கொரோனா நச்சுயிரினால் பரவும் நோய்த் தொற்றுக் காலமாகிய இந்நாளில் தொலைக்காட்சியில் வருகின்ற சில நிறுவன உற்பத்திப் பொருட்களின் விளம்பரங்களானது, அந்நோய் தொற்றுக் கிருமியை மையப்படுத்தி வருகின்றன. பல்துலக்கி (Tooth Brush) தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, இதைப் போன்றதொரு விளம்பரத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது.
அந்த விளம்பரத்தில், தூக்கத்திலிருந்து எழுந்த ஒருவர் நேரே குளியலறைக்கு பல் துலக்கச் செல்கிறார். அப்பொழுது அவருக்கு பின்னால் இருந்து “டாக்ஸி டாக்ஸி..” என்றொரு குரல் ஒலிக்கின்றது. யார் நம்முடைய குளியலறையில்… என்ற தயக்கத்தோடு அந்த நபர் திரும்பிப் பார்க்க, அவருக்குப் பின்னால் பிரபல நடிகர் ஆயுஷ்மான் அமர்ந்திருப்பார்.
தான் ஏன் அவ்வாறு டாக்சி… டாக்சி.. என்று கூறினேன் என்று அதற்குப் பிறகு அவர் விளக்கம் அளிக்கத் தொடங்குகிறார். பல் துலக்கிகள் கிருமிகளை வெளியேற்றும் வாகனங்களாக பயன்படுகின்றனவாம். எனவே கோல்கேட் பல்துலக்கிகளை பயன்படுத்தினால் கொரோனா அச்சத்திலிருந்து ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துவதாக அந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.
இதேபோல், வண்ணப்பூச்சிற்கான (Paint) தொலைக்காட்சி மற்றொரு விளம்பரத்தில் வரும் கரீனா கபூர் ஒரு வீட்டில் உலாவுவது போன்ற காட்சி. அதில் ஆற்றும் பல்வேறு வீட்டுப்பணிகள் திரைப்பணிகளைப் பற்றி பேசுகிறார்.
நான் ஒரு திரை உலக நட்சத்திர நடிகையா? அல்லது கணவர் விரும்பும் மனைவியா? என்று கேட்டுக் கொண்டே அடுத்தது அவரே சொல்கிறார், என்னால் ஒரே நேரத்தில் இரண்டிலும் ஜொலிக்க முடியும் என்றால், ஏன் எனது வீட்டால் அவ்வாறு இருக்க முடியாது? என்றவாறு அந்த விளம்பரம் தொடர்கிறது. அது Berger paint விளம்பரம்.
அந்த வண்ணப்பூச்சை வீட்டுச் சுவற்றில் பூசினால் வீட்டிற்கு பளபளபப்பையும் அதே சமயத்தில் பாக்டீரியா, வைரசு போன்ற தொற்றுநோய்க் கிருமிகளையும் அழித்தும் விடுமாம். அதுமட்டுமல்லாது இந்திய மருத்துவக் குழுவே அதற்குச் சான்றிதழ் அளித்திருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் காட்டப்படுகிறது.
அடுத்தது ஒரு பிளைவுட் (Plywood) கம்பெனி விளம்பரம். அதில், புதிதாக செய்திருக்கின்ற மரச் சாமான்களை தனது மனைவியிடம் காட்டுவதற்காக, அவரும் அவரது மனைவியும் வீட்டிற்குள் வருவதாக ஒரு காட்சி. புதிய மரச் சாமான்களின் கவர்ச்சியில் அதன் மீது ஆசைப்பட்டு மனைவி அவற்றை தொட நினைக்கும்பொழுது, திடீரென்று அதிலிருந்து ஒரு மேகம் போன்ற திரள் அவரது முகத்தில் வந்து மோதுவது போல ஒரு காட்சி.
அது கிருமிகளின் கூட்டம் என்பது காண்போருக்கு விளங்கும். அப்பொழுது கணவர் சொல்கிறார்: பயப்படாதே, இந்த மரச்சாமான்கள் Century Plywood-களால் ஆனது. அது கிருமிகளை கொல்லும் நானோ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறும் அந்த விளம்பரம் முடிவில், அவர்கள் இருவரும் கிருமிகளின் பயமின்றி ஆனந்தமாக கட்டித் தழுவிக் கொள்வது போல் முடிகிறது.
கொரோனா நோய்த் தொற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட பொது முடக்கமும் நடைமுறைக்கு வரத் தொடங்கிய மார்ச்சு மாதத்திலிருந்து இத்தகைய விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வலம் வரத் தொடங்கின. இத்தகைய விளம்பரங்களில் கொரோனா நோய்த்தொற்று பற்றி மக்கள் மனதில் இருந்த அச்சம் மையப்பொருளாக இருக்கின்றன.
எங்கள் நிறுவனத்தின் மெத்தை கொரோனா வைரசை முற்றிலும் ஒழிக்கும் தன்மையுடையது என்று மார்ச்சு மாதத்திலேயே விளம்பரம் வந்தது. அதைப் போலவே ஒரு ஆடைத் தயாரிக்கும் நிறுவனமும் ஒரு ரொட்டித் தயாரிக்கும் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டவை அல்லது கொரோனா வைரசை அழிக்கக் கூடியவை என்று விளம்பரங்கள் செய்தன.
இவ்வாறு, தங்கள் நிறுவனத்தின் பொருட்களானது கொரோனா வைரசை அளிக்கும் அல்லது காக்கும் அல்லது தடுக்கும் என்று நேரடியாகவும் வேறு சில நிறுவனங்களின் விளம்பரங்களில் கொரோனா வைரசு என்ற சொல்லை நேரடியாக பயன்படுத்தாமல் பொதுவாக கிருமிகளைத் தடுக்கும் அளிக்கும் காக்கும் என்று விளம்பரப் படுத்தப்படுகின்றது. அவற்றில் கூட பொதுவாக கிருமிகள் என்று கூறினாலும், திரையில் காண்பிக்கப்படும் கிருமி கொரோனா வைரசு கிருமியாகத்தான் இருக்கின்றது.
ப்ளூ ஸ்டார் (Blue Star) குளிர்சாதனப் பெட்டியில் உள்ள காற்று வடிகட்டும் தொழில்நுட்பமானது (Filtering technology), 99% கொரோனா வைரசை நீக்கித் தூய்மையானக் காற்றை பயனர்களுக்கு வழங்கும் என்று அவர்களது நிறுவன விளம்பரத்தில் உறுதி கூறப்படுகிறது. இதைப் போலவே பெர்கர் பெயிண்ட் நிறுவனத்தின் விளம்பரத்தில், அந்த நிறுவனத்தின் வண்ணப்பூச்சை சுவற்றில் அடித்தால் அது கொரோனா வைரசை வீட்டுக்குள் விடாமல் கட்டுப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.
விளம்பரங்களில் கூறப்படும் இதுபோன்ற வாக்குறுதிகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்ற கேள்வி இயல்பாக எழுகின்றன.
நிறுவனங்கள் தங்களது நிறுவன உற்பத்திப் பொருட்களுக்கு விளம்பரங்களின் வழி அளிக்கும் இதுபோன்ற வாக்குறுதிகளுக்கு பின்னால் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி முடிவுகள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால், இதுகுறித்து சில தேர்ந்த துறைச் சார்ந்த நிபுணர்களிடமும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் கேட்டறிந்த பொழுது அவர்கள் வேறு விதமான எச்சரிக்கைகளை தருகின்றனர்.
இந்திய விளம்பர தரநிர்ணய அமைப்பு (The Advertisement Standards Council of India -- ASCI) என்பது அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாக (Self –regulating agency) இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் அல்லது வேறு பல ஊடகங்களில் வரும் விளம்பரங்களை மேற்பார்வை செய்து அவற்றில் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்லும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதாக அந்நிறுவனமே கூறிக் கொள்கிறது.
கொரோனா வைரசிலிந்து பாதுகாப்பதாக சில நிறுவன விளம்பரங்களில் கூறப்படும் வாக்குறுதிகள் குறித்து அந்த அமைப்பிடம் கேட்டபொழுது கொரோனாவைப் பயன்படுத்தி விளம்பரங்கள் செய்வதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்று அந்த அமைப்பைச் சேர்ந்தோர் கூறுகின்றனர்.
Century Ply என்ற நிறுவனம் தனது இணையதளத்தில், நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் நிறுவனம், மரத்தூள் பலகை (plywood) செய்வதனால் அவை வைரசுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று தெரிவிக்கின்றது.
தங்கள் நிறுவனத்தின் மரத்தூள் பலகையின் மீது எந்த ஒரு கிருமி அமர்ந்தாலும் அதில் உள்ள நானோ தொழில் நுட்பமானது அந்த கிருமிகளில் 99.9% கிருமிகளை கொன்றுவிடும் என்று கூறப்பட்டுள்ள அதே நேரத்தில், இதற்கான ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Century Laminates & Century Ply பொருட்கள் கிருமிகளைக் கொல்லும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதனை ஆய்வுப் பூர்வமாக நிரூபிப்பதற்கு உரிய சோதனைகள் எதுவும் முழுமையாக இல்லாத நிலையில், அதன் விளம்பரங்களில் பாதுகாப்பு வாக்குறுதிகளை கொடுப்பது முறையன்று என்றும் அந்த நிறுவனம் தெளிவுபடுத்துகின்றது.
இதைப்போலவே, இந்தியாவிலேயே நச்சு எதிர்ப்பு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட முதல் பெயிண்ட் எங்கள் நிறுவனத்தின் பெயிண்ட் தான், என்று கூறிய நெரோலாக் என்ற பெயிண்ட் நிறுவனத்தின் இணையதளத்தில், கொரோனா வைரசைத் தடுக்கும் தொழில்நுட்பம் பற்றிய எந்தத் தகவலும் இடம் பெறவில்லை.
இதைப்போலவே பெர்கர் பெயிண்ட் நிறுவனத்தின் விளம்பரத்திலும் கோவிட் -19க்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் பற்றியச் செய்திகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், அதன் இணையதள பக்கத்தில் அத்தகையக் குறிப்புகள் காணப்படுகின்றன. அதாவது, நானோ சில்வர் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவனத்தின் பெயிண்ட் பூசப்பட்ட சுவற்றின் மீது கொரோனா வைரசு ஒட்டிக் கொள்ளும் போது அவற்றை 30 நிமிடத்திற்குள் அழித்துவிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது இந்தச் சோதனையை இந்திய அரசின் தேசிய அமைப்பு ஒன்றும் சோதித்து பார்த்துள்ளதாகவும் அந்த இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று Blue star நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள காற்றை வடிகட்டும் தொழில்நுட்பமானது (Air Filtering Technology), கொரோனா வைரசை அளிப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அந்த காற்று வடிகட்டியானது, அதன் வழியே வருகின்ற கொரோனா வைரசுகளை வடிகட்டும் பொழுதே அழித்தும் விடுமாம். இதற்கு வைரசை செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
"குளிர்சாதனப் பெட்டியினுள் குளுமைப்படுத்தப்பட்ட காற்று, வடிகட்டியின் வழியே உள் நுழையும் பொழுது, வடிகட்டியில் உள்ள தொழில்நுட்பம், அந்த குளுமையான காற்றிலுள்ள கிருமிகளைச் செயலிழக்க செய்துவிடும்.
இதனால், நாவல் கொரோனா வைரசு உள்ளிட்ட அனைத்து வகையான நச்சுக் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் இந்த தொழில்நுட்பம் செயலிழக்கச் செய்து விடுவதால், அந்தக் காற்றை சுவாசிப்பதில் எத்தகைய சிக்கலும் இல்லை என்றும் கொரோனா வைரசு மூலம் பரவும் covid-19 நோய்த் தொற்று மட்டுமல்லாது, காசநோய், அம்மை மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும் இன்புளூயன்சா போன்ற நோய் தொற்றிலிருந்து கூட இந்தக் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள வடிகட்டும் தொழில்நுட்பம் பாதுகாக்கும்" என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
நச்சு கிருமிகளைச் செயலிழக்க வைக்கும் இந்த தொழில்நுட்பமானது, இது, ஜெர்மானிய அறிவியல் அறிஞர்களால் சோதித்து பார்க்கப் பட்டதாக (அவர்கள் சோதித்துப் பார்க்கவில்லை) அந்த இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த நிறுவனம் ஊடகங்களுக்கு அளித்தச் செய்தி குறிப்பொன்றில், "எங்கள் குளிர்சாதனப் பெட்டியானது கொரோனா வைரசிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசு காட்டியுள்ள நடைமுறைகளான, முகக்கவசம் அணிதல், கைகளைச் சோப்பினால் கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றிற்கு மாற்றல்ல", என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, அரசு கூறியுள்ள எந்த தற்காப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்காமலேயே எங்கள் நிறுவனத்தின் குளிர்சாதனப்பெட்டி ஆனது உங்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று நாங்கள் உறுதி அளிக்கவில்லை என்றும் அதன் செய்தி குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேலே குறிப்பிட்ட Blue star நிறுவனம் மட்டும் தான் இவ்வாறு செய்திருக்கின்றது என்று கூறுவதற்கில்லை; இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது.
விளம்பரங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் உண்மைத் தன்மையை அறிவதற்காக, Century Ply , நியூரோலாக் பெயிண்ட், கோல்கேட் பல்துலக்கி தயாரிக்கும் நிறுவனம், Blue Star போன்ற நிறுவனங்களை தொலைபேசியின் வாயிலாகவும் மின்னஞ்சல் வழியாகவும், ட்விட்டர் மூலமாகவும் The Print மின்னிதழ் நிறுவனம் அணுகி விவரம் கேட்டபொழுது, அதற்கு அந்த நிறுவனங்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இதுநாள் வரையிலும் பெறப்படவில்லை.
பெர்கர் பெயிண்ட் நிறுவனத்தின் இந்திய பொது மேலாளர் சுதீர் நாயர், The Print இதழின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது, விளம்பரத்தில் நாங்கள் கூறிய வாக்குறுதிகள் யாவும் ஆய்வகங்களில் சோதித்து அறியப்பட்ட முடிவுகள் தான் என்றார். "எங்கள் நிறுவனத்தின் பெயிண்ட் அடிக்கப்பட்ட சுவற்றின் மீது SARS-CoV-2 வைரஸ் படும்பொழுது, அதுபட்ட அடுத்த 30 நிமிடங்களில் அந்த வைரஸ் செயலிழந்து விடுகிறது என்பது சோதனை மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் தொடுதலின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் செயல்திறன் குறையாது" என்று கூறிய அவர், இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றியச் செய்திகளை வெளியில் கூற முடியாது, என்றும் கூறினார்.
எழும் ஐயங்கள்:
இதுகுறித்து, தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள இந்திர பிரஸ்தா ஆய்வு மையத்தில் உள் மருந்தியல் நிபுணராக பணிபுரிகின்ற மருத்துவர் சுரஞ்சித் சட்டர்ஜியிடம் கேட்டபொழுது, பல நிறுவனங்கள் வெளியிடும் இந்த அறிவியல் ஆதாரமற்ற விளம்பரங்களின் மீது அவர் சந்தேகம் எழுப்புகிறார். அவ்வாறு கூறப்படும் வாக்குறுதிகள் அறிவியல் சோதனைகள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டால் ஒழிய அவற்றை நம்பக்கூடாது; அவை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவை என்றார்.
"உலகம் முழுவதும் பரவி மனித இனத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற இந்த கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்குரிய மருத்துவ முறைகளை கண்டறிய உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மிகத் தீவிர முனைப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும்கூட, தீவிர ஆய்வுகளை மேற்கொள்கின்ற மருத்துவ உலகாலேயே கண்டறிய முடியாத, வைரசை செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பத்தை இதுபோன்ற நிறுவனங்கள் கண்டறிந்துவிட்டது என்றால், அந்தத் தொழில்நுட்பத்தை பற்றிய கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கலாம்; சோதனை அடிப்படையில் இல்லாவிட்டாலும் கருத்தியல் ரீதியான செய்திகளையாவது அந்த நிறுவனங்கள் முன்வைக்கலாமே" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மேற்க்கண்ட மருத்துவரின் கருத்திற்கிணங்க, நொய்டாவைச் சேர்ந்த சீமா குரல் எனும் ஆசிரியரும் இதுபோன்ற விளம்பரங்களின் மீது சந்தேகம் எழுப்புகிறார். "சுவற்றில் அடித்த பெயிண்டும், வீட்டில் பொருத்திய குளிர்சாதனப் பெட்டியும் கொரோனாத் தொற்றிலிருந்துது என்னை பாதுகாக்கும் என்பதை நான் நம்பவில்லை. இவை தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச்செல்லும். கொரோனா நோய்த்தொற்றிலிருந்து ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு அரசு காட்டிய வழிமுறைகளை பின்பற்று வேண்டுமே ஒழிய இதுபோன்ற விளம்பரங்கள் உதவாது" என்று அந்த ஆசிரியர் கூறுகிறார்.
இருப்பினும், மும்பையைச் சேர்ந்த ஒரு முன்னணி விளம்பர நிறுவனத்தின் தலைவர் அர்சில் பரத்வாஜ் (Harshil Bhardwaj), நிறுவன விளம்பரங்களில் கூறப்படும் வாக்குறுதிகளில் ஓரளவிற்கு உண்மை உள்ளது, என்றார். அதாவது இந்த உண்மைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வகையின உண்மைகள் (category truth), மற்றொன்று அந்த உற்பத்தி பொருள் சார்ந்த உண்மைகள் (product truth).
வகையின உண்மை என்பது என்னவென்றால், எல்லா சோப்புகளும் கிருமிநாசினிகளும் கிருமிகளைக் கொல்லும்தன்மை உடையவை. இந்த உண்மையை, சோப்பு தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை விற்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
மற்றொரு வகையான உற்பத்தி பொருள் சார்ந்த உண்மை என்பது என்னவென்றால், அந்தப் பொருளில் உள்ள ஏதேனும் ஒரு கூறு, கிருமிகளுக்கு எதிர்ப்புத்தன்மை உடையவனாக இருக்கலாம். ஓர் உற்பத்திப் பொருளின் உள்ளடக்கத்தில் உள்ள ஒரு கூறினை அந்த மொத்தப் பொருளுக்குமான பண்புக்கூறாக காட்டி, தங்கள் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பது என்பது மற்றொரு வகையான உத்தி, என்று அவர் விளக்கமளித்தார்.
அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகள் ஏதுமின்றி, தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கும் என்றோ, அல்லது அழிக்கும் என்றோ, அல்லது தடுக்கும் என்றோ விளம்பரப்படுத்த கூடாது. அவ்வாறு விளம்பரப்படுத்துவது அவர்களை சிக்கலில் மாட்டி விடும்.
இவ்வாறு பதஞ்சலி நிறுவனம், கொரோனா வைரசிலிருந்து தங்கள் நிறுவனத்தின் மருந்துப்பொருட்கள் காக்கும் என வாக்குறுதி அளித்து விளம்பரம் செய்ய, அதன்மீது இந்திய அரசின் ஆயுஸ் அமைச்சகம் கேள்வி எழுப்பியது. பின்பு பதஞ்சலி நிறுவனம் அந்த விளம்பரத்தை மாற்றி அமைத்தது.
ஆனால், இதுபோன்ற அரசின் தலையீடு மற்ற விளம்பரங்களில் இல்லாமல் போவதுதான், இத்தகைய முறைகேடான வாக்குறுதிகளுக்கு வழிவகுக்கின்றது, என்று இந்திய அரசின் பொது சுகாதார அமைப்பின் (PHFI) கீழ் இயங்குகின்ற நோய்த் தொற்றியல் பிரிவின் தலைவரும் பேராசிரியருமான கிரிதர் ஆர். பாபு கூறுகிறார்.
"பெரும்பாலான மக்கள் இந்த நோய்த்தொற்று ஏற்படுத்தும் அச்சத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முனையும் பொழுது, அந்த அச்சத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு விளம்பரப்படுத்தப்படும் பொருட்கள், இன்னும் சரியாகச் சொல்வதென்றால் மருந்து பொருட்களின் விளம்பரங்கள் கூட, இந்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் கண்காணிப்பிற்குக் கீழ் கொண்டு வரப்பட்டு சரி பார்க்கப்படுவதில்லை.
எனில், இதுபோன்ற விளம்பரங்களை எல்லாம் யார்தான் முறைப்படுத்துகிறார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை, நாம் முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனில், அந்த உற்பத்திப் பொருட்களின் மீதான, ஆய்வு நெறிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டும், என்று அவர் மேலும் வலியுறுத்துகிறார்.
தங்கள் நிறுவனத்தின் உற்பத்தி பொருளானது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்டது, என்று சில நிறுவனங்கள் விளம்பரப் படுத்துவதை பார்க்கும் பொழுது நமது கோபம் தலைக்கேறி விடுகிறது.
தங்கள் நிறுவனத்தின் சோப்பும் பெயிண்ட்டும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வல்லமை பெற்றவை என்று வரும் விளம்பரங்களை தொலைக்காட்சியில் அடிக்கடி காணலாம். இவ்வாறு விளம்பரம் செய்த டெட்டால் நிறுவனத்திற்கும், பெர்கர் பெயிண்ட் நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் கௌரவச் செயலாளர் மருத்துவர் ரவி அசோகன் குறிப்பிடுகிறார்.
நாங்கள் விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்திற்கு டெட்டால் நிறுவனத்திடமிருந்து இன்னும் பதில் வரவில்லை, அதைப்போலவே பெர்கர் பெயிண்ட் நிறுவனத்திடமிருந்தும் எந்தப் பதிலும் வராத நிலையில் அவர்கள் தொடர்ந்து அந்த விளம்பரத்தைச் செய்துக் கொண்டே இருக்கிறார்கள், என்று மருத்துவர் ரவி அசோகன் கூறுகிறார்.
இதுகுறித்து, டெட்டால் நிறுவனத்திடம் தொடர்புக் கொண்ட கேட்டபொழுது, "நாங்கள் விளம்பரத்தில் கூறிய வழிகாட்டுதலின்படி எங்கள் சோப்பைக் கொண்டு கை கழுவும்போது, 99.9% SARS-CoV-2 வைரஸ் கொல்லப்படுவதாக, பெயர் வெளியிட விரும்பாத ஓர் ஆய்வு நிறுவனத்தின் முடிவு கூறுகிறது, அதைத்தான் நாங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தினோம் இது குறித்து மேலும் பல விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனில் www.dettol.co.in, இணையதளத்தை காணுங்கள், என்று டெட்டால் நிறுவனம் பதில் கூறியது.
இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில், எங்களிடம் வரும் பல்வேறு உற்பத்திப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம். இவ்வாண்டு மட்டும் மொத்தம் 23 உற்பத்திப் பொருட்களுக்கு நாங்கள் சான்று வழங்க மறுத்துள்ளோம். பொதுவாக நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களுக்கும் சான்று வழங்குவதில்லை.
அந்த உற்பத்திப் பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தும் தொழில் நுட்பத்திற்கும் அல்லது செயல்முறைகளுக்கும் தான் நாங்கள் சான்றிதழ் வழங்குகின்றோம், என்று மருத்துவர் ரவி அசோகன் மேலும் விளக்கமளித்தார்.
இந்திய விளம்பர தர நிர்ணய அமைப்பின் பொதுச் செயலாளர் மனிஷா கபூரிடம் இதுகுறித்து பேசியபொழுது, ஒரு விளம்பரம் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்கிறது என்று தெரிய வந்த உடனேயே நாங்கள் அந்த விளம்பரத்தை நிறுத்தி விடுவோம் என்றார்.
இந்திய அரசின் ஆயுஸ் அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட 250 வகையான விளம்பரங்களில் கூறப்படும் வாக்குறுதிகள் போலியானவை என்று சுட்டிக் காட்டியுள்ளோம். மேலும் 162 வகையான விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன அல்லது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நிறுவனங்கள் மீண்டும் இதுபோன்ற விளம்பரங்களை செய்யாது, நிறுத்திக் கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; மாறாக இவ்வாறு செய்வதிலிருந்து சிறிது பின்வாங்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம், என்கிறார் மனிஷா கபூர்.
நோய்த்தொற்று அச்சுறுத்தல் நிலவுகின்ற இந்நாளில், அதிலிருந்து விடுபட என்னவெல்லாம் செய்யலாம், எந்த நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் நம்மை இந்த நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று மக்கள் தேடுகின்றனர். அவ்வாறு சில புதிய பொருட்களையும் அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர், அல்லது ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களை புதிய வழி முறையில் பயன்படுத்த தலைப்பட்டுள்ளனர்.
எனவே நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு நெருக்கமாக தங்களை விளம்பரப் படுத்திக்கொள்வதன் மூலம் விற்பனைக்கு வழிவகுக்கின்றனர்" என்று மனிஷா கபூர் மேலும் விளக்கிச் சென்றார்.
"தாங்கள் வசிக்கும் வீடுகளிலும், இருக்கும் இடங்களிலும் தங்களையும் தங்கள் அன்புக்குரியவரையும் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் பாதுகாப்பை எதிர்பார்க்கும் நுகர்வோர்களின் எண்ணவோட்டமானது, விளம்பரங்களில் வரும் வாக்குறுதிகள் நோக்கி நகர்கின்றன; எனவே அந்த விளம்பரங்கள் கூறும் உற்பத்திப் பொருட்களை நோக்கி அவர்களும் நகர்கிறார்கள்" என்று கூறலாம்.
எழுத்தாளர்: சுபங்கி மிஸ்ரா
தமிழில்: ப.பிரபாகரன்
- ப.பிரபாகரன்