வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போன்ற வெருண்டபார்வையை உடையவர்கள், பெரியதலையை உடையவர்கள், பறவைகளின் ஊனைத்தின்பதால் புலால் நாற்றம் கமழும் வாயினர். இடக்கர்ச் சொற்களை அடிக்கடி கூசாது கூறினாலும் கரவில்லாத சொற்களையே பேசுவர். அதனால் வெள்வாய் வேட்டுவர் எனப்பட்டனர்.

“வெருக்குவிடையன்ன வெருணோக்குக் கயந்தலை
புள் தின்ற புலவு நாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர்” என்று வேட்டுவர் இயல்பு குறித்து ஆலத்தூர் கிழார் புறநானூற்றில் (324) கூறுகிறார்.

வேட்டைச் சமூகத்தவரான எயினர்கள் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. விருந்தோம்பல் இம்மக்களின் தலையாய பண்பாக விளங்கியது. அது மட்டுமல்ல இருப்பது எதுவாயினும் அதனை எல்லாரும் சமமாகப்பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது இம்மக்களின் சீரிய பண்பாக மிளிர்ந்தது. இவர்கள் கரவு, கபடம், சூது முதலிய தீயபண்புகளை அறியாதவராக இருந்தனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

தம் இல்லம் நாடி வந்த பாணர் முதலிய விருந்தினரை இனிய முகத்தினராய் இன்சொல்லினராய் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். பசி நீங்க உணவளித்துப் போற்றினர். தம்மிடம் இருந்தது எதுவாயினும் எந்நேரமாயினும் அதனை விருந்தினர்க்குப் பகிர்ந்தளித்துப் பசிபோக்கினர். பகிர்ந்துண்ணும் பண்பை இயல்பாகவே பெற்றிருந்த எயின்குடிப்பெண்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர் என்பதில் வியப்பேதுமில்லை. எயின்குடியினரின் இச்சீரியபண்புக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் ஆதி பொதுவுடைமை வகைப்பட்ட கண சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

எயினரின் விருந்தோம்பல் சிறப்பு

வேலின் கூரிய முனை போன்ற ஈந்தின் இலைகளால் வேயப்பட்டதும் முள்ளம் பன்றியின் முதுகுபோல் காணப்பட்டதும் ஆன குடிசைகளில் எயினர் வாழ்ந்தனர். அது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது. அக்குடிசையின் உள்ளே எயிற்றி ஒருத்தி படுத்திருந்தாள். அவள் அண்மையில் தான் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தாள். தாயும், சேயும் மான் தோலாகிய படுக்கையில் முடங்கிப்படுத்திருந்தனர்.

அக்குடிசையைச் சேர்ந்த பிறபெண்கள் உணவு தேடி வெளியே சென்றிருந்தனர். அவர்கள் கையில் வலியகோல் ஒன்று இருந்தது. வயிரம் பாய்ந்த கோல். அதன் ஒரு முனையில் உளி ஒன்று செருகப்பட்டிருந்தது. மறு முனையில் பூண் கட்டப்பட்டிருந்தது. அக்கோல் கடப்பாரைபோல் தோற்றமளித்தது.

கரம்பை நிலமாகிய காட்டில் மிக விளைந்து உதிர்ந்து கிடந்த புல்லரிசியை எறும்புகள் இழுத்துச் சென்று சேமித்து வைத்திருந்தன. அவ்வாறு சேமித்து வைத்த இடங்களைத் தேடி அப்பெண்கள் சென்றனர். வெண்மையான பற்களையுடைய அவர்கள் தம் கையில் வைத்திருந்த கடப்பாறையால் அவ்விடங்களில் கட்டிகள் கீழ்மேலாகுமாறு குத்தியதால் கரம்பை நிலத்தில் உண்டாகிய புழுதியினை அளைந்து எறும்புகள் சேமித்து வைத்திருந்த புல்லரிசியை எடுத்து வந்தார்கள். அதனை அவர்கள் குடிசையின் முற்றத்தில் விளாமரத்தின் அடியில் பதித்து வைத்திருந்த மரவுரலில் பெய்து, வயிரமுடைய கோலாகிய உலக்கையால் குற்றினார்கள்.

கிணற்றில் சில்லூற்றாக ஊறிய உவர் நீரை முகந்து வந்து, பழைய ஒறுவாய் போனபானையில் உலை ஏற்றினார்கள். உலையை முரிந்த அடுப்பில் வைத்துச் சோறு ஆக்கினார்கள். அரியாது ஆக்கின அச்சோற்றை உப்புக் கண்டத்தோடே, தெய்வங்களுக்குச் சேர இட்டு வைத்த பலிபோலத் தேக்கிலையில் வைத்து விருந்தினராக வந்த பாணர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டனர். இக்காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை (86-105) பெருமையுடன் காட்டுகிறது.

‘யாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வற்றலை யன்ன வைநுதி நெடுந்தகர்
ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சிறையின் மிளிர மண்டி
இருநிலக்கரம்பை படு நீறாடி
நுண்புலடக்கிய வெண்பலெயிற்றியர்
பார்வையாத்த பரைதாழ் விளவின்
நீழல்முன்றில் நிலவுரற் பெய்து
குறுங்காழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற்றுவரீ தோண்டித் தொல்லை
முரவு வாய்க் குழுசி முரியடுப்பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல்
-----------------------------------------
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவீர்”

என்று கடியலுர் உருத்திரங் கண்ணனார்வரைந்து காட்டும் சித்திரம், எயின் குடிமகளிரின் பகுத்துண்ணும் பண்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் இனிதே புலப்படுத்துகிறது.

குறிஞ்சி நிலத்துச் சிற்நூர் ஒன்றில் நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றினைப் புறநானூற்றுப் புலவர் ஒருவர் நமக்குக் காட்டுகிறார். பெயர் தெரியாத அப்புலவர் காட்டும் காட்சி குறிஞ்சி நிலத்தில் கண சமூகமாக வாழ்ந்த மாந்தரின் எளிய தன்மையையும் தன்னல மறுப்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் பகுத்துண்ணும் பண்பையும் உணர்த்துகிறது.

அவ்வூரின்கண் வாழ்ந்த எயினர் கரவறியா உள்ளத்தவர், வெள்ளந்தியானவர்கள், நாகரிக உலகின் நடப்புக்கள் அவர்கள் அறியாதவை. ஆனால் மனைத் தலைவியானவள், தலைமைக்கேற்ற தகுதியும் தலைமைப் பண்பும் நன்மாட்சியும் வாய்க்கப்பெற்றவளாக விளங்கினாள். அவளைப் பற்றிப் புலவர்வரைந்து காட்டும் சித்திரம் கற்பார்க்கு வியப்பும் உவகையும் நல்குவதாக உள்ளது. அவ்வோவியம் இது :

‘நீருட்பட்ட மாரிப் பேருறை
மொக்குளன்ன பொகுட்டு விழிக்கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
தொள்ளை மன்றத் தாங்கட் படரின்
உண்கென உணரா உயவிற் றாயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகுந் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத் தீர்ந்தெனக்
குறித்து மாறெ திர்ப்பைப் பெறா அமையிற்
குரலுணங்கு விதைத் தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன் றோவிலள் - புறநானூறு 333.

(புலவர்களே, ஊரின் கண் உள்ளதும் கரியபிடர் பொருந்திய தலையும் நீண்டகாதும் உடைய குறுமுயல் ஊருக்குள் இருக்கும் குறுகிய புதர்களில் துள்ளி விளையாடும் வளைகள் பொருந்தியதும் ஆன மன்றத்துக்குச் சென்றால், அங்கே உங்களை உண்ணுங்கள் என்று குறிப்பறிந்து கூறுபவர்கள் எவரும் இல்லாத வருத்தம் உடையதாயினும், அங்கே பெரிதும் தங்கிச் செல்வீர்களாக. சென்றதனால் மனைத் தலைவி, உங்களுக்கு உணவளிக்க விரும்பி, வரகும் தினையுமாக வீட்டில் இருந்தவற்றையெல்லாம் இரவலர் உண்டதனாலும் தானமாகக் கொண்டதனாலும் தீர்ந்து போனதனால், கைமாற்றுக் கடனாகவும் பெற முடியாத நிலையில் கதிரிடத்தே

முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து உங்களை உண்ணச் செய்வாள், தனது இல்லாமையைச் சொல்லி நீங்கள் பசியோடு வெறுங்கையுடன் செல்ல விடமாட்டாள் ) என்று, தலைவியின் இயல்பு குறித்துப் புலவர் கூறுகிறார்.

“வரகும் தினையும் உள்ளவையெல்லாம்
இரவல்மாக்களுக் கீயத் தொலைந்தென”

தலைவி அவற்றைக் கைமாற்றுக் கடனாகப் பெற்றாவது பாணருக்கு உணவளிக்க நினைத்தாள். அதைப்பெற இயலாதநிலையில் “விருந்தோம்பல் ஓம்பா மடமையினும் வித்தட்டுண்டல் குற்றமன்று” எனத் தெளிவு பெற்று விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து பாணருக்கு உணவளிக்க முன் வந்தாள். விருந்தினராக வந்த பாணரைப் பசியுடன் வெறுங்கையராக அனுப்புதல் பற்றி அவள் நினைத்தும் பார்த்தாளில்லை. கண சமூகத்திற்கே உரிய பகுத்துண்ணும் பண்பே, இங்கு அச்சமூகத்தின் தலைவியான மனையாளை, விதைத்தினையைக் குற்றிச் சமைத்துப் பாணரை உண்பிக்கத் தூண்டியது என்பது மிகையன்று.

Pin It