இந்த விருட்சமாய் வளர்ந்து, கிளை பரப்பி, விழுதுகள் விரித்த சாதி மரத்தின் விதை எங்கே இருக்கிறது நண்பர்களே? சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் ரத்தக் கறைபடிந்த வளாகங்களில் இருக்கிறதா? இந்தியா என்கிற ஒரு மாபெரும் தேசத்தின் சட்டமுன்வடிவங்களை நமக்கு வழங்கிய அந்த மனிதரின் பெயரை விடுத்து அச்சிடப்பட்ட சுவரொட்டிகளிலும், அழைப்பிதழ்களிலும் சிதறிக் கிடக்கிறதா? வேடிக்கை பார்த்த காவலர்களின் கைத்தடிகளில் இருக்கிறதா? புகைப்படம் எடுக்க விரைந்த ஊடகவியலரின் புகைப்படக் கருவிகளின் உள்ளே இருக்கிறதா? ஒரு மிகப்பெரும் அறிஞனை வெறும் சாதிய அடைமொழிகளில் அடக்க நினைக்கும் இளைய சமூகத்தின் வறட்டுச் சிந்தனைகளில் இருக்கிறதா? இந்த வறட்டுச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் சமூகத்திடம் இருக்கிறதா?

Caste Systemஇல்லை, நண்பர்களே, இவற்றில் எல்லாம் அது இல்லவே இல்லை.

அது ஒளிந்திருக்கும் மிகப் பாதுகாப்பான இடம் எது தெரியுமா? கொஞ்சம் அமைதியாகத் தனிமையில் அமர்ந்து உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள். வேகமாகத் துடிக்கத் துவங்கும் உங்கள் இதயத்தில் ஆழத்தில் அது ஊடுருவி இருக்கிறது, கடைசியில் அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்த என்னையும், உங்களையும் பார்த்து அது கைகொட்டிச் சிரிக்கும். திருமணங்களில், திருவிழாக்களில், தேர்தல் நேரங்களில் சாதீய உட்பிரிவுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாதீய விதைகளைப் பத்திரப்படுத்தும் நம்மைப் பார்த்துச் சிரித்தபடியே அது தன் இருப்பை உறுதி செய்யும்.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் அடித்துக் கொண்டது ஒன்றும் வேற்றுக்கிரக வாசிகளின் தூண்டுதல் இல்லை, சமூகத்தில் புரையோடிப் போன நம் அழுகிய மனநிலையின் அடிப்படை எதிரொலிதான் அது, இதுதான் காரணம், அதுதான் காரணம் என்று குறைகளைத் தேடிக்கண்டு பிடிப்பது கிடக்கட்டும், நீங்களும் நானும் உண்மையில் இந்த இழிநிலையில் இருந்து வெளியேறி வருவதற்கு, சாதியை மறுப்பதற்கு என்ன செய்தோம் என்று சிந்திக்கும் காலம் வந்து விட்டது தோழர்களே!!!!

வர்ணபேதங்களைப் பிறப்பிலிருந்து உருவாக்கிய பார்ப்பனீயம் கூட இன்று ஒடுக்கப்பட்ட சகோதரர்களின் சண்டைக்கு முன்னால் தோற்றுப் போய் விட்டது, "பாரடா உனது மானுடப்பரப்பை " என்று மனிதத்தை முழங்கிய பாவேந்தனைக் கூட இனி சாதீய அடையாளங்களில் முழுக்கித் தொலைத்து விட நாம் தயாராகி விட்டோம். கர்மவீரர் காமராஜரையே சாதிச் சட்டிக்குள் போட்டுப் புதைத்து விட்ட நமக்கு டாக்டர் அம்பேத்கர் ஒன்றும் விதி விலக்கில்லையே!!!! கற்ற கல்வியையும், பெற்ற பிள்ளைகளையும் சாதி மரத்தின் விழுதுகளுக்குள் புதைத்து விட்டுச் சலனமற்ற சமூகமாய் கரைந்து போய் விட்டோம்.

தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும், இன்றைக்கு மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்து வருவது சாதிச்சங்கங்களும், சாதீய அரசியல் என்னும் சமூகச் சீர்கேடும் தான். அழிக்கவே முடியாத நிலைக்கு வளர்த்து விடப்பட்ட சாதி அரசியல் ஒரு இருமுனைக் கத்தி போல இன்று நம்மை நோக்கி வருகிறது, அதன் முனைகளைக் கூறேற்றிய நாம் வலியையும் சுமக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். வேறு வழியே இல்லை. "சாதியை ஒழிப்போம்" என்று மேடைக்கச்சேரிகள் நடத்தும் முற்போக்கு வேடம் புனைந்த அரசியல் தலைவர்கள் கூட மறைமுகமாக தங்கள் சாதிக் கட்டமைப்பின் உறுதியைக் கட்டிக் காக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடுகிறோம் என்று இவர்கள் அடிப்படைத் தேவைகளான கல்வியையும், பொருளாதார வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளி இளைஞர்களிடையே சாதிக் கனலை அணைக்காமல் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.

தமிழர்களின் தலைவர்களாய் அடையாளம் காணப்படும் இன்றைய முன்வரிசைத் தலைவர்களான கருணாநிதி, ராமதாஸ், ஜெயலலிதா, திருமாவளவன் போன்றோரும் கூடத் தேவைப்படும்போது சாதிய அஸ்திரங்களைக் கையிலெடுத்து தங்கள் அரசியல் வளர்ச்சியைக் காப்பாற்றி கொள்வார்கள். அரசியல் அதிகாரம் மூலம் முன்னேறுவோம் என்று போலிக்கூச்சல் போடும் சாதீய அமைப்புகளின் தலைவர்கள், வசதியாக ஒன்றை மறைக்க விரும்புகிறார்கள், பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி அற்ற அரசியல் அதிகாரம் என்பது ஒருபோதும் ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சிக்குத் துணை புரியாது என்கிற அடிப்படை உண்மைதான் அது.

எல்லாவற்றையும் மீறி ஒரு புதிய தலைமுறை இன்றைக்கு அடைந்திருக்கும் சிறப்பான வெற்றிகளை, இது போன்ற கலவரங்கள் நூற்றாண்டு காலம் பின்னோக்கித் தள்ளுகிறது. பல்வேறு தளங்களில் இன்னுமும் உறுதியாய் நின்று தமிழின விடுதலையைக் கூட எள்ளி நகையாடுகின்ற பார்ப்பனீய சக்திகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

ஒரு மிகப் பெரிய சட்ட மேதையின் பெயரை நீக்கம் செய்வதற்காக உங்கள் பிள்ளைகளை, நீங்கள் சட்டம் படிக்க அனுப்பி இருப்பீர்களேயானால் பெற்றோர்களே!!!!!!! ஒரு நாட்டின் தேசியத்தலைவர் என்று அடையாளம் காணப்பட்ட மனிதரின் பெயரை சாதிச் சட்டிகளுக்குள் போட்டு அடைத்து விட்டு சட்டமேதைகளாக உங்கள் பிள்ளைகளை மாற்ற நினைக்கும் அடிப்படை மூடத்தனத்தில் இருந்து விடுபடுவதற்கும், முதிர்ச்சி பெற்ற ஒரு இனமாய் வளர்வதற்கும், நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லையானால், மனிதர்களாய் வாழ்வதற்கும் அருகதை அற்றவர்களாய் நாம் காலத்தின் முன்னாள் கூனிக் குறுகி நிற்க வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு மனிதத்தைக் கற்றுக் கொடுங்கள், பிறகு சட்டம் படிப்பதைப் பற்றி சிந்தனை செய்யலாம்.

சாதீய மரத்தின் விதை எனக்குள் இருந்து நீக்கம் பெற்று பல ஆண்டுகள் ஆகி விட்டது, நீங்கள் தேடிப் பாருங்கள், அது எங்காவது ஒரு மூலையில் உங்களுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு உங்கள் பேரப்பிள்ளைகளை கடுமையாகத் தாக்கக் கூடும்.

ஒரு ஈழக் கவிஞனின் கவிதை வரிகள் கடைசியாக எனக்கு நினைவில் வருகிறது,
"தமிழீழமென்பது அர்த்தமற்றது
தீவான், சுன்னாகத்தான்,
பள்ளன், பறையன், கரையானென்ற
உங்களின் அடைமொழிகள்
நீங்காதவரை"

நாங்கள் இங்கே ஈழத்துக்காகக் குரல் கொடுக்கும் நேரத்தில், நீங்கள் போட்ட சாதிச் சண்டை எங்களை உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைத்தது கல்லூரி மாணவர்களே.....

-
அறிவழகன் கைவல்யம்

Pin It