நாம் எல்லாருமே எப்போதாவது ஒரு கணத்தில் அப்பாவாக இருக்க ஆசைப்பட்டிருக்கிறோம்.

boy wearing dad shirtநாஸ்டாலஜியா - ஒன்பது

அப்பாவின் சட்டையை அணிந்து கொண்டு, அப்பா வரும் ஏழு மணி, எட்டு மணி வாக்கிலெல்லாம் வீட்டின் முகப்பறையில் (அந்த அறை தான் வீடே) அப்பாவைப் போலவே பேசிக் காட்டி நடந்து காட்டிய நாட்களை நான் என் உண்டியலில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எனது உண்டியலில் காசு சேர்த்தேனோ இல்லையோ காலத்தை சேர்த்திருக்கிறேன். இடுப்பைத் தாண்டி, கையைத் தாண்டி தொங்கும் அப்பாவின் சட்டைக்குள் எப்போதும் ஒரு வக்கீல் இருப்பார், ஒரு டீச்சர் இருப்பார். கையை சுருட்டிக் கொண்டு ஒரு குச்சியையோ அல்லது ஒரு பேப்பரையோ சுருட்டி வைத்துக் கொண்டு சுற்றி அமர்ந்திருக்கும் தாத்தாவிடமும் பாட்டியிடமும் அப்பா பேசும் மொழிகளை அச்சு பிறழாமல் பால்ய உச்சரிப்பில் பேசிய பொழுதுகளை இப்போதும் ஏதோ ஒரு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இல்லாத மீசையை தடவிக் கொண்டு சிரிக்கையில் அப்பாவின் சின்ன வயது வெர்சனமாகி நின்றதெல்லாம் காலத்தின் பழுப்பு நிறத்தில் இன்னும் அழுத்தம் கூடுபவை.

அவ்வப்போது சமையலறைக்குச் சென்று அம்மாவிடமும் அப்பா பேசுவது போல பேசி விட்டு மீண்டும் வந்து அதிகமாய் மிடுக்காய் சேரில் அமர்ந்து கொண்டு செய்தித்தாளை விரித்து படிப்பது போல பாவ்லா செய்திருக்கிறேன். அப்பாவாக இருப்பது ஒரு பெருமிதம். அப்பாவின் தோரணையில் தான் உலகின் காட்சிகள் விரிகின்றன. நிற்கும்போது பெருவிரலை மடக்கிக் கொண்டு என்னை அறியாமலே நிற்பதுண்டு. என் பாட்டி சொல்லும், உங்கப்பன் இப்டியே தான் நிப்பான். அப்பாவின் தொடர்ச்சி தான் அவர் பிள்ளைகள்.

அப்பாவின் சட்டையில் ஓர் ஆறுதல் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அப்பாவின் சட்டையில் ஒரு வெளிச்சம் இருப்பதை அறிந்திருக்கிறேன். மார்க் குறைவாக எடுத்த நாட்களில் அப்பாவுக்கு முந்திக் கொண்டு அப்பாவின் சட்டை நம்மை முறைப்பதைக் கண்டிருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்த பின்னால் அப்பாவின் சட்டையைப் போட்டுக் கொண்டு திரிகையில் எதேச்சையாக பாக்கெட் தொட நேரிடுகையில் சட்டைப் பாக்கெட்டில் பத்து ரூபாயாவது இருக்கும். அது அவர் வேண்டுமென்றே விட்ட காசு தான் என்று பின்னால் அறிந்ததுண்டு. அப்பாவின் சட்டை அணிந்த மாலைப் பொழுதுகள் எல்லாம் நட்சத்திரங்களை பூத்துக் கொண்டே இருப்பவை.

அப்பாவை இழந்து விட்ட எத்தனையோ நண்பர்களை எனக்குத் தெரியும். கைவிடப்பட்ட கண்களை அவ்வப்போது அவர்களில் கண்டிருக்கிறேன். அப்பாக்கள் நம்மைச் சுற்றி ஒரு வளையத்தை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் இருக்கையில் நாம் உணர்ந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அப்படித்தான் இந்த பழக்க வழக்கம் நம்மை சீர் செய்திருக்கிறது. அவர்கள் இல்லாதபோது தனித்து விடப்படும் காலச் சக்கரத்தில் யாருமற்று சுழலுவது போன்ற பிரமிப்பை எல்லா நேரத்திலும் மறைக்க முடியாது.

அப்பாவின் சட்டைக்குள் அந்த நேசக் கரங்களும் பாசப் பார்வைகளும் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவை ஒரு போதும் நம்மை விட்டு அகலுவதில்லை.

அப்பாவின் சட்டைகளை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மனிதர்கள் பாக்கியவான்கள்.

- கவிஜி

Pin It