சிங்கள பேரினவாதத்தின் இனஒடுக்குமுறையால் ஈழப்போராட்டம் உக்கிரமான கட்டத்தை எட்டியிருக்கும் இத்தருணத்தில் ஈழப்போராட்டத்தின் பரிணாம சிக்கல்களையும் அதன் கருத்தியல் நியாயங்கள் குறித்தும் பார்க்க வேண்டியதிருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து கொண்டு பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை அவதானிக்கும் எனக்கு இலங்கையில் பேரினவாத அரசின் போர்க்கொடுமையையும் காண வேண்டியிருக்கிறது. அங்கு நடந்துவரும் தினசரி நிகழ்வுகளின் மேல் விவரங்கள் தொலைக்காட்சிகள் மற்றும் இங்கு வாழும் இலங்கை நண்பர்கள் வழியாக என்னால் அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. கடந்த ஒருவருட காலமாக ஈழத்திலிருந்து வெளிவந்த பல முக்கியமான நூல்களை படிக்க நேர்ந்தது. மேற்கத்திய நாடுகளில் வாழும் இலங்கையைச் சார்ந்த பல நண்பர்கள் சொன்ன தகவல்கள் அதன் கருத்தியல் நியாயத்தை மேலும் வலுப்படுத்தியது.
இந்தப் போராட்டத்தின் நீட்சியில் தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசான இந்தியப் பேரரசின் மௌனமும், தமிழ்நாட்டில் நடந்து வரும் தன்னெழுச்சியான போராட்டங்களும் ஒரு கூர்மையான வடிவத்தை எட்டியிருக்கின்றன. தமிழ்நாட்டில் காலம் கடந்த இந்த தன்னெழுச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் உண்ணாவிரத போராட்டம் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தப் போராட்டம் கூட இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தான் நடைபெற்றது. பின்னர் அது வேறொரு பரிணாமம் அடைந்து ஆளும் கட்சியான திமுகவும் இணைந்து கொண்ட காரணத்தால் இன்றைய தமிழகம் ஈழத்திற்கு ஆதரவாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து நின்றுள்ளது. தமிழ் சமூகம் அதன் மரபான இயல்புணர்வை மீறி அசாதாரணமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த மாறுதல் செயலூக்கம் பெறும் நிலையில் வரலாற்றில் குறிக்கத்தகுந்தது.
மார்க்சியம் ஒரு விடுதலைக்கான கோட்பாடு என்ற நிலையில் தேசியம் குறித்த அதன் வரலாற்றுப் பார்வையை பின்னோக்க வேண்டியதிருக்கிறது. தேசிய விவகாரத்தில் மார்க்சியவாதிகளின் நிலைபாடு மற்றும் அவர்களின் கருத்தாக்கம் குறித்து மார்க்சிய சிந்தனையாளரான ரொனால்ட் மங்கின் பார்வை முக்கியமானது. அவரின் தேசியவாதம் குறித்த நூல் பிரபலமானது. அந்நூலில் மங்க் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "மார்க்சியவாதிகள் தேசியவாதத்தின் வலிமையையும் பற்றுறுதியையும் பாரம்பரியமாகக் குறைத்து மதிப்பிட்டு வந்துள்ளார்கள். இப்படி குறைத்து மதிப்பிடும் தன்மை மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் சிந்தனைகளில் இருந்த தவற்றின் விளைவாகும். முதலாளித்துவம் உலக சந்தைக்குள் எல்லா மக்களையும் இழுப்பதன் மூலம் உலகத்தை ஒன்றிணைத்து தேசியவரம்புகளை உடைத்து விடுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி போக்கு சமச்சீர் அற்றது என்பதையும், பிரதேசங்களுக்கும் நாடுகளுக்கும் இடையே அது வேறுபாடுகளை கூர்மைப்படுத்துவதன் மூலம் தேசியவாதத்துக்கு புத்துயிர் அளிக்கும் என்பதை மார்க்சும் ஏங்கல்ஸும் தன் சொந்த சிந்தனை வரைவுக்குள் கூட முன்னுணர தவறிவிட்டார்கள் என்கிறார் மங்க்.
மார்க்சும் ஏங்கல்ஸும் "வரலாற்று வழி வந்த அரசுகள்" "வரலாற்று வழி வராத அரசுகள்" என்பதன் மூலம் தேசிய பிரச்சினையை எந்த அளவிற்கு பின் தள்ளினார்கள் என்பதைப் பற்றி விவாதிக்கிறார் மங்க். முந்தையவை வரலாற்று வளர்ச்சியிலும், பிந்தையவை பின்தங்கி சாத்தியமான அரசுகளை கட்டியெழுப்ப இயலாமல் இருந்தவை. முந்தையவற்றின் நாடுபிடிக்கும் கொள்கைக்கு பிந்தையவற்றை பயன்படுத்தும் நடவடிக்கைக்கு இந்த வேற்றுமையை பயன்படுத்த முடியும். இவ்வகையில் நாகரீகத்தின் அக்கறை காரணமாகவே சோம்பேறி மெக்சிகோகாரர்களிடமிருந்து கலிபோர்னியாவை பலமுள்ள யாங்கீகள் கைப்பற்றினர் என்று ஏங்கல்ஸ் வாதிடலாம். இருந்தபோதிலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஐரிஷ் மக்களின் போராட்டமும், ரஷ்யாவில் அடிமைப்பட்ட மக்களின் போராட்டமும், போலந்து போராட்டமும் மார்க்சிய மூலவர்களான இருவரையும் தேசியவாதம் பற்றிய தங்கள் கருத்தை மாற்றி கொள்ள வைத்தன. மேலும் தேசியவாதம் பற்றிய சரியான நிலைபாட்டை உருவாக்கியவர் என்று மரபார்ந்த மார்க்சியர்கள் லெனினை முன்வைக்கின்றனர்.
மார்க்சிய சிந்தனையில் முதன் முறையாக லெனினே "தேசிய இன பிரச்சினையில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார்" என்பதை மங்க் ஏற்றுக்கொள்கிறார். மேலும் தேசிய இனம் தொடர்பாக லெனினின் நிலைபாட்டை மங்க் விரிவாக ஆராய்கிறார். அவரைப் பொறுத்தவரை தேசிய இனபிரச்சினை என்பது அரசியல் செயற்பாடு சார்ந்த நடைமுறை பிரச்சினையே. அடிப்படையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வர்க்க போராட்டத்தின் பங்காளிகள் என்ற வகையில் மட்டுமே முக்கியத்துவம் உடையவை. தேசங்கள் என்ற கருத்துரு மாறும் காலத்தோற்றப்பாடாகும். சோசலிசத்தின் கீழ் அவை மறைந்து விடும் என்று அவர் கருதினார். மேலும் மத்தியப்படுத்தப்பட்ட ஒரு பெரிய நாடே வரலாற்றின் முன்னகர்வுக்கான வாகனம் என்பதும் லெனினின் சிந்தனையில் உள்ளார்ந்த ஓர் அம்சமாக இருந்தது. தேசிய இனப்பிரச்சினையின் இந்த மாறுபாடுகள் புரட்சிக்கு பின் வெளிவர தொடங்கின.
உக்ரேனிய மற்றும் ஜார்ஜியா தேசிய இனங்கள் அக்டோபர் புரட்சி அவர்களுக்கு அளித்திருந்த சுயநிர்ணய உறுதிமொழியை முன்னெடுத்த போது எதார்த்தம் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. இதனால் சோவியத் குடியரசு பிளவுபடுவதை தடுக்க போல்ஸ்விக்குகள் இராணுவ ரீதியாக தலையிட்டனர். லெனினின் கடைசி காலத்தில் இந்த சிக்கல் பற்றி அவருக்கும் ஸ்டாலினுக்கும் ஏற்பட்ட மோதல்கள் அதன் பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் நீண்ட காலத்திற்குப் பிறகே வெளிவந்தன. 1923ல் ரஷ்யாவில் நடைபெற்ற பனிரெண்டாவது கட்சி மாநாட்டில் ரஷ்ய வகுப்புவாதத்தை எதிர்க்கும் பொறுப்பை லெனின் டிராஸ்கியிடம் விட்டுவிட்டார். ஆனால் இந்த பணியை செய்ய டிராஸ்கி தவறிவிட்டார். காரணம் அவருக்கே இந்த கோட்பாட்டில் பெரிய ஆர்வம் ஏதும் இருக்கவில்லை என்பதே.
தேசிய இனப் பிரச்சினையில் ஸ்டாலினின் நிலைபாடு லெனினிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சியானது சிறிய மற்றும் பெரிய என எல்லா வகைப்பட்ட தேசிய வாதங்களையும் எதிர்க்க வேண்டும் என்றார். அவரின் இந்த நிலைபாடு ஜார்ஜியா மற்றும் உக்ரேன் விஷயத்தில் நடந்தேறியது. அடிப்படையில் தான் ஒரு ஜார்ஜியராக இருந்த போதும் அங்கு வளர்ந்து வரும் தேசியவாதத்தை பூர்ஷ்வா தேசிய வாதம் என்றார். 1922ல் ஜார்ஜியாவில் ரஷ்ய ராணுவத்தின் வெற்றிக்குப் பிறகு அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
ரஷ்ய உள்நாட்டு போர் (1918-1922) கால கட்டத்தில் இருவித தேசிய இன பிரச்சினைகள் முன்னுக்கு வந்தன. ஒன்று உக்ரைன் மற்றொன்று துர்கிஸ்தான். துர்கிஸ்தானின் நகரங்கள் ரஷ்ய மொழி பேசும் நகரங்களைக் கொண்டிருந்தன. அவர்கள் ரஷ்ய மேலாதிக்கத்தை புரட்சி என்ற பெயரில் தங்கள் மீது திணிப்பதாகக் கருதினார்கள். இது குறித்த மேல் உணர்வுகள் அப்போது எழுந்தன. இது குறித்து போல்ஸ்விக் கட்சியின் பத்தாவது காங்கிரஸில் துர்கிஸ்தானை சார்ந்த பிரதிநிதி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"எல்லைப்பகுதிகளின் காலனியாதிக்கம் என்பது சில மாதங்களாக நடந்து வரும் நிகழ்வல்ல. மாறாக பல ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வாகும். ரஷ்ய மேலாதிக்கம் இந்தப் பகுதிகளில் காலனியாக செயல்படுகிறது. இந்தப் பகுதிகளில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பலன்களை பிரதிபலிப்பதென்பது ரஷ்ய காலனியாதிக்கத்தையும் அதன் கருத்தியலையும் பிரதிபலிப்பதாகும். நாம் இந்த கருத்தியலை புறந்தள்ளாமல் எதையும் சாதிக்க முடியாது. ஆகவே நாம் காலனியத்திற்கு எதிரான போராட்டத்தை தொடங்கியாக வேண்டும்." இதே நிலைமை உக்ரைனிலும் நீடித்தது. உக்ரைனியர்கள் தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்பதை வலியுறுத்தினர். உக்ரேனியர்கள் தங்கள் நிலம், மொழி சார்ந்த உணர்வாக அதை வலியுறுத்தினர். ஆனால் இந்த உணர்வு ரஷ்ய போல்ஸ்விக்குகளால் அடக்கப்பட்டது.1925 மற்றும் 1935 காலப்பகுதியில் உக்ரேனிய மொழி அதன் சிறுபான்மை தன்மையை வெளிப்படுத்த தொடங்கி பிராந்திய தன்மையை முன்னெடுக்க தொடங்கியது. ஸ்டாலின் இதை கடுமையாக ஒடுக்கினார். அதன் விளைவாக உக்ரேனிய மார்க்சிய அறிவுஜீவியான மிகேல் குவ்லோவ் தற்கொலை செய்து கொண்டார். மேலும் பலர் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் புரட்சியின் போது ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய படைகளின் முக்கிய எதிர்நோக்கு கேந்திரமாக உக்ரைன் இருந்தது. உக்ரைன் பகுதி முழுவதும் தொழில் நிறுவனங்கள், முக்கிய உணவு மற்றும் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் நிரம்பியிருந்தன. போல்ஸ்விக்குகளின் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவானது உள்நாட்டுப்போரின் நிர்பந்தம் காரணமாக உக்ரைன் தேசிய உணர்வை பின்னுக்குத் தள்ளியது. இந்த மனோபாவம் உக்ரைனில் அவர்களின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தது.
1919 ல் உக்ரைனில் ஜெனரல் டெனிகின் தலைமையிலான சோவியத் செம்படையின் வெற்றிக்குப் பிறகு லெனின் உக்ரேனிய தொழிலாளர் மற்றும் குடியானவர்களுக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதினார். "ரஷ்ய கம்யூனிஸ்ட்கள் அவர்களுக்குள் எழும் மிகுதியான ரஷ்ய தேசிய உணர்வை அடக்க வேண்டும். அவை சரிதானா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் அவை கம்யூனிசத்திற்கு எதிரானவை. அவர்கள் நமக்கு மிகுந்த இடையூறு விளைவிக்கிறார்கள். குறிப்பாக உக்ரேனிய தோழர்களை நம்மிடம் இருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். டெனிகின் மற்றும் அவரை சார்ந்தவர்களின் கொள்கை இதுவாகத் தான் இருக்கிறது." இதன் பின்னர் ஸ்டாலினுக்கும் லெனினுக்கும் இது தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
ஸ்டாலினின் தேசியவாத நிலைபாட்டுக்கு எதிராக லெனின் சோவியத் பத்திரிகை ஒன்றில் தான் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். "தேசிய பிரச்சினையில் என் கருத்தென்பது நான் ஏற்கனவே சொன்னது போன்று அதை பொதுவான அருவ முறையாகப் பார்ப்பதில் பயன் ஏதுமில்லை. மேலும் ஒடுக்கும் தேசியத்திற்கும் ஒடுக்கப்படும் தேசியத்திற்குமான வித்தியாசம் உணரப்பட வேண்டும். இது மாதிரியே சிறிய தேசியத்திற்கும் பெருந்தேசியத்துக்குமான வித்தியாசம். இரண்டாம் வகைப்பாட்டை பொறுத்தவரை நாம் பெருந்தேசியத்திற்குள் இருக்கிறோம். இதில் கணக்கற்ற வன்முறைகளும், வரலாற்றுத் தவறுகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலும் நாமே பலமுறை அதனை செயல்படுத்தியிருக்கிறோம். ஆகவே சர்வதேச ஒடுக்குமுறை தேசம் அல்லது பெருந்தேசம் என அவை அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கிடையே சமத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும். அவை அதன் நடைமுறை செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை புரிந்து கொள்ளாத எவருமே பாட்டாளி வர்க்க எதார்த்த மனோபாவத்தை உணர முடியாது. மேலும் அவர்களின் நிலைபாட்டின் அடிப்படையில் அது குட்டி பூர்ஷ்வா மனோபாவமே"
ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில் உக்ரேன் பிரதான பாதிப்பு மையமாக இருந்தது. இதை குறித்து காலம் கடந்து 1939ல் டிராஸ்கி எழுதினார். "உக்ரைன் மக்கள் அவர்களின் சுய நிர்ணய உரிமையை மீட்டெடுப்பது அவசியமானதும் அடிப்படையானதும் கூட. அந்த தேசத்தின் எதிர்காலத்திற்காக அதன் சுதந்திரம் பிரகடனப்படுத்த வேண்டும்” என்றார். ஸ்டாலின் சுய நிர்ணய உரிமையை வரையறுக்க நான்கு வித அம்சங்களை முன்வைத்தார். 1. குறிப்பிட்ட மொழி 2. குறிப்பிட்ட கலாசாரம் கொண்ட மக்கள் தொகுதி 3. பிரதேச ரீதியான பொதுத்தன்மை 4. பொருளாதார தனித்துவம். ஆனால் இந்த வகைப்பாட்டில் அவரால் வர முடியவில்லை. அவரின் கடைசிகால செயல்பாடுகள் அதை நிரூபித்தன. 1917க்குப் பிறகு மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட எல்லா சோசலிசப் புரட்சிகளும் அடிப்படையில் தேசிய விடுதலை போராட்டமாகவே இருந்தன. இதுவரையிலான உலக நாடுகளின் போராட்ட வரலாற்றைப் பார்க்கும் போது அதில் பெரும்பாலானோர் தங்கள் தேசங்களுக்காகவே உயிரிழந்துள்ளனர்.
இலங்கை இனப்பிரச்சினையின் வரலாறு நீண்ட மரபுகளையும், தொடர்ச்சியான பிரயத்தனங்களையும் உட்கொண்டிருக்கிறது. இலங்கையில் கூட்டாட்சி என்ற யோசனை 1929 காலகட்டங்களிலேயே முன்வைக்கப்பட்டது. அப்போது எந்த தமிழ் அமைப்புகளும் இதனை முன்னெடுக்கவோ, அதற்காக போராடவோ முன்வரவில்லை. தமிழ் மக்களின் நலன்களை அக்காலத்தில் முன்னிலைப்படுத்திய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் சமவாரி பிரதிநிதித்துவத்திற்காக போராடியது. அதாவது மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருந்த சிறுபான்மை இனத்தவருக்கு நாடாளுமன்ற இருக்கைகளில் சமபங்கை ஒதுக்க வேண்டும் என்று கோரியது. ஆனால் இதனை சிங்களர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இறுதியாக இந்த கோரிக்கை நிறைவேறாமலே இலங்கை 1948ல் சுதந்திர குடியரசானது.
முதல் நாடாளுமன்றத்தின் இருக்கைகளில் 40 சதவீதம் சிறுபான்மை இனத்தவராலும், இவர்களின் ஆதரவு பெற்ற இடதுசாரி உறுப்பினர்களாலும் நிரப்பப்பட்டன. சிறுபான்மையினரில் இலங்கை தமிழர், இந்திய வம்சாவழி தமிழர், முஸ்லிம்கள், தோட்டதொழிலாளர்கள், மலாய் இனத்தவர்கள் ஆகியோர் உள்ளடங்குவர். ஆனால் இது சிலகாலமே நீடித்தது. 1948 குடியுரிமை சட்டமும், 1949 நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை 20 சதவீதத்திற்கும் கீழாக குறைப்பதற்கு வழி வகுத்தன. மேற்கண்ட சட்டங்கள் சிறுபான்மையினரில் 10 சதவீதத்தினரான தமிழ் தோட்ட தொழிலாளர்களை நாடற்றவர்களாக ஆக்கியதுடன், அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அளவுக்கும் சென்றது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் சேனநாயக்காவின் ஐக்கிய தேசிய கட்சி மூலமும், அதற்குப் புறமும் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்திய எல்லா தமிழ் மேட்டுக்குடியினரும் இந்த மசோதாவை ஆதரிக்காத பட்சத்தில் இதனை எதிர்ப்பதில் போதிய ஆர்வம் காட்டவில்லை.
தமிழ் காங்கிரஸ் தலைவரான ஜி.ஜி பொன்னம்பலம் முதல் மசோதாவை எதிர்த்தார். ஆனால் அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு இரண்டாம் மசோதாவை ஆதரித்தார். இந்த செயல்பாடு தமிழர் உரிமை சார்ந்த விவகாரத்தில் சின்ன கீறலாக மாறியது. தன் சொந்த அதிகாரமும், குறுகிய வர்க்க நலன்களும் ஒருங்கிணைந்த ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மதிப்பு பற்றிய கணிப்பின் விளைவாகவே இந்த வரலாற்று தவறு நிகழ்ந்தேறியது. இதன் தொடர்ச்சியில் தமிழ் மேட்டுக்குடியினரின் பலவீனங்களையும், நெளிவு சுழிவுகளையும் சிங்கள அதிகார வர்க்கம் எளிதாகவும், நுட்பமாகவும் புரிந்து கொண்டது. நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி தமிழரின் வாக்குரிமையைப் பறித்த இந்த அநீதியான சட்டத்திற்கான எதிர்வினை முதன் முதலாக எம்.பெரெரா தலைமையிலான லங்காசமசமாஜ கட்சி, ஆர்.டி.சில்வா தலைமையிலான போல்ஸ்விக் லெனினிஸ்ட் கட்சி, பீற்றர் கெனமன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பிடம் இருந்தே வெளிவந்தன. இவர்களில் பெரும்பான்மையினர் சிங்களவர் என்பது கவனிக்கத்தகுந்தது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விவகாரத்திற்காக நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் நடத்தின. தமிழர்களுக்கு எதிரான இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்த போது சமசமாஜ கட்சியின் தலைவரான எம்.பெரெரா பின்வருமாறு குறிப்பிட்டார். "இந்த வகையான இனவாதம் ஹுஸ்ரன் சாம்பலுடனும், ஹிட்லருடனும் இறந்து விட்டதாகவே நான் நினைத்திருந்தேன். தீர்க்கதரிசனம் வாய்ந்த அரசியல்வாதி என்று தங்களைக் கருதுபவர்கள் எவரேனும் இவ்வகையான மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று எங்களைக் கேட்பார்கள் என்று நான் நம்பவில்லை. மீதி உலகத்திலிருந்து ஒதுங்கி நாம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். நாங்கள் மட்டுமே இந்நாட்டின் பிரஜைகளாக இருக்க உரிமையுடையவர்கள் என்று கருதுவோமானால் நாம் முன்னேற முடியாது."
அப்போது தமிழ் காங்கிரஸில் இருந்த செல்வநாயகம் இம்மசோதாவால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி "சமஷ்டி கட்சியை" ஆரம்பித்தார். பின்னர் 25 வருடங்களுக்குப் பிறகு மற்றவர்களுடன் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவானது. வி.நாகநாதன், கு.வன்னியசிங்கம் ஆகியோர் தமிழர் காங்கிரஸில் இருந்து விலகிய மற்ற இரு ஆளுமைகள். இதன்பிறகு 1975ல் செல்வநாயகம் நீர்த்துக் கொண்டிருந்த இனப்பிரச்சினைக்கான முதல் முயற்சியாக பண்டாரநாயகவுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்த ஒப்பந்தம் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தவில்லையென்றாலும் சிங்களவர் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஒன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் நடந்த கொழும்பு- கண்டி யாத்திரையாகும். இந்தப் போராட்டம் ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அன்றைய கட்டத்தில் ஜெயவர்த்தனாவின் அரசியல் செயல்தந்திரமாகவும் அது இருந்தது.
தமிழர்களுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்ட முதல் அநீதியான 1948 ஆம் ஆண்டைய சட்டத்தை செல்வநாயகம் கடுமையாக எதிர்த்தார். தம் உரைகளில் அதன் இனவாத அம்சத்தை வெளிப்படுத்தினார். "அரசாங்கம் தாம் விரும்பாத எந்த ஒரு பகுதியினரும் தம் கருத்துக்களைக் கூற விடாமல் தடுப்பதற்கான முன்னுதாரணமாக இது அமைகிறது. ஆகவே இந்த சட்டத்தினால் ஒருவரும் அமைதியாக வாழ முடியாது. என்றோ ஒருநாள் இது எல்லோரையும் பாதிக்கும்." அவரின் கணிப்பு மாதிரியே பிந்தைய நிகழ்வுகள் இருந்தன. 1983ல் முதல் இனஒடுக்குமுறைக்கான கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழரின் உயிரோட்டமான கலாசார அடையாளமாக இருந்த யாழ்ப்பாணம் நூலகம் பேரினவாதிகளால் எரிக்கப்பட்டது. அதன் வடிவமைப்பே நிர்மூலமாக்கப்பட்டது. இது கி.பி பதினான்காம் நூற்றாண்டில் ஈராக்கில் மங்கோலியர்களால் எரிக்கப்பட்ட பிரமாண்ட நூலகத்தை நினைவூட்டியது.
பல இடங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு கொழும்பில் சிங்களவர்கள் தமிழர் முகவரிகளைத் தேடி, அடையாளம் காண்பதன் வழி அவர்களை கொன்று தீர்த்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டனர். குறிப்பாக லட்சகணக்கானவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தனர். இந்த இனஒடுக்குமுறையின் தோற்றப்பாட்டை குறித்து விவாதிக்கும்போது தமிழர் தலைமையின் ஆரம்பகால சறுக்கலையும் அதன் தோல்விகளையும் பற்றி நாம் குறிப்பிட்டாக வேண்டும். ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவத்தை முதலில் கோரிய பின்பு அதைப் பெற முடியாமல், அதிகாரத்தை மத்தியில் குவிக்கும் ஓர் அரசியல் அமைப்பில் சுதந்திரத்தை அதன் இனவாத அரசியலுடன் ஏற்றுக்கொண்டதன் மூலம் தமிழ் தலைமை முதல் தவறிழைத்தது. இந்தத் தவறை தொடர்ந்து தமிழர் நலன்களைத் தெளிவாகவும், வலுவாகவும் முன்வைக்கக்கூடிய ஒரு தேசிய அமைப்பை கட்டியெழுப்ப இயலாமல் போனது அடுத்த தவறாக அமைந்தது.
பெரும்பாலான தமிழர் தலைவர்கள் மந்திரி பதவிகளுக்காகவும், தமிழர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற வெற்று உறுதிமொழிக்காகவும் மலையகத் தமிழர்களை கைவிட்டது பெரும் வரலாற்று தவறாகும். இது தமிழர்கள் குறைந்த கால பொருளியல் நலன்களுக்காக எளிதில் விலைக்கு வாங்கப்பட கூடியவர்கள் என்ற படிமத்தை சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியது. மேலும் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான திரள் பங்களிப்பு இல்லாததும் இனவெறுப்புக்கான காரணமாக அமைந்தது. இந்தப் போக்கு மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று பேரின ஒடுக்குமுறையில் கொண்டு போய் விட்டது. இலங்கை வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் இன, வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்த இடதுசாரி கட்சிகள் 1960க்குப் பிறகு இனவாதம் பக்கம் சாய்ந்து கொண்டார்கள். இதுவும் இந்த விவகாரத்தை தமிழர்கள் முன்னெடுக்க முடியாமல் போனதற்கான காரணம்.
இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாண தோட்ட தொழிலாளர் மற்றும் பல்வேறு பிரிவினருக்காக உக்கிரமான போராட்டங்களை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடத்திய பெருமை இலங்கை இடதுசாரிகளுக்கு உண்டு. ஆனால் தத்துவம் மற்றும் நடைமுறைக்குமான இடைவெளியை நிரப்பமுடியாததன் பின்விளைவே அவர்களைப் பிளவுபட வைத்தது. இலங்கையின் ஆக்கப்பூர்வ சக்தியாக உருவெடுக்கவேண்டியவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செயலற்ற கருவியாக முடங்கிப் போனார்கள். விளைவு இனவாதத்தை பிரதிபலிக்கும் ஜே.வி.பியின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இது தமிழர்களை குறிப்பிட்ட துயரத்திற்குள் அடைக்க செய்தது. இதற்கிடையில் சிங்களவர்கள் தாம் பெரும்பான்மையினராக இருந்தும் இலங்கை தங்கள் கைகளிலிருந்து பறிபோவதான உள்ளுணர்வை கொண்டனர். எழுபதுகளுக்குப் பிந்தைய கட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான பிரசாரம் பேச்சு மற்றும் எழுத்து வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டது. 1980 ஆம் ஆண்டு சிங்களர்களால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டது.
"1. சிங்கள இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறைக் கொண்டது. இலங்கை சிங்களர்களின் வரலாற்றை விட பழமையானது வேறொன்றுமில்லை. இலங்கை சிங்களர்க்குரியது என்பது வெறும் வாய்மொழி மரபோ அல்லது ஐதீகமோ அல்ல. பண்டைய குகை சாசனங்கள், மாபெரும் பௌத்த ஸ்தூபிகள், சிற்பங்கள், புத்த பெருமானின் சிலைகள் இவைகளே இதற்கு சான்று. மேலும் நீர்ப்பாய்ச்சல்கள், குளங்கள் இவையாவும் சிங்களர்களுக்கே சொந்தமானதாகும்.
2. இலங்கை அபாயகரத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்ற கருத்தோட்டம் மேற்கூறியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் அனைவரும் பிறநாடுகளுடன் இனரீதியாக நெருக்கமான உறவு கொண்டிருக்கும் போது சிங்களர்கள் மட்டுமே இலங்கையை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் இருக்கிறார்கள். சிங்களர்களுக்கு தாய்நாடு என்று இலங்கையைத் தவிர சொல்லும்படியாக வேறொன்றுமில்லை. இந்திய தொழிற்சங்க தலைவர்கள், போரா வியபாரிகள், பெரும்பான்மையான தமிழ் தொழிலாளர்கள் யாவரும் இலங்கையை ஒரு தங்கச்சுரங்கமாகவே பார்க்கின்றனர். இங்கிருந்து உழைத்து பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு போய் தங்கள் உறவினர்கள், குழந்தைகள் பெயரில் பெரிய வீடுகளையும், நிலங்களையும் வாங்குகின்றனர். இவர்கள் யாவரும் இலங்கையில் ஒரு காலும், இந்தியாவில் ஒருகாலுமாக இருக்கின்றனர். இலங்கை தங்கச்சுரங்கமாக இருக்கிறது என்பதில் மட்டுமே இவர்களுக்கு அக்கறை. மாறாக சிங்கள மொழி, பௌத்த மதம், பாரம்பரிய சிங்கள கலாசாரம் இவற்றின் மீதோ, மரபுகள் மீதோ எவ்வித அக்கறையோ அல்லது அனுதாபமோ இவர்களுக்கு இல்லை.
3. பௌத்த சமயத்தின் பாதுகாவலர் சிங்களரே. பௌத்தத்தை பௌத்தர் அல்லாதவரிடமிருந்து காப்பாற்றுவதுடன், பௌத்த சமயத்தையும், சின்னங்களையும் பேண தர்ம யுத்தம் செய்யும்படி அழைப்பு விடுப்பதும் நம் கடமையாகும்.
சிங்களர்களின் இத்தகைய துவேஷ வெளிப்பாடுகள் அவர்களின் சிறுபான்மை இன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தின. இதன் எதிரொளிப்பாக தான் தமிழர்களின் நடவடிக்கைகள் இருந்தன. 1977 வடகிழக்கு மாகாண கலவரங்களும், 1983 ஜுலை படுகொலையும், 1985 நெடுந்தீவு நிகழ்வும் தமிழ் இளைஞர்களை போராட்ட தளத்திற்கு உசுப்பி விட்டது. ஜுலை கலவர நேரத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார். "இப்பொழுது எனக்கு யாழ்ப்பாண மக்களைப் பற்றி கவலை இல்லை. நாம் அவற்றைப் பற்றி இப்போது சிந்திப்பதற்கில்லை. அவர்களது உயிரைப் பற்றியோ எம்மைப் பற்றி அவர்களின் கருத்து பற்றியோ இப்போது சிந்திப்பதற்கு எதுவுமில்லை" ஜெயவர்த்தனாவின் இந்த கருத்து அரச பயங்கரவாதத்தின் அப்பட்ட தன்மையை வெளிப்படுத்தியது.
இதன் நீட்சியில் தாக்கமுற்ற தமிழ் இளைஞர்கள் தங்களுக்கான எதிர்வினையை இயக்கங்கள் வடிவில் வெளிப்படுத்த தொடங்கினர். விளைவாக டெலோ, புளோட், ஈரோஸ், ஈ.என்.டி.எப், ஈ.பி.ஆர்.எல்.எப் , எல்.டி.டி.இ போன்ற போராளி இயக்கங்கள் உருவாயின. இதில் எல்.டி.டி.இ சற்று தீவிரமான அமைப்பாகும். எந்த தயவுதாட்சமுமற்ற, தெளிவற்ற அறிவுத்தளத்தைக் கொண்ட, வெறும் உணர்ச்சிப்பெருக்கான இளைஞர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த இயக்கம் பின்னர் தங்கள் இணைகளை தீர்த்துக்கட்ட ஆரம்பித்தது. மாற்றுக்கருத்தாளர்கள், பிற இயக்கத்தவர்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். சபாரத்தினம், யோகேஸ்வரன், ரஜனி திராணகம, அமிர்தலிங்கம், பத்மநாபா, லட்சுமண் கதிர் காமர், செல்வி.திருச்சந்திரன் ஆகியோர் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். மேலும் தங்களை எதிர்த்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அன்றைய கட்டத்தில் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டனர்.
இந்தியா தெற்காசிய வல்லரசு கோட்பாட்டில் இலங்கையை தன் வளையத்திற்குள் கொண்டு வர தீர்மானித்தது. அதன் மூலம் அது ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி சேராது என்று நம்பியது. 1977க்கும் 1983க்கும் இடைப்பட்ட கட்டத்தில் நாடாளுமன்ற அரசியல் பரப்புக்கு வெளியே தமிழ் சமூகத்தில் இரு விதமான போக்குகள் இருந்தன. அவற்றுள் ஒன்று கிராம மட்டத்தில் சமூக அமைப்புகளை நிறுவுவதாகும். இந்த அமைப்புகள் பொருளாதார ரீதியாகவும், தனிமனித ரீதியாகவும், சமூகரீதியாகவும் மனிதர் தங்கள் கவுரவத்தையும், உரிமைகளைப் பேணுவதிலும் கவனம் செலுத்தின. வெகுமக்களின் கௌரவமும், உரிமைகளும் மறுக்கப்படும் போது ஜனநாயக முறையில் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக அதன் போராட்ட முறை இருந்தது. அத்தகைய போக்கை யாழ்ப்பாண பல்கலை மாணவர்களின் செயல்பாடுகள் பிரதிபலித்தன. மற்றொரு போக்கு விடுதலைப்புலிகளாலும், தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா யுத்த முறைகளை இவை கையாண்டன.
இதன் தொடர்ச்சியில் இலங்கையில் உருவான பல்வேறு போராளி இயக்கங்கள் இந்தியாவின் சுவீகரணத்தில் கொண்டு வரப்பட்டன. பல்வேறு இயக்கங்களுக்கு இங்கு ஆயுத மற்றும் போர் பயிற்சி அளிக்கப்பட்டு அவை இராணுவ அமைப்புகளாக மாற்றப்பட்டன. அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியும், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் இவர்களுக்கு அரவணைப்பும், நிதி உதவியும் செய்தனர். குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர் செய்த நிதி உதவிகள் மற்றும் தங்கள் இயக்கத்தவருடன் எம்.ஜி.ஆர் கொண்டிருந்த நட்புணர்வு ஆகியவற்றைப் பற்றி ஆண்டன் பாலசிங்கம் தன் "விடுதலை" நூலில் விரிவாக ஆராய்கிறார். தங்களின் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர் தவிர்க்கப்பட முடியாத நபராக இருந்தார் என்கிறார் பாலசிங்கம்.
ஆரம்பத்தில் போராளி இயக்கங்களுக்கான நேர்மை, இலட்சிய உணர்வு, கோட்பாட்டு அறம் ஆகியவற்றை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் காலத்தின் முடிவில் சர்வாதிகாரமும், கொடூரமும் நிரம்பியதாக மாறியது. தாங்கள் மட்டுமே இனப்போராட்டத்தின் ஒரே பிரதிநிதிகள் என்ற இலக்கை அடைவதை நோக்கி தன் செயல்பாடுகளை அமைத்து கொண்டது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இயக்கங்கள் இராணுவ அமைப்பாக செயல்படும்போது அதே ஒடுக்குமுறையை இன்னொரு தளத்தில் அந்த இயக்கங்கள் திருப்பியளித்தால் விடுதலை போராட்டம் என்பது அதன் அர்த்தத்தை இழந்து விடும். நாசி ஜெர்மனிக்கும், இஸ்ரேலுக்கும் எந்த வேறுபாடும் இல்லாத நிலைமையை இதற்கான ஒப்புமையாகக் குறிப்பிடலாம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீது அவர்கள் பிரயோகித்த வன்முறையே முக்கிய கோடிடும் பகுதி. அம்பாறை, மட்டக்கிளப்பு மாவட்ட வன்முறைகள், வீடுகளின் சூறையாடல், காத்தன்குடி தாக்குதல், ஏனாவூரில் மசூதி ஒன்றில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம், முஸ்லிம்களை கட்டாயமாக கிழக்கிலிருந்து இடம்பெயரச் செய்தது போன்ற அநேக உதாரணரங்களை அடுக்க முடியும். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த ரஹீமுடனான பிரபாகரனின் கருத்து வேறுபாடு இதன் பின்னணியில் வைத்து பார்க்கப்பட வேண்டியதாகும். மேலும் சென்னையில் வைத்து கொல்லப்பட்ட பத்மநாபா தன் கடைசி கட்டத்தில் சென்னை விமானநிலையத்தில் வைத்து நண்பர் நாகர்ஜுனனிடம் கூறியது இங்கு கவனிக்கத்தகுந்தது. "எங்கள் அரசியலும், எங்களை எதிர்ப்பவர்களின் அரசியலும் கைப்பற்றப்பட்டு விட்டது."
பத்மநாபா அன்றைய கட்டத்தில் இந்திய உளவு அமைப்புகளுடன் இணைந்து தான் செயல்பட்டார். 1983 ஜூலை படுகொலைகள் தமிழ் போராளி இயக்கங்களுக்கு புதிய போராட்ட உத்வேகம் அளித்தன. உமா மகேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்குமான பாண்டிபஜார் சண்டையையடுத்து போராளி இயக்கங்களுக்குள் உராய்வுகள் அதிகப்பட்டன. கருத்து மோதல்கள் ஒருவரை ஒருவர் பழிதீர்த்தல் என்ற நிலைக்கு கொண்டு சேர்த்தன. இதில் விடுதலைப்புலிகளே பிரதான பங்கு வகித்தனர். தன் சொந்த இயக்கத்துக்குள்ளே பலரை பழிதீர்த்த பெருமை அதற்கு உண்டு. உலக வட்டத்தில் பலவிதமான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் பல்வேறு இயக்கங்கள் அவற்றுக்குள் அதிகமாக சண்டையிட்டுக் கொள்வதில்லை. வஞ்சம் தீர்ப்பதில் இறங்குவதில்லை. பாலஸ்தீன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் அடிப்படைவாத இயக்கங்கள், ஜப்பானின் போராளி படைகள், அயர்லாந்து போராட்ட இயக்கங்கள் இவற்றின் வரலாற்றைத் துளவும் போது நம்மால் இதை அறிந்து கொள்ள முடிகிறது. விடுதலைப்புலிகளின் இந்த சர்வாதிகார நிறுவு முறையால் மற்ற போராளி இயக்கங்கள் எல்லாம் நலிவுற்று அல்லது காணாமல் போன பிறகு இன்று அவர்களே பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.
இந்த முன்னெடுப்பும், இலங்கை அதிகார வர்க்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டமும் ஒருமுகப்பட்டிருக்கும் நிலையில் இத்தகைய செயல்பாட்டின் எல்லை சாத்தியமானது. ஒரு சமூக அக்கறையுள்ள மனிதன் வசதியான பாதையை தேர்ந்தெடுக்கமாட்டான். மாறாக கடமை இருக்கும் பாதையைத் தான் தேடுவான். அதை தான் இன்றைய தமிழகம் செய்து கொண்டிருக்கிறது. இலங்கையில் ஆளும் வர்க்க போர் காரணமாக தமிழர் படுகொலைகள், இடம்பெயரல், மனித உரிமை மீறல்கள் ஆகியவை இராஜபக்சே அரசின் மொத்தத்துவமாக இருக்கின்றன. நடப்பு இலங்கையின் எல்லா ஜனநாயக அமைப்புகளும் கைப்பற்றப்பட்டு விட்ட நிலையில் அங்கு கருத்து சுதந்திரத்தின் இருப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தே குமாரதுங்கே படுகொலை செய்யப்பட்டது இதற்கான முக்கிய உதாரணம். இதில் இலங்கை அரசு சார்பான ஊடகங்களும் அறிவு பரப்பில் அதிகாரம் செலுத்த முனைகின்றன.
சமீபத்தில் லங்கா கார்டியன் என்ற ஆங்கிலப் பத்திரிகை நோம் சாம்ஸ்கியிடம் இலங்கை தொடர்பாக நேர்முகம் கண்டது. அதில் நோம் சாம்ஸ்கியை வலிந்து தன் அதிகார வர்க்க சார்பான கருத்து வளையத்திற்குள் கொண்டு வந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை விவகாரத்தின் எதார்த்தம் குறித்த விரிவான அறிக்கையும், அறிவுலகை சார்ந்த பலரின் கையெழுத்தும் நண்பர்கள் ஜமாலன், நாகர்ஜுனன், பெருந்தேவி ஆகியோரின் முயற்சியால் நோம் சாம்ஸ்கிக்கு மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்டது. எல்லா உலக நாடுகளும் இந்த விவகாரம் பற்றி அக்கறையும், அவதானிப்பும், கருத்தும் வெளியிட்டிருக்கும் நிலையில், இலங்கை அரசு இவற்றைப் பொருட்படுத்தாத நிலையில் அதற்கான வரலாற்று விலையை காலத்தின் முடிவில் அது கொடுத்தே ஆக வேண்டும்.
தேசியவாதம்/இனம் பற்றிய மார்க்சிய வரலாற்று கண்ணோட்டத்தின் நீட்சியில் தற்போதைய ஈழப்போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இடதுசாரிகளின் வரலாற்றைப் பார்க்கும் போது அவர்கள் தேசியவாதம் குறித்த நிலைபாட்டில் மிகுந்த காரிய குழப்பமும், தடுமாற்றமும், தோல்விகளும் அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழர் நலன், இலங்கை விவகாரம் போன்றவற்றில் அவர்களின் நிலைபாடு வறட்டுத்தனமாக இருந்திருக்கிறது. ஒருங்கிணைந்த தேசம், இந்திய இறையாண்மை என்ற நிலையில் அதன் நிலைபாடு வங்கதேச பிரிவினையின் போது வெளிப்பட்டது. வங்க தேசத்தவருக்கு பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை உண்டு என்றது. வங்க தேசத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்ப இந்திராகாந்தியை நிர்பந்தித்ததில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மிகுந்த பங்குண்டு.
இதன் தொடர்ச்சியில் கேரளாவின் நிலம், மொழி, நீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு அதன் செயல்பாடுகள் சதாரண பிராந்திய கட்சியின் சதுரத்தன்மையாகவே இருந்தன. வரலாற்று ரீதியாகவே அது இந்திய கூட்டமைப்பில் தாங்கள் அதிகாரம் செலுத்தும் மாநிலங்களின் நலனுக்கான தேசிய தத்துவ கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறது. சமீபத்திய உதாரணங்களான முல்லைப்பெரியாறு, நெய்யாறு அணை விவகாரம், சேலம் கோட்ட விவகாரம் ஆகியவை நம் கண் முன் நிற்கின்றது. அழகிப் போட்டி குறித்து ஆயிரம் வெடிப்பலைகளை ஏற்படுத்திய போதும் தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அழகில் உலகின் இரண்டாம் இடத்தை அடைந்தபோது அதை கட்சிப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் போட்டு உவகை அடைந்த பெருமை அதற்குண்டு. இத்தகைய உதாரணங்கள் தேசியவாதம் குறித்த அதன் தகிடுதத்தத்தை வெளிப்படுத்தப் போதுமானவை. இலங்கை இனப்பிரச்சினையில் அதன் நிலைபாடு இந்திய அதிகார வர்க்கத்தின் கருத்தியலை ஒட்டியே அமைந்திருக்கிறது.
இலங்கை இனப்போராட்டத்தின் வரலாற்று கட்டங்களை ஆராயும் போது அதில் இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் எவ்விதமான ஆக்கபூர்வமான பங்களிப்பையும் செய்ததில்லை. அது பல்வேறு கட்டங்களில் காலத்தின் தொனியில் "அரசியல் தீர்வு" என்பதோடு நகர்ந்திருக்கிறது. இலங்கையின் பேரினவாத சார்பான இடதுசாரியான ஜே.வி.பியுடன் சி.பி.எம். கொள்ளும் உறவு முறை அதன் தேசியம் குறித்த யுக்தியை வெளிக்காட்டுபவை. 1983 படுகொலைகளுக்குப் பிறகு வங்கதேச பாணியில் இலங்கை மீது போர்தொடுத்து தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்தியில் இருந்து இந்திராகாந்தியை அடைந்த போது "இலங்கை மீது போர் தொடுத்தால் தெற்காசிய பிராந்தியத்தில் அது ஏகாதிபத்தியத்தின் தலையீட்டிற்கே வழி வகுக்கும்" என்ற எதிர்பாட்டை ஏற்படுத்தி தன் செல்வாக்கால் இந்திரா காந்தியைத் தடுத்த பெருமை தமிழ்நாட்டு இந்திய/மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
இன்று அதன் நிலைபாடு மாறியிருக்கிறது. அதன் அரசியல் பின்னணியும் ஆராயப்பட வேண்டிய நிலையில் அதன் வழக்கமான "நாம்- நாம்" தன்னிலை வெளிப்பாடு தற்போது ஓரளவு மாறியிருக்கிறது. இந்த மாறுபாடும் தலைமை மாற்றத்தின் வழியே தான் சாத்தியப்பட்டது என்பதை கூர்ந்து அவதானிப்பவர்களுக்குப் புரியும். ஆனால் அது இனப்போராட்ட பிரக்ஞை சிறிதளவும் இல்லாத திராட்சை தோட்டத்தில் தவம் கிடப்பது தான் முரண்நகையாக இருக்கிறது. வறட்டு செயல்தந்திரங்கள், காலப்பொருத்தப்பாட்டில் திணிக்கப்படும் வெற்று யுக்திகள் அதை "சில நேரங்களில் நாங்கள்" என்பதாக மாற்றி விடுகிறது. இன்னொரு வகையில் இந்த போராட்டம் எதிலும் ஈடுபடாமல் வெறும் கருத்து யுக்தியை மட்டுமே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி வருகிறது.
தமிழ் வெகுஜன உளவியலே இலங்கையின் ஒடுக்குமுறைக்கு எதிராக உயிர்துறப்பு நிலைக்கு சென்றிருக்கும் போது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உளவியலில் எந்த வித பாதிப்பும் ஏற்படாதது ஆச்சரியமளிக்கிறது. இதன் மறு கட்டத்தில் இந்த இனப்போராட்ட உணர்வு தனித்தமிழ் தேசிய இயக்கங்களை மீண்டும் தனித்தமிழ் நாடு கோரிக்கையை முன்வைக்கும் கருவியாக்கி இருக்கிறது. இந்திய தேசிய கூட்டமைப்பில் பல்வேறு இனங்கள், கலாசாரங்கள் நிலவும் சூழலில், இந்த பன்மைப்பாட்டை தாண்டி தனித்தமிழ்நாடு கோரல் என்பது தெளிவாக வரையறுக்க முடியாத ஒன்று. பிரிந்து செல்லும் உரிமையுடைய தேசிய இனங்கள் தங்களுக்கான ஒடுக்குமுறை தேசியம் எது என்பதை தெளிவாக முன்வைப்பது அவசியம். இன்று திராவிடம் அதன் சொந்த எதிரிகளை (கர்நாடகா, கேரளம்) தானே உற்பத்தி செய்திருக்கும் நிலையில் இந்த கோஷம் அதன் அர்த்தத்தை இழந்து விடுகிறது. இது இலங்கை விவகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மேலும் கலாசார நிலப்பரப்பு என்பது இந்தியாவை பொருத்தவரை துண்டிக்கப்பட்ட ஒன்றல்ல. அதன் பொருளாதார, சமூக நலன்களும் கூடவே இழைந்து தான் இருக்கிறது.
நாம் ஓர் அரசுக்குள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. மாறாக அரசுகள் என்னும் அமைப்புக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கருத்து இங்கு கவனிக்கத்தகுந்தது. ஆகவே டெல்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் கடவு சீட்டுடன் வர வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கால் உரையாடுவதில் பயன் இல்லை. டெல்லி, மும்பை வாழ் தமிழர்கள் விசாவுடன் தான் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்று மறு குரல் எதிரொலித்தால் பிரச்சினை வேறு தளத்திற்கு சென்று விடும். மார்க்சியம் மனித விடுதலையை முன்வைக்கிறது என்ற நோக்கில் அதன் போராட்ட வரலாறும், கோட்பாடுகளும் தெளிவானவை. கால/வெளி பொருத்தப்பாட்டை பல புள்ளிகளில் இருந்து கோருபவை. ஈழப்போராட்டம் உச்சகட்ட நிலையை எட்டியிருக்கும் நிலையில் இலங்கையிலும், இந்தியாவிலும் மார்க்சிய இயக்கங்கள் பலவீனப்பட்டு இருப்பது வரலாற்று சறுக்கலாகும். இலங்கையில் அமைப்பு ரீதியாகவும், இந்தியாவில் நிலைபாட்டு, செயல் தந்திர ரீதியாகவும் பலவீனப்பட்டு இருக்கின்றன.
சி.பி.ஐ தன்னை பலப்படுத்தி கொண்ட நிலையில் சி.பி.எம் தன்னை கோட்பாட்டு ரீதியாக தகவமைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இலங்கை கொடூரங்களுக்கு எதிராக தமிழ்நாடு இயக்கமாக தன்னை முன்வைத்துப் போராடும் போது சி.பி.எம் ஒதுங்கி கொள்வது அதன் வர்க்க நலனை தான் வெளிப்படுத்தும். தேசியம் பற்றி லெனினுக்கும் ஸ்டாலினுக்குமான மோதலை சி.பி.எம் மீண்டும் வாசிப்பது அவசியம். வரலாறு போராடும் மனிதனுக்காக அதன் வாயில்களை திறந்தே வைத்திருக்கிறது.
- எச்.பீர்முஹம்மது (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இந்திய இடதுசாரிகளும் தேசிய வாதமும்- ஈழ விடுதலைப்போரின் பரிணாம கட்டங்களின் நகர்வில்
- விவரங்கள்
- எச்.பீர்முஹம்மது
- பிரிவு: கட்டுரைகள்