இலையில் வைத்த கறிவிருந்தும், இலையின் அடியில் வைத்த கரன்சி நோட்டுகளும், ஆளும் கட்சியின் அதிகார சதிராட்டங்களும் சேர்ந்து திருமங்கலம் இடைத் தேர்தலில் வாங்கிக்கொடுத்த வெற்றியை தனது சாதனைகளுக்காக கிடைத்த வெற்றியாக நினைத்துக் கொண்ட திமுக, நாடாளுமன்றத் தேர்தலை இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சந்திக்க தயராகிவிட்டது.

திமுகவில் ஸ்டாலினுக்கு மவுசு அதிகமா மு.க.அழகிரிக்கு மவுசு அதிகமா என்ற கருத்துக் கணிப்பில் அவரது பத்திரிகையான மதுரை தினகரன் அலுவலகத்தை தீவைத்து கொளுத்தப்பட்டபோது மூன்று உயிர்கள் துடிதுடிக்க கருகிச் செத்ததையும், வரலாற்றுப் பதிவான ஒரு லட்சக் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலை நாள்தோறும் தனது தொலைக்காட்சியான சன் டிவியில் காட்டிக்கொண்டிருந்த மாறன்கள், குடும்பச் சண்டை முடிந்தவுடன் ஏறக்கட்டிவிட்டு ஒரு ரூபாய் அரிசியின் மகிமையை ஊர்முழுக்கச் சொல்லித் திரிகிறார்கள். கருகிப்போன மூன்று தொழிலாளிகளின் பிணங்கள் நம் கண் முன்னே வந்துவந்து சென்றுவிட்டாலும் முதலாளித்துவத்தின் கோர வடிவமான தயாநிதிமாறனும், கலாநிதிமாறனும் என்பது நம் கண்ணை விட்டு அகல மறுக்கிறார்கள்.

தேர்தல் காய்ச்சல் யாருக்கு வந்ததோ இல்லையோ, தமிழக முதல்வர் கலைஞருக்கு இடைவிடாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் தன்னுடைய இலக்கியத் திறன், கவிதைத்திறன் முழுவதையும் கம்யூனிஸ்டுகளை வசைமாறிப் பொழிவதற்கும் அவர்கள் மீது பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார். பெரியாரையும் அண்ணாவையும் பார்த்திராவிட்டால் நான் கம்யூனிஸ்டாகி இருப்பேன் என்று சொன்னதும் அவர்தான், பிறகு கம்யூனிசம் பிடிக்கும் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது என்று சொல்வதும் அவர்தான். முதலில் இவரையெல்லாம் கம்யூனிஸ்ட் என்று சொன்னது யார் என்றுதான் நமக்கு புரியவில்லை!

விலைவாசி உயர்வு மக்களின் கழுத்தை நெரித்து மக்கள் விழிபிதுங்கி நின்றபோது ஊக வணிகத்தையும், முன்பேர வர்த்தகத்தையும் தடைசெய்ய வேண்டும் என்று இடதுசாரி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும் போது, நாடாளுமன்ற விட்டத்தையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கம்யூனிசம் பிடித்த கலைஞரின் எம்பிக்கள் என்ன செய்தார்கள்?

சர்வதேசச் சந்தையில் கச்சாப்பொருட்களின் விலை பாதாளத்தில் சரிந்தபோது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவேண்டும் என இடதுசாரி எம்பிக்கள் கோரிக்கை வைத்த போது தனியார் விமானக் கம்பெனிகளுக்கு பல முறை பெட்ரோல் விலையைக் குறைத்து, சாதரண மக்களின் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்காக குரல் கொடுத்ததில்லையே கம்யூனிசம் பிடித்த கலைஞரின் எம்பிகளுக்கு!

ஏரிகளையும், குளங்களையும் அவருடைய கட்சிக்காரர்கள் ஆக்கிரமித்து வளைத்துதான் அப்பாவி மக்களுக்கு விற்றனர் என்பது தெரிந்தும் நிலங்களை ஆக்கிரமித்து விற்றவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கட்டிய வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி அப்பாவி குழந்தைகளை, பெண்களை, மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்து வேடிக்கை பார்த்த கலைஞருக்கு கம்யூனிசம் பிடிக்கும் என்று சொல்ல எப்படி துணிச்சல் வந்தது?

இலவசம் இலவசம் என்றே கட்சியையும் காலத்தையும் ஓட்டிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைப் பார்த்து, ஒரு ரூபாய் அரிசியும் உங்கள் இலவசமும் யாருக்கு வேண்டும்? காசு கொடுத்து வாங்கிக்கொள்ள கவுரவமான வேலைதான் வேண்டும் என்ற இளைஞர்களின் குரலை காதில் வாங்கிக் கொள்ள தயாராக இல்லை காங்கிரசும், கம்யூனிசம் பிடித்த கலைஞரும். இவர் கொடுத்த இலவசங்களும் வெள்ள நிவாரணமும் எத்தனை பேரிடம் சென்றடைந்தது என்பதை மழையால் பாதித்த சென்னை வாழ் மக்களைக் கேட்டால் தெரியும்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடைசெய்ய மறுத்து இந்தியாவின் சில்லரை வியாபாரிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதில் காங்கிரசும் கலைஞரும் பங்காளிகள்தானே!

ஹுண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் காலில் மிதிபட்டு நசுங்கி செத்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் திமிறி எழ முயற்சித்தால், தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் மக்களிடம் மிகவும் நல்ல பெயர் (?) வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்ற காவல் துறையை வைத்து அடக்குமுறையை ஏவி, காட்டுதர்பார் நடத்துவதுதான் கம்யூனிசம் பிடித்தவரின் செயலா? என தொழிலாள வர்க்கம் கேட்பது காதில் விழவில்லை போலும்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா, ஹுண்டாய் பிரச்சனையில் தொழிலாளர்களுக்கு எதிராகவும் பன்னாட்டு முதலைகளுக்கு ஆதரவாகவும் பேசிக்கொண்டு திரிகின்றார். சுதேசியம் பேசிக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவின் லட்சணம் இதுதான். காங்கிரசின் தலைமை இலங்கை பிரச்சனைக்கு ஐ.நா சபையை அனுகாமல் அமெரிக்காவை கட்டப்பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்துக்கு அழைக்கின்ற வெட்கங்கெட்ட, மானங்கெட்ட செயலை வேறு எந்த நாடும் செய்யாது. மறு காலனியாதிக்கத்திற்கு துணைபோகும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவேண்டிய சரியான தருணம் இதுதான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

விவசாயிகளின் தற்கொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியைக் கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய திமுக அரசை கண்டிக்கக் கூட தைரியமற்ற காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறவேண்டுமா?

இந்தியத் திருநாட்டை அமெரிக்காவின் அடிமை நிறுவனமாக மாற்றுவதற்கு போடப்பட்ட அணுசக்தி உடன்பாட்டை இடதுசாரிகள் தேசபக்தியோடு எதிர்த்தபோது, அந்த உடன்பாட்டை தங்களது கரங்களைத் தூக்கி ஆதரவளித்த செயலை கம்யூனிசம் பிடித்தவனல்ல, கம்யூனிசத்தைப் பற்றி கேள்விபட்டவன் கூட செய்திருக்கமாட்டான். ஆனால், கம்யூனிசம் பிடித்த கலைஞரின் கரங்கள் உயர்ந்து நின்று ஆதரவளித்தன.

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான தடுப்பூசி உற்பத்தி மையங்களுக்கு மூடுவிழா என முடிவுரை எழுதப்பட்ட போது இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி வாலிபர் அமைப்புகளின், மாணவர் அமைப்புகளின் எழுச்சிகரமான போராட்டங்களினாலும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினரான டி.கே.ரங்கராஜன்,எம்.பி. அவர்களின் ஆவேசமான எதிர்ப்பினாலும் குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் மீண்டும் உற்பத்தியைத் துவக்க உத்தரவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது போன்ற செயல்கள் தான் கம்யூனிசம் பிடித்தவர்களின் செயல்.

காங்கிரசின் கடைசி 5 ஆண்டுகாலத்தில் தொழிலாளி, விவசாயி, நெசவாளர், வியாபாரிகள், மாணவர்கள், வாலிபர்கள், சாதாரண மக்கள், குழந்தைகள் என இந்தியாவில் பாதிக்கப்படாத பிரிவினரே இல்லை என கூறுமளவிற்கான கொடுமைகளை சந்தித்துவிட்டனர். ஆகவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆட்சியை விட்டு தூக்கியெறிய வேண்டிய பொன்னான நேரத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு பிரச்சனையிலும் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே தெரியாமல் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள், ஒபாமாவுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்புங்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். வறுமை, பஞ்சம், லஞ்சம், பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, விலைவாசி உயர்வு என எந்த பிரச்சனையானாலும் கூட்டுபிரார்த்தனைக்கு அறைகூவல் விடுப்பார். இவரால் தமிழகத்திற்கு எந்தப் பயனுமில்லை என்பதை மக்கள் குறைந்த காலத்திற்குள்ளாகவே புரிந்து கொண்டுவிட்டார்கள். தமிழகத்தில் அனாதையாக இருந்த பாஜகவிற்கு ஆதரவாக கரம் கோர்த்துள்ள நடிகர் கார்த்திக் அவர்களுக்கும் நாட்டாமையான சரத்குமாருக்கும் மக்கள் தீர்ப்பை மாத்திச் சொல்வார்கள். அப்போதாவது புத்தி வரட்டும்!

இந்தியாவில் பிரதமர் பதவிக்கு பஞ்சம் வந்துவிட்டதைப் போல அத்வானிதான் அடுத்த பிரதமர் என்று அலறிக்கொண்டிருக்கும் பாஜக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்தை ஒழித்துவிடுவோம் என்று பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், கந்தகர் விமான கடத்தலுக்கு அடிபணிந்து சிறையிலிருந்த தீவிரவாதிகளை அத்வானி அழைத்துச் சென்று விட்டுவிட்டு திரும்பியதும் இப்படி மேலும் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசிய வருண்காந்தியின் பேச்சில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லையென பாஜக கூறித்திரிகின்றது. வருண்காந்தி பேசியது பாரதீய ஜனதா கட்சியின், ஆர்.எஸ்.எஸ்.சின், சங் பரிவாரங்களின் அஜென்டா என்பதை மறந்துவிடக்கூடாது.

பாபர் மசூதியை இடித்த கூட்டத்திற்கு கடப்பாறையாக இருந்த தலைவர் யார் என்பது தெரிந்தும், மசூதி மீது ஏறி நின்று இடித்துக்கொண்டிருப்பதை அனைத்து ஊடகங்களும், மதக்கலவரத்தில் இறந்த ஆயிரக்கணக்கான பிணங்களும் சாட்சிகளாக இருந்தபோது கூட இன்றுவரை கூட நடவடிக்கை எடுக்க வக்கற்ற காங்கிரஸ் அரசு மறைமுகமாக மதவாதத்திற்கு துணைபோகிறது.

மதக்கலவரங்களைத் தூண்டி, சிறுபான்மைத் தீவிரவாதத்தை வளர்ப்பதும் பாஜகவும் அதன் பரிவாரங்களும்தான். இவர்களுக்கு தீவிரவாதத்தை ஒழித்துவிடுவோம் என்று கூற எந்த அருகதையும் இல்லை.

சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை கொண்டு வருவோமென முதன்முதலில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். காங்கிரஸ் ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் இல்லை என்று கைவிரித்த நேரங்களிலெல்லாம் இடதுசாரிகள் கைநீட்டிக்காட்டிக் கொண்டிருந்த இடம் சுவிஸ் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் முறைகேடான கருப்புப் பணத்தைத்தான். அப்போதெல்லாம் இந்த அரசுகள் கிழித்தது என்ன? இப்போது சுவிஸ் வங்கியிலிருக்கும் கறுப்புப் பணத்தை எடுக்க முயற்சிக்கிறார்களாம்? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

தேசத்தின் அவமானச் சின்னமான பாரதிய ஜனதா கட்சியை ஆழக் குழிதோண்டி புதைக்க வேண்டியதும், உலகமய, தாராளமய, தனியார்மய ஆதரவாளர்களாய், அமெரிக்காவின் அடிவருடிகளாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசை தூக்கியெறிய வேண்டியதும், இடதுசாரிகளின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட மூன்றாவது மாற்று அணியை வெற்றிபெற வைக்க வேண்டியதும் இந்திய மக்களின் இன்றியமையாத கடமையாகும்! 

-
இரா.சரவணன்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It