'வாழ்வதே வேலைக்கு போவதற்காகத்தான்' என்ற பெரும்பாலான இந்தியர்களின் பொதுப் புத்திக்கு இயற்கை கட்டாய ஓய்வளித்திருக்கிறது. இப்படி 21 நாட்கள் வீட்டில் முடங்குவது என்பதெல்லாம் அவர்கள் நினைத்திடாத ஒன்று!

இரண்டு நாள் லீவு கேட்க... நாம் படும் பாடு இருக்கிறதே.. அப்பப்பா சொல்லி மாளாது. தலை சொரிய வேண்டும், குரல் கம்ம வேண்டும், மேனேஜரின் மனநிலை பார்த்து விடுப்பு சொல்ல வேண்டும். அப்படியே எடுத்தாலும் சில சமயம் லாஸ் ஆப் பே. வாங்கும் சம்பளத்தில் கை துண்டு விழும். இப்படி பல இடர்ப்பாடுகள் லீ வ் எடுப்பதில். இந்த கொரோனா வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது

chennai at coronaவேலைக்குப் போகாமல் வீட்டிலேயே ஒரு மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்றெல்லாம் இந்தியர்கள் எவரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வீடு விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு. வீட்டிற்கு வந்த பிறகும் வேலை பற்றிய சிந்தனை, அதற்கான மெனக்கெடல் என்று மிக மிகச் சாதாரணமான வாழ்க்கை இந்தியர்களுடையது.

தனது வாழ்வில் பெரும்பாலான நேரத்தையும் ஒப்பற்ற இளமையையும் வேலைக்காக சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் நம்மில் பலர் உண்டு. கூலி குறைவோ, நிறைவோ... ஆனால் திருப்தியான மனநிலையில் தொழில் மற்றும் நிறுவனம் சார்ந்த ஓர் இரத்த பிணைப்பு நம்மிடம் உண்டு.

வாழ்வதற்காக வேலைக்குச் சென்று பொருள் ஈட்டிய மனிதன், காலப்போக்கில் வேலைக்குச் செல்வதற்காக வாழத் தொடங்கினான். பணி மற்றும் பணியிடம் சார்ந்தே அவனது வசிப்பிடமும், வாழ்வியலும் அமைந்தது. வரலாறுகளின் தொடக்கத்தில் ஆற்றுப் படுகைகளில் தனது வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட மனிதன், தொழில் புரட்சிக்குப் பிந்தைய நாட்களில் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினான். தனது வசிப்பிடங்களை அங்கேயே அமைத்துக் கொண்டான்.

கிடைத்த நேரத்தில் வேட்டையாடி, கிடைத்த நேரத்தில் ஓய்வு எடுத்து, கிடைத்ததை உண்டு, ஓர் ஏகந்தமான சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த மனித இனத்திற்கு நாகரீக உலகம் முற்றுப்புள்ளி வைத்தது. பணி சார்ந்தே, அவன் எதையும் சிந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டான். விளைவு கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கமென்று திசைக்கொன்றாய் பிரிந்து வாழ வேண்டிய சூழல் இங்கு சர்வ சாதாரணம். கணவன் அயல் நாட்டில் வருடக் கணக்கில் பணி புரிய... மனைவி பிள்ளைகளோடு தனித்து வாழ வேண்டிய சூழலும் இங்கு சர்வ சாதாரணம்தான்.

விடியற்காலையில் 5 மணி ரயிலைப் பிடிக்க, 4 மணிக்கு எழுந்து அரக்க பரக்க குளித்து சோத்தைக் கட்டிக் கொண்டு, திருத்தணி உள் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து பாசஞ்சர் ரயிலைப் பிடித்து, சென்னை வந்து சேர சரியாக ஒன்பதரையாகும். வேலை முடிந்து அதே ஓட்டமும் நடையுமாக சென்டரல் ஸ்டேஷன் வந்து ரிட்டன் பாசஞ்சர் ரயிலைப் பிடித்து இடம் கிடைத்து, உட்கார்ந்து வீடு வந்து சேர இரவு 9 அல்லது பத்து பத்தரையாகும். இனி இரவு உணவு முடிந்து மனைவி பிள்ளைகளோடு அளவளாவி படுக்கையில் விழுந்து அரைகுறையாக தூங்கி, இதோ மீண்டும் மூணு மணிக்கு எழுந்து ஓட வேண்டும். 'ஏன் இந்தக் கஷ்டம் சென்னைக்கே வந்து விடலாமே ' என்று கேட்டால்... 'மனைவி உள்ளூரிலேயே ஆசிரியையாகப் பணி புரிகிறார். அதனால் வீடு மாற முடியாது' என்று ஒரு பதில் வரும்.

வெவ்வெறு ஊர் என்றில்லை, பணி நிமித்தமாக தினந்தோறும் நாடுவிட்டு நாடு எல்லை தாண்டும் மனிதர்களும் இருக்கின்றனர்.

சிங்கப்பூர் அருகில் இருக்கும் மலேஷிய நகரமான ஜோகர்பரிலிருந்து (ஜேபி) பல்லாயிரக்கணக்கான மலேஷியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) தினமும் உட்லன்ஸ் வழியாக சிங்கப்பூர் வந்து பணி புரிகின்றனர். இதற்காக பல மணி நேரம் பயணம் செய்து, தினமும் இரு நாட்டு எல்லை சோதனைச் சாவடியில் தங்களது பாஸ்போர்ட் மற்று கடவுச் சீட்டு ஆவணங்களைக் காண்பித்து குடியேற்ற ஒப்புகை பெற்று பணிக்குச் செல்கின்றனர். பின்னர் அதே நடைமுறைகளோடு பணி முடிந்து இரவு மலேஷியா திரும்புகின்றனர். பின்னர் மீண்டும் விடியற்காலையில் ஆயத்தமாகின்றனர். இப்படி திருத்தணி - சென்னை, ஜோகர்பர் - சிங்கப்பூருக்குப் பதிலாக நீங்கள் வெவ்வேறு ஊர்களைப் போட்டுக் கொள்ளலாம்.

உலகில் எல்லாமே வேலை அல்லது பணி சார்ந்தே சிந்திக்கப்படுகிறது. அதை மையமாக வைத்தே மனிதன் தனது எல்லைகளை வகுத்துக் கொண்டு நகர்கிறான். இதையே நீங்கள் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அவர்கள் வேலைக்கும், வாழ்தலுக்குமான எல்லைகளை மிக அழகாக வகுத்து இருப்பார்கள். மிக எளிதாக இரண்டு மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு உலகைச் சுற்றி வருவார்கள். இந்தியப் பணி சூழலில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

தொடக்கத்தில் 12 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை, 1942ம் ஆண்டு நடந்த 7வது தொழிலாளர்கள் மாநாட்டில் 8 மணி நேரமாகக் குறைத்து இந்தியத் தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்தார் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். இல்லையென்றால் கூடுதலாக மூன்று மணி நேரம், நாக்கு தொங்க ஓடிக் கொண்டு இருக்க வேண்டும்.

இப்படி வேலையே பிரதானம், வேலையே சாஸ்வதம் என்றிருந்த நிலையில் இயற்கையே... 'நீ வீடடங்கு' என்று ஊரடங்கு உத்திரவு போட்டிருக்கிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா ஆட் கொல்லி வைரஸ் மின்னல் வேகத்தில் மனிதர்களை பலி கொண்டு வருகிறது. சங்கிலித் தொடராய் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த, அந்த தொடர் சங்கிலியை அறுத்தெறிய வீடடங்குவதைத் தவிர வேறு மருந்தில்லை என்றாகி விட்டது.

அரசு அறிவித்த மொத்தம் 21 நாளில் இரண்டு வாரங்கள் தான் கழிந்திருக்கிறது. இன்னும் 1 வாரம் வீட்டில் இருக்க வேண்டும். இந்நிலையில் ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது இப்பொழுதே கண்ணைக் கட்டுதே என்று வீட்டில் நெளிய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தியா என்றில்லை உலக நாடுகளில் உள்ள மொத்த மக்களுமே வீடடங்கிக் கிடக்கின்றனர். வீட்டை விட்டு நேரம் காலமின்று அலைந்து கொண்டு இருந்த மனிதன், வீட்டில் அமர்ந்து மனைவி மக்கள் முகம் பார்த்துக் கிடக்கின்றான். மனிதனின் இடைவிடாத ஓட்டத்தின் மீது காலம் கொரோனாவை சொடுக்கி இருக்கிறது. வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்த மனித இனத்திற்கு 'கட்டாயமாக வீட்டில் இரு' என்று பணிக்கப்படுவதெல்லாம் கனவிலும் கிடைக்காத ஒன்று! எக்காலத்திலும் நடவாத ஒன்று ! அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்றைதான் நாம் வீடடங்கி எழுதிக் கொண்டிருகின்றோம். 'வேலையை விட நலமுடன் வாழ்தல் இனிது' என்பதை படித்துக் கொண்டு இருக்கின்றோம்.

- மகேஷ் தி காடு

Pin It