பணவீக்க விகிதம்

இதற்கு உதாரணமாக இந்த ஆண்டு சனவரி மாதத்தில் ஒரு கிலோ காஷ்மீர் ஆப்பிளின் விலை 180 ரூபாய் என்றிருந்ததாகக் கொள்வோம். இதே மாதம் கடந்த ஆண்டில் இதே காஷ்மீர் ஆப்பிளின் விலை 170 ருபாய் என்றிருந்ததாகக் கொண்டால், கடந்த ஆண்டை விட 10 ருபாய் விலை அதிகரித்து 5.88% உயர்ந்திருக்கிறது என்று பொருள். அதாவது இந்த விலைவாசிப் புள்ளி அல்லது பண வீக்க விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டின் குறிப்பிட்ட காலத்தின் விலைவாசி அளவைக் கொண்டு அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் விலைவாசியுடன் ஒப்பீடு செய்வதாகும். இங்கே ஆப்பிளை ஒரு புரிதலுக்காக சொல்லியுள்ளேன் உண்மையில் நூற்றுக்கணக்கான பொருள்களின் விலையின் அளவுகள் சராசரி ஒப்பீடு அளவில் விலைவாசிப் புள்ளிகள் வரையறை செய்யப்படுகின்றன.

how inflation eroded wealth in India

(Picture courtesy: http://indpaedia.com)

இன்றைய ஊடக விவாதங்கள் அல்லது பத்திரிக்கை செய்திகள் விலைவாசிப் புள்ளிகளை மேற்கோள் காட்டி பணவீக்கத்தை விவாதிக்கின்றன. 5% விலைவாசிப் புள்ளி உயர்ந்துள்ளதாகக் கொண்டால் எல்லாப் பொருள்களும் 5% உயரவில்லை என்பதுடன் ஒரு சில பொருள்கள் 10% வரை உயர்ந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அப்படியென்றால் விலைவாசிப் புள்ளி குறைந்தால் பொருள்களின் விலையும் குறையுமா அல்லது பணவீக்கம் குறையுமா என்கிற கேள்வியும் தவிர்க்க முடியாததே என்கிற நிலையில், விலைவாசி மெதுவாக ஏறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அதற்கான சரியான பதில்.

பணவாட்டம் 

உங்களின் பெயர்த்தியையையும் பேரனையும் கூட்டிக் கொண்டு ஒரு கண்காட்சி சாலைக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களின் பெயர்த்தி அங்குள்ள விளையாட்டுப் பொருள்களை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். கடைக்காரர் எடுத்து வைக்கிறார் மொத்தம் 5 விளையாட்டு பொம்மைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தலா 20 ருபாய் என்கிறார். உங்களிடம் 100 ருபாய் இருக்கிறது, வாங்கிக் கொடுக்கிறீர்கள்.

எனக்கு ஒன்றுமில்லையா தாத்தா என்கிறான் உங்களின் பேரன். உனக்கில்லாமலாடா தங்கம் என்ன வேணுமோ வாங்கிக் கொள் என்கிறீர்கள். உடனே வேறுவகையான 5 விளையாட்டுப் பொருள்களை கை காட்டுகிறான். ஆனால் இம்முறை ஒவ்வொன்றும் 40 ருபாய் என்றிருக்கிறது. உங்களிடமும் 200 ருபாய் இருக்கிறது. வாங்கி கொடுக்கிறீர்கள். இங்கே கவனிக்க வேண்டியது பணப்புழக்கமும் பணவீக்க விகிதமும் சமச்சீராக உள்ளது. எனவே உங்களால் வாங்க முடிகிறது என்றாகிறதல்லவா.

இதையே இப்படிப் பார்ப்போம். உங்களிடம் வெறும் 50 ருபாய் இருக்கிறது. பெயர்த்தியை மட்டும் அழைத்துக் கொண்டு வருகிறீர்கள். அப்பொழுது உங்கள் பெயர்த்தி தெரிவு செய்த 5 பொருள்களின் மதிப்பு முன்பிருந்த 20 ரூபாய்க்குப் பதிலாக வெறும் 10 ரூபாய் அளவில் நின்றுவிடும். மேலும் இதுதான் பணவாட்டம் என்பது. மறுதலையாக தற்போது உங்களிடம் 100 ருபாய் உள்ளது. ஆனால் இந்த முறை கடைக்காரர் இன்னும் கூடுதலாக 5 புதிய பொருள்களை கண்காட்சியில் வைத்துள்ளார். எனவே தற்போது 10 பொருள்கள் உள்ளன. எனினும், உங்களிடம் 100 ருபாய் மட்டுமே உள்ளதால் ஒவ்வொரு பொருளின் மதிப்பு மீண்டும் 10 ரூபாயில் நின்றுவிடும். இங்கே புரிந்து கொள்ள வேண்டியது பொருள்களின் உற்பத்தி தற்போது பெருகியுள்ளது. ஆனாலும் உரிய பணம் கொடுத்து வாங்கவியலாத நிலை. இதுதான் பணவாட்டம் என்க.

இங்கே இரண்டு விதமான உற்பத்திப் போட்டிகள் நிலவுகின்றன. ஒன்று அன்றாட வயிற்றுப் பசிக்காக ஓடிக் கொண்டிருக்கும் உணவுத் தேவைக்கான கூட்டம் இருக்கும் கீழை நாடுகள், மற்றும் எதார்த்த வாழ்வின் பரிபூரண பூர்த்தி நிலையை எட்டிவிட்ட அதே வேளையில் தனி மனிதனின் எல்லையற்ற மகிழ்ச்சிக்காகவும், தொடர் சாகசங்களுக்காகவும் ஓடிக் கொண்டிருக்கும் மேற்குலகு மக்களுக்காக என்று இரண்டு விதமான உற்பத்திப் பொருள்கள் தேவைப்படுகின்றன.

முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை ஒரு கிலோ பாலாடைக்கட்டி மூலம் கிடைக்கும் உபரியை விட ஒரு ரோப் கார் செய்வதன் மூலம் கிடைக்கப் பெறும் உபரியே அதிகம் என்பதால் சுற்றுலா சொகுசு கார், அழகு சாதனங்கள் என்று உற்பத்தியில் இறங்கி பணவீக்கத்தை செயற்கையாக உருவாக்குகின்றன.

ஆனால் இவை அனைத்தையும் உருவாக்குவது யார்? நிச்சயம் வேற்றுக் கிரக மனிதர்கள் இல்லை. முதலாளித்துவம் தனது வேகத்திற்கான தேடலில், அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் லாபம் ஆகியவை காரணமாக; வேலையை மிகவும் நிபுணத்துவம் வாய்ந்ததாக ஆக்கியுள்ளது அதோடன்றி அவற்றால் அசுர பலத்தில் ஓட முடிகிறது உபரியைத் தேடி என்றால் நினைத்துக் கொள்ளுங்கள், முதலாளித்துவம் ஒருபொழுதும் சாமானிய மக்களுக்கானதன்று என்பதை.

விலைவாசி அதிகரிப்பு ஏன்?

சொந்த முதலீட்டில் உருவாகும் பொருளுக்கும் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி உருவாக்கப்படும் அதே பொருளுக்குமான விலை ஒருபோதும் சமமானதன்று. எனினும், ஒருவரும் சொந்த முதலீட்டில் உற்பத்தியைத் தொடங்குவதில்லை. ஆதலால் வங்கிகளிடம் கடன் பெற்று தொடங்குகிறார்கள். எனவே நியாயமாக இருக்க வேண்டிய ஒரு உற்பத்திப் பொருளின் மீதான விலை என்பது பலமடங்காகி கனக்கிறது. அதாவது நீங்கள் வாங்கும் சோப்பு முதல் முகத்தில் பூசும் கிரீம் வரை அதை உற்பத்தி செய்த மூலப்பொருளுக்கான முதலீடு + உற்பத்தி செலவு + வரி + வங்கி கடனுக்கான வட்டி+ உபரி என எல்லாமும் சேர்த்தே மொத்த சில்லறை விலையாக கனக்கிறது என்று பொருள்.

இப்பொழுது இந்த வங்கிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? ரிசர்வு வங்கியிடமிருந்து. ரிசர்வ் வங்கிக்கு மத்திய வங்கி கொடுக்கிறது என்கிற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியிடமிருந்தே குறைந்த வட்டிக்கு பணத்தை கடனாகப் பெற்று, அதை அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, பணத்தை பலமடங்காகப் பெருக்கி இலாபம் ஈட்டுகின்றன. ஆனால் நாட்டில் உள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கவலையும் அதிகாரமும் ரிசர்வ் வங்கிக்கு இருப்பதனால், அரசின் நடவடிக்கையாகவும் நாட்டில் நிலவும் பணவீக்கத்தை சீர்படுத்தவும் வங்கிகளின் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும். இதனால் கடன் வாங்கிய வங்கிகளின் இலாபம் குறைவதால் வாடிக்கையாளர்களின் தலையில் வட்டியை உயர்த்தி கையை வைக்கும் வங்கிகள். இந்த வட்டி அப்படியே உற்பத்தி பொருள்களின் மீது பிரதிபலிப்பதால் மக்களின் வாங்கும் சக்தி குறையும்.

இந்த விதமான பணவீக்கத்தை "ஒரு நாட்டின் பண வீக்கம் என்பது ஒரு மனிதனை ஓசைப்படாமல் கொல்லும் வியாதி போன்றது” என்கிறார் மும்பையில் சி.டி. தேஷ்முக் பொருளாதார ஆய்வு மையத்தில் உரையாற்றிய முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள். மேலும் அவர் இதை ‘தோசைப் பொருளாதாரம்’ எனும் நகைச்சுவை பெயரில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

“ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் ஓட்டலில் தோசை வாங்க விரும்புகிறார். தோசை விலை 50 ரூபாய். அவருக்கு வங்கி டிபாசிட் மூலம் ஆண்டு இறுதியில் வட்டியுடன் அசல் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. ₹10 ஆயிரத்துக்கு 50 ரூபாய் வீதம் 200 தோசை வாங்கலாம். சரி, பணவீக்கத்தால் ஒரு பக்கம் அவரின் வங்கி டிபாசிட் மீதான வட்டி குறைகிறது. இன்னொரு பக்கம் தோசை விலையும் 10 சதவீதம் ஏறி விடுகிறது. விளைவு, அவரால் 10 ஆயிரம் ரூபாய் வந்தாலும் 200க்குப் பதில் 182 தோசைதான் வாங்க முடிந்தது. 

அடுத்த முறை பணவீக்க உயர்வால் அவரின் வங்கி டிபாசிட் பணம் 8 ஆயிரம் ரூபாய்தான் வந்தது; தோசை விலையே ₹57.50 ரூபாய்க்குப் போகிறது. அப்போது அவரால் முன்பை விட 40 தோசை குறைவாகவே வாங்க முடிகிறது. இப்படித் தான் ஒரு தனி மனிதனை பணவீக்கம் பாதிக்கிறது. ஒவ்வொரு துறையிலும், பொருட்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி அரிக்கிறது. இதை உயர விடாமல் பார்த்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு” என்கிறார்.

இன்னமும் தொடர்ந்து பேசுவோம் - இந்திய பொருளாதாரம்

- பார்த்திபன்.ப 

Pin It