து கொண்ட தைலாவில் ராகம் பல்லவி தாளம். கணுவாய்க்கு அடிக்கடி செல்லும் லாரி ஒன்றின் நெற்றியில் தைலம்மன் என்று எழுதி இருக்கும். நின்று லாரி போகும் வரை பார்த்திருப்பேன்.
"வண்ணமதி" மீது வட்டம் சூழ் வானவில் காண்கிறேன். ராதா மீது எப்போதும் ராகம் உண்டு. விக்னேஷ் மீதும் விக்னேஸ்வரி மீதும் வியத்தல் கொண்டேன். ஆதிரையில் ஆனந்தம். மேகலையில் மேக ஊர்வலம். சிந்தன் - ல் சித்திரத்தோடு சித்தனையும் காண்கிறேன்.
திரும்பும் பக்கமெல்லாம் ஃபிரியா கிடக்கும் ப்ரியாவை நான் வெறுக்கிறேன். எங்கள் வீட்டிலேயே 6 ப்ரியா. தலையில் அடித்துக் கொண்டு தள்ளி நிற்கிறேன்.
எனக்கு எப்போதுமே என் பெயர் மீது பெருமையும் பேரின்பமும் உண்டு. ஆனால் அந்த பெயரை உச்சரிப்பே இல்லாமல் செத்த நாக்கில் சிலர் அழைப்பார்கள். சாவடி அடிக்க தோன்றும். ஆனால் அதே நேரம் 'விஜ்ஜய்....' என்று வாய் நிறைய அழைக்கும் ஆட்களும் உண்டு. அதே போல என் பெயரில் உள்ள நண்பர்களை அழைக்கையில் நான் மனம் நிறைந்து கூப்பிடுவது உண்டு.
விஜ்ஜய்....அல்லது விஜ்ஜி... என்று அந்த பெயருக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்து உருவாக்குவதில் அலாதி பிரியம்.
ஆங்கில பெயர்களில் ரெய்ச்சல்... எமிலி.. ஜாக்... பிரான்சிஸ் மீது எப்போதும் கவனம் குவியும். அதுவும் 'எமிலி' காதோரம் கிசுகிசுக்கும் ஆங்கில முத்தத்தின் குவிதல். "நிரோஷா" பெயரில் எப்போதும் ஒரு வகை கடல் வாசம் உணர முடியும். "கார்த்திக்" பெயரில் கனிவான கழுத்தை கட்டிக் கொண்ட கதகதப்பு. "ரகுவரன்" பெயரில் அப்படி ஒரு அழுத்தம்... ஆக்கம் உணர்ந்திருக்கிறேன்.
"சே" என்ற ஒற்றை சொல்லில் ஒரு ஜென்ம பந்தம். அதையே "சே" வுக்கு வைத்ததில் பெருமையே.
"சிவகுமார்" பெயர் மீது எப்போதும் வண்ணம் சூழ்ந்த நெருக்கம் தான். அது... என் நண்பன் சிவகுமாருக்கு அந்த பெயர் என்பதால் இருக்கலாம். பால்யத்தில் முதல் நண்பன் அவன் என்பதால்... அந்த பெயர் தான் நான் முதலில் மற்றவர்களை உச்சரித்த பெயராக இருக்கும். எல்லாருக்கும் இப்போது அவன் சிவா. எனக்கு எப்போதும் அவன் சிக்குமார்.
நிழலி... வெயிலி... யூதரா... நியந்தா...யுத்தன்... யூதரன்... அரூபனா... இதெல்லாம் என் பாத்திரங்களுக்காக நானே உருவாக்கிய பெயர்கள். புது புது பெயர்களை உருவாக்குவதில் எனக்கு சுய பரிசோதனை விருப்பம். இந்த பெயர்கள் எல்லாம் பிறகு கால போக்கில் ஆங்காங்கே சிலர் வைத்துக் கொண்டதும் உண்டு. அனுமதியோடு. சிலர் திருடி வைத்துக் கொண்டதும் உண்டு. அதுவும் அவர்கள் பாத்திரங்களுக்கு... ஒரு நன்றி கார்டு கூட போடாமல் வைத்துக் கொண்டவர்களும் உண்டு.
யாராவது பெயர் வைக்க சொல்லி என்னிடம் கேட்பார்கள். ஆப்ஷனுக்கு கேட்டால் நான் அதில் ஈடுபடுவதில்லை. கண்டிப்பாக என்று நின்று விட்டால்... இப்படி புது பெயர்களை உருவாக்கி நானே அதற்கு அர்த்தமும் உண்டாக்கி விடுவேன். ஆக பெயர்களின் வழியே தான் ஒவ்வொரு முகமும் நம் நினைவுகளில் பதிகிறது. பெயரின்றி இங்கே பரிணாமம் முழுமை ஆகாது. நம் ஆசைக்கு வைக்கிறோம் என்று காலத்தை விட்டு ஒதுங்கி...அல்லது கடவுள் பேர் என்று போட்டு தாக்கி ஒரு குழந்தையின் எதிர்கால சிறகை பெயரில் குறுக்கி... இறுக்கி விட கூடாது என்பதில் கவனம் இருக்கட்டும்.
நீண்ட காலத்துக்கு பின் பிறந்திருக்கிறான் என்று சாமி பேரை வெச்சு சந்தனம் பூசி விடுதல் கூடவே கூடாது. சில பெண்களுக்கு ஆண்களின் பெயர்கள் வைத்திருப்பார்கள். அதில் ஓர் அழகு இருக்கிறது. ஆனாலும் அதுவும் சரியாக செட் ஆனால் தான் சரி. பாட்டன் பூட்டன் பேர் என்று செண்டிமென்டில் ஆணி அடிப்பதையும் தவிர்த்தல் நலம். காலம் அறிந்து பெயர் சூட்டு. சொற்கள் புரிந்து இசை மீட்டும்.
பெரும்பாலும் புனைப்பெயரில் ஆர்வம் உள்ளவர்கள் கவிஞர்கள். இயற்பெயரை விட்டு விட்டு புனை பெயரில்.. ஒரு சிறகு பூட்டிக் கொள்வதில் என்னவோ முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்று விட்டது போன்ற ஒரு வகை பிரமிப்பு. பிரமிப்பு இல்லாத வாழ்வில் பூக்கள் எப்படி பூக்கும். ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு வசம். அதை தன் வாசமாக்கிக் கொள்வது பெயர் கொண்டோரின் வலிமை.
மொத்தத்தில் என் பெயர் நீங்க அழைக்க மட்டும் அல்ல. நான் சரித்திரத்தில் பதிக்கவும் தான். யாரோ அழைக்கிறார்கள். உற்சாகம் கொண்ட யாரும் அழைக்கலாம் தானே.
- கவிஜி